states

img

நிபா நோய் தொற்றின் மூலத்தைக் கண்டறிய முயற்சி : அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்....

கோழிக்கோடு:
நிபாவால் இறந்துவிட்ட 12 வயது சிறுவனின் தொடர்பு பட்டியலில் அதிக நபர்கள் இருக்க வேண்டும் என்றும், நோயின் மூலத்தை கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குழந்தையுடன் தொடர்பு கொண்ட ஏழு பேரின் மாதிரிகள் புனே வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சர் கூறினார். அவற்றின் முடிவுகள் திங்களன்று மாலை தெரியவரும் எனவும் அமைச்சர் கூறினார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் வீணா ஜார்ஜ் மேலும் கூறுகையில், ஞாயிறன்று, 188 தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார்.அவர்களில் 20 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கேள்வித்தாளுடன் வீடுகளுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனுக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.குழந்தையின் வீட்டில் இருந்த ஆடு இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. நிபா நோய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் கூறினார். தற்போது குழந்தையின் தாய்க்கு காய்ச்சல் உள்ளது. சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது காய்ச்சல் இருந்துள் ளது. சாத்தமங்கலத்தில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கண்காணிக்கவும் பிற விஷயங்களைக் கண்காணிக்கவும் அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள் என்றும் வீணா ஜார்ஜ் கூறினார்.நிபா வைரஸ் கண்டறியப்பட்ட சாத்தமங்கலம் பஞ்சாயத்து மற்றும் சுற்றுப் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கம் நகராட்சியில் 3 கிமீ சுற்றளவும் கொடியத்தூர் பஞ்சாயத்தில் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளும் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பகுதிகளில் கடைகள் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரைதிறந்திருக்கும்.

கோழிக்கோட்டில் வைராலஜி ஆய்வகம்
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைராலஜி ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று புனே வைராலஜி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. நிபா சிகிச்சையால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்ற சிகிச்சைகள் பாதிக்காது. மேலும் சுகாதார ஊழியர்களை மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

;