tamilnadu

img

இலவச மின்சாரத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் வழங்கப்படுவதனால் தொடர்ந்து விவசாயம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் உழைத்து உணவு தானியங்கள், காய்கறிகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வழங்கினர். உலகம் முழுவதும் அரசின் ஆதரவு இன்றி விவசாயம் செய்திட முடியாது என்கிற சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் சில மாநிலங்கள் விவசாயத்துக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு பறிப்பதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு மத்திய அரசை கெஞ்சிக் கொண்டு இருக்காமல் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்று வற்புறுத்த வேண்டும். மத்திய அரசு சட்ட மசோதா 2020 ரத்து செய்திடக் கோரி அனைத்து விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

30 ஆண்டுகளாக...
தமிழகத்தில் விவசாயிகளின் வலுமிக்க போராட்டத்தின் பலனாக பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என 1990ல் மாநில அரசு அறிவித்தது. நாட்டிலேயே விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழகம் தான். இதைத் தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று தெலுங்கானா உட்பட ஐந்து மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சார திட்டம் அமலில் உள்ளது. தமிழ்நாடு 21.17 லட்சம், தெலுங்கானா 24 லட்சம், கர்நாடகா 26 லட்சம், பஞ்சாப் 14.16 லட்சம், ஆந்திரா 17.85 லட்சம் என ஐந்து மாநிலங்களில் 1 கோடியே 3 லட்சம்  விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளாக விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

பெரும் உதவி
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போன நிலையில் ஆழ்குழாய்கள் அமைத்து தொடர்ந்து சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெரும் உதவியாக இருக்கிறது. இலவச மின்சாரம் இல்லை என்றால் லட்சக்கணக்கானோர் விவசாயத்தை விட்டு வெளியேறிடும் நிலைமை ஏற்படும்.

நிறுத்தும் சதி
2003 மின்சார சட்டத்திற்கு தற்போது மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்தம் - 2020 விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் எதிராகவும் தனியார் துறைக்கு ஆதரவாகவும் உள்ளது. மாநிலங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு நேரடியாக பணமாக தருமாறு கூறப்பட்டுள்ளது. Direct Benefit of Transfer டிசம்பர் 31- 2020க்குள் ஒரு மாவட்டத்திலாவது நேரடியாக பணம் தரும் திட்டத்தை (DBOT) செயல்படுத்துமாறும், ஜூன்-2021க்குள் மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுதான்.

11 லட்சம் குடிசை வீடுகளில்...
புதிய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வரும் பாஜக மத்திய அரசின் தனியார் மயக்கொள்கைகளின் பகுதியாகத்தான் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ அறிவித்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதோடு, நாட்டின் பல மாநிலங்களில் ஏழை மக்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விடுவார்கள். தமிழ்நாட்டில் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளுக்கும் நூறு யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் மாதம் 30 யூனிட் மின்சாரம் ஏழை மக்களுக்கு இலவசமாக தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஏழை மக்களின் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் தருகிறார்கள் இதற்காக ஆண்டுக்கு ரூ.1623 கோடியை பஞ்சாப் அரசு மின்வாரியத்துக்கு கட்டுகிறது. மத்தியப் பிரதேசத்தில் வீடுகளுக்கு நூறு யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார்கள். 1 கோடியே ஐயாயிரம் ஏழை குடும்பங்கள் பயன் பெறுகின்றன. ம.பி.யில் மாதம் முப்பது யூனிட் அளவில் மின்சாரம் பயன்படுத்தும் எஸ்.சி/எஸ்.டி மக்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நூறு ரூபாய் கட்டினால் போதும் என்று உள்ளது. தில்லியில் ஏழை மக்களின் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களும் ஏழை மக்களின் வீடுகளுக்கு மாதம் நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக மின்துறை அமைச்சர் கூறினார். ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிடுவார்கள் புதியதாக இலவசமாக மின்சாரத்தை வழங்கவும் முடியாமல் போய்விடும்.

தனியார் மயமாகும் மின் வினியோகம்
ஏற்கனவே மின்சார உற்பத்தியில் தனியார் வலுவாக கால் பதித்து வருகின்றனர். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் தனியார் 52 சதவீதத்தை உற்பத்தி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் உற்பத்தி திறன் 18732.78 மெகாவாட் ஆக உள்ளது. ஒரு நாளைய மின் தேவை 16000 முதல் 17000 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. தமிழக மின் உற்பத்தியில் 7 சதவீதம் வரை தான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மின்சாரப் பயன்பாடு குறைகிற போது பொதுத்துறை மின் உற்பத்தியைத்தான் நிறுத்துவார்கள். தனியார் மீது கை வைக்கமாட்டார்கள். உதாரணத்திற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரப் பயன்பாடு குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் பயன்பாடு 7300 முதல் 7700 மெகாவாட்டும், மே மாதத்தில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 9000 மெகாவாட் மின்சாரமும் நுகர்வு இருந்தது. இக்காலத்தில் பொதுத்துறை மின் உற்பத்தியை நிறுத்தி வைத்து ஒரு நாளைக்கு 5000 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினார்கள்.தற்போதைய மின்சார திருத்த சட்டத்தின் மூலம் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்து விட உள்ளனர். ஜம்மு - காஷ்மீர், தில்லி, புதுச்சேரி உட்பட 9 யூனியன் பிரதேசங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் முழுக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அடுத்து நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மின் வினியோகத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்து விடுவார்கள். 

நெசவுத் தொழில் பாதிக்கும்
தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகளும், 4.5 லட்சத்திற்கும் மேல் கைத்தறிகளும் உள்ளன. கைத்தறிக் கூடத்திற்கு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டும், விசைத்தறிக் கூடத்திற்கு 1.62 லட்சம் இணைப்புகளுக்கு 2 மாதங்களுக்கு தலா 750 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் பல லட்சம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். கைத்தறி, விசைத்தறி, கூடங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விடுவார்கள்.பஞ்சாப் மாநிலம் நெசவு மற்றும் குறு தொழில்களுக்கு இலவச மின்சாரம் தருகிறார்கள். இதற்காக 1990 கோடி மின்வாரியத்திற்கு செலுத்துகிறார்கள். இதுபோல் வேறு சில மாநிலங்களிலும் உள்ளது இவையும் ரத்தாகும்.

இலவச இணைப்பு தராத தமிழக அரசு
தமிழகத்தில் 2010 முதல் கடந்த பத்தாண்டுகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கிறார்கள். மாநில அரசு இவர்களுக்கு இலவச மின் இணைப்பு தரவில்லை. மாறாக தக்கல் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு தான் சில ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மின் மோட்டார்களுக்கு குதிரைத் திறனுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் விவசாயிகள் கட்ட வேண்டும் என்று 11.5.2020 அன்று மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகள் கொந்தளிப்பு
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதா 2020 ரத்து செய்திட வேண்டும் என்று தமிழ்நாட்டில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மே 27 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மே 30,31 தேதிகளில் மண்டல வாரியாக விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ஜூன் 1 கறுப்பு தினமாக கடைபிடித்தனர். ஆந்திரா, தெலுங்கானா, மாநிலங்களிலும் போராட்ட தயாரிப்புகள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31.5.2020 அன்று நடைபெற்ற அனைத்து காணொலி காட்சியின் மூலம் நடைபெற்ற அனைத்து தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்த 2020யை ரத்து செய்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

===டி.ரவீந்திரன்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.

;