tamilnadu

img

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க அவசரச் சட்டம் பிறப்பித்திடுக!

ஆளுநருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை, ஜூலை 23- இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்கு மாறு தமிழக ஆளுநரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. இதனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இழந்தனர். இந்த பின்னணியில்தான் தமிழக அரசு, அரசுப் பள்ளியில் பயின்ற  மாணவர்களுக்கு இளநிலைபடிப்பில் 7.5சதவீதம் இடங் களை ஒதுக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. 

தற்போது மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தங்களுக்கு சட்டப்பூர்வமாக பலன் கிடைக்கும் என்று அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எதிர்பார்க்கின்ற னர். தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாத நிலையில் தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பதற்றமும், மனஅழுத்தமும் அடைந்துள்ள மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க உள்ள ஒரே வழி இந்த ஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிப்பது ஒன்றுதான். எனவே முதல்வர் தலைமையில் கூடிய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

;