tamilnadu

img

கண்ணோட்டம் : தப்பித்து ஓடியவர்களும் தப்பிக்க முடியாதவர்களும்

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெருந்தொகையை வாங்கி ஏப்பம்விட்ட வைர வியாபாரி நீரவ் மோடி தப்பி ஓடி தற்போது லண்டனில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கப்பட்டது.இதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த நீரவ் மோடி மும்பை சிறையில் எலி மற்றும் பூச்சிகள் தொல்லை இருக்கும் என்பதால் தம்மை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்று கூறியதோடு எலி, பூச்சிகள் உள்ள சிறைச்சாலையின் வீடியோவையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், தன்னை அடைக்க உள்ளதாக கூறப்படும் மும்பை சிறையில் எலி பூச்சித்தொல்லை இருப்பதோடு அருகில் மூடப்படாத சாக்கடை இருக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள குடிசைகளிலிருந்து வரும் இரைச்சல் ஆகியவற்றால் தன்னுடைய மனித உரிமை பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, சிறையில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்படும். எலி, பூச்சித் தொல்லை எதுவும் இருக்காது. 20 அடி உயர சுவர் உள்ளதால் இரைச்சல் எதுவும் கேட்காது என்று பவ்வியமாக பதிலளித்துள்ளது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட இங்கிலாந்து நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. நீரவ் மோடியின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று மட்டும் கூறியுள்ளது.

அண்மையில் மோடி அரசு 50 தொழிலதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தது. பாஜகவினரின் பாஷையில் கூறுவதானால் தள்ளிவைத்தது. இதில் நீரவ்மோடி தொடர்புடைய ரூ.1,962 கோடியும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து நீரவ் மோடி கடன்பெற்று ஏப்பம் விட்ட தொகை ரூ.13ஆயிரம் கோடி ஆகும். இதேபோல பெருந்தொகையை ஏப்பம்விட்ட விஜய் மல்லையாவும் தற்போது தப்பி ஓடி வெளிநாட்டில்தான் இருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்ட 20 லட்சம் கோடி நிவாரணத் திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார். மேலும் தம்மையும் தம்முடைய நிறுவனங்களையும் இயங்க அனுமதித்தால் மொத்தக் கடனையும் அடைத்துவிடுவதாகவும் நெருக்கடியில் உள்ள அரசுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். நூறு சதவீதக் கடனையும் அடைத்துவிடுகிறேன்; என்னுடைய வழக்குகளை கைவிட்டுவிடுங்கள் என்று அவர் கேட்டிருக்கிறார். இவருடைய கடன்தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவரும் தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறார். இவர் பொதுத்துறை வங்கிகளில் கடனாகப் பெற்று செரித்த தொகை ரூ.6ஆயிரம் கோடி மட்டுமே. 

இந்திய சிறைகளில் போதிய வசதி இருக்காது என்று இவரும் மனு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு. இவர் சிறையில் அடைக்கப்பட்டால் இவருக்காக மேற்கத்திய பாணி கழிவறை தயாராக இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அந்த வீடியோவையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற பழமொழி இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. கடன் வாங்கி சுட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது இவர்கள் உருவாக்கிய புதுமொழி. 

இந்த வழக்குகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கொரோனா மற்றும் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் போதிய போக்குவரத்து வசதி இன்றி கால்நடையாக நாட்டின் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். பெற்ற தாயையும் மனைவியையும், குழந்தைகளையும் தங்கள் செல்லப்பிராணிகளையும் கூட சுமந்துகொண்டு இவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தினந்தோறும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.ரயில் மோதி சாகிறார்கள். கண்டெயினருக்குள் புதைந்து சென்று மூச்சுதிணறி சாகிறார்கள். லாரி மோதி சாகிறார்கள். வெயிலில் சுருண்டுவிழுந்து சாகிறார்கள். இது ஒரு சாதாரண செய்தியாக மட்டுமே மேன்மக்களால் பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அலோக் ஸ்ரீவத்சவா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இவர்களுக்கு குறைந்தபட்சம் உணவு, குடிநீர், தங்கும் வசதி செய்துதர மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் யார், நடந்துசெல்லாதவர்கள் யார் என்று கண்காணிப்பது உச்சநீதிமன்றத்திற்கு சாத்தியமற்றது. இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது அரசுகள்தான், இதுபற்றி விசாரிக்கவோ முடிவெடுக்கவோ உச்சநீதிமன்றத்திற்கு என்ன இருக்கிறது என்று கிடுக்குப்பிடி போட்டுள்ளனர். மேலும் தண்டவாளத்தின்மீது படுத்து உறங்கினால் இதுபோன்ற விபத்துக்களை எப்படி தடுக்கமுடியும் என்றும் காருண்யத்தோடு வினா எழுப்பியுள்ளனர்.

மேலும் உங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை தருகிறோம். அதை வைத்து அரசு உத்தரவுகளை உங்களால் அமல்படுத்த முடியுமா என்று வழக்கு போட்டவர் வாயை அடைத்ததோடு, வழக்கையும் தள்ளுபடி செய்து வழிகாட்டியுள்ளனர்.முன்னதாக வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி தொடங்கியுள்ளது. பொறுமையில்லாமல் நடந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று கூறியுள்ளார். மொத்தத்தில் பொறுமையில்லாமல் நடந்துசெல்பவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பித்துவிட்டார்கள் என்பதே இந்த வழக்கின் சாராம்சம்.
வானமே கூரையாய், சாலையே வீடாய் நடந்து செல்லும் இந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் யாரும் கடன்வாங்கி ஏமாற்றியவர்கள் அல்ல. தங்கள் உதிரத்தை உழைப்பாக்கிக் கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வழியின்றி நடந்து கொண்டிருப்பவர்கள். இவர்களை எலி கடித்தால் என்ன? பூச்சி கடித்தால் என்ன? அதையெல்லாம் கண்காணிக்க முடியுமா?

;