tamilnadu

img

பலி பீடத்தில் தேசத்தின் பாதுகாப்பு -ஆர்.பத்ரி

அண்மையில் ஆரவாரத்தோடும், பெரும் விளம்பரங்களோடும் “ விஜய் திவாஸ் ” என கார்கில் வெற்றி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தேசப்பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் நாங்களே என மார்தட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். வெளிப்படுத்தக் கூடாத ராணுவ ரகசியங்களையும் நாள்தோறும் விளம்பரப்படுத்தி குதூகலம் அடைகிறார்கள். எல்லைத் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதில் முன்னேறி வருகிறோம் என நம்பிக்கை அளிக்கிறார்கள்.  தேசப்பாதுகாப்பில் அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் வரவேற்கிறோம். ஏனெனில் நாமும் தேசபக்தர்களே. ஆனால் இத்தகைய சாதனைகளை செய்வதாக சொல்கிற மத்திய அரசு சத்தமில்லாமல் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் ஒரு காரியத்தையும் செய்திருக்கிறது.. அதையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது தேசத்தின் மீது அக்கறை கொண்ட நமது கடமையாகிறது அல்லவா.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசு அடுத்த நூறு நாட்களில் அமலாக்க வேண்டிய திட்டங்கள் என ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. அதில் தான் இந்த ஆபத்தான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.  இதுவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் மற்றும் ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை ஒரே கார்ப்பரேஷனாக மாற்றுவது என முடிவை எடுத்துள்ளது. உள்நாட்டின் பாதுகாப்பிற்கும், நமது முப்படைகளுக்கும் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும், உதிரி பாகங்களையும் தயாரித்து அளித்து வரும் இத்தகைய கேந்திர தொழிற்சாலைகளைத்தான் படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கிறது மத்திய அரசு. பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளை என்பது ஏதோ இதர தொழிற்சாலைகளை போன்றதல்ல. இந்தியா இதுவரை ஐந்து போர்களை சந்தித்திருக்கிறது. இந்த போர்களில் வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருந்தது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தளவாட தொழிற்சாலைகளே. காலாட்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றை முப்படைகள் என அழைக்கிறோம் எனில் இந்த தொழிற்சாலைகளே நான்காம் படையாகும். முப்படைகளுக்கு இணையாக தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்த தொழிற்சாலைகளை கைவிடுவது என்ற மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியுமா. விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ் காலனியாக இந்தியாக இருந்த போதிலும் கூட இந்த தொழிற்சாலைகளை அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஒவ்வொரு தொழிற்சாலையும் நூறாண்டு பழமையானதாகும்.
தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும் என ஒட்டு மொத்த தேசமும் உழைத்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 41 தொழிற்சாலைகளுக்கு சுமார் 60,000 ஏக்கர் அளவிலான விளை நிலங்களை வழங்கியுள்ளனர் நமது விவசாயிகள். இதோடு சேர்ந்து இந்த தொழிற்சாலைகளின் மொத்த நிலங்கள் சுமார் ஒரு லட்சம் ஏக்கராகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 கோடி அளவிலான உற்பத்தி சாதனங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக தயாரித்து வழங்குகின்றன இந்நிறுவனங்கள். எனவே இவை தேசத்தின் சொத்துகளாகும். இவற்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஒரு கார்ப்பரேஷனாக மாற்றுவது, பின்பு படிப்படியாக தனியார் மயப்படுத்துவது என்ற அரசின் கொள்கை முடிவை எந்தவொரு தேசபக்தனும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லைப்பதற்றம், போர் ஆகிய காலங்களில் அரசுத்துறை நிறுவனங்கள் தான் பாதுகாப்பானது என்பதற்கு கார்கில் போரே நல்ல உதாரணமாகும். கார்கில் போரின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு பகலாக பணியாற்றிய ஊழியர்கள் படைகளுக்கு தேவையான அனைத்து தளவாடங்களையும், ஆயுதங்களையும் உடனுக்குடன் தயாரித்து வழங்கினர். ஆனால் 129 ஒப்பந்தங்களின் படி தனியாரிடம் கோரப்பட்ட சுமார் 2175 கோடி மதிப்பிலான பொருட்களோ போர் முடிந்த ஆறு மாதங்களுக்கு பிறகே கிடைத்ததாக மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை சொல்கிறது. அண்மையில் வெளியான ரஃபேல் – ரிலையன்ஸ் டிபென்ஸ் விவகாரத்தையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ளுங்கள். தேசப்பாதுகாப்பில் கார்ப்பரேஷன் என்பதோ அல்லது தனியார் மயம் என்பது மிகவும் ஆபத்தானதாகும். எனவே தான் இத்தகைய பாதகமான முடிவை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 80,000 தொழிலாளர்களும், சுமார் 40,000 ஒப்பந்த ஊழியர்களுமாக ஒரு லட்சம் பேர் இன்று முதல் ஒரு மாத காலம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.. இந்த போராட்டத்தை அனைத்து வகையிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.  இந்த போராட்டங்களில் ஏதேனும் ஒரு வகையில் நாம் பங்கு பெற்றால் நாமும் தேசபக்தர்களே. போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்தாலோ அல்லது போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலோ. அவர்களே Anti Indian கள்..

;