states

img

ரூ.77 கோடிக்கு பிஎச்இஎல் - இஎம்எல் நிறுவனத்தை கையகப்படுத்திய கேரள அரசு..... மோடி அரசின் தனியார்மய முயற்சியை தடுத்து நிறுத்தியது...

திருவனந்தபுரம்:
நஷ்டத்தைக் காரணம் காட்டி, காசர்கோடுபெல்-இஎம்எல் (BHEL-EML) நிறுவனத்தை, ஒன்றிய பாஜக அரசு தனியார் பெருமுதலாளிகளுக்கு விற்பதற்கு முயற்சித்து வந்த நிலையில், அதனை கேரள அரசே ஏற்று நடத்தும்என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இதற்காக ரூ. 77 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.காசர்கோட்டில் கேரள அரசுக்கு சொந்தமான கேரள மின் மற்றும் இணை பொறியியல் நிறுவனத்தின் (Kerala Electrical & Allied Engineering Co. Ltd - KEL) ஒரு பகுதி, 2010-இல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், பிஎச்இஎல் நிறுவனம் 51 சதவிகித பங்குகளையும், கேரள அரசு 49 சதவிகித பங்குகளையும் கொண்டிருந்ததால், பெல்-இஎம்எல் (BHEL Electrical Machines Ltd -BHEL-EML) என்ற மாநில மற்றும் ஒன்றிய அரசின் புதிய கூட்டு நிறுவனமாக மாற்றப்பட்டது.

கேரள அரசின் மின் மற்றும் இணை பொறியியல் நிறுவனமாக (KEL) இருந்த காலத்தில். இந்த அலகின் செயல்பாடு பவர் கார் ஆல்டர்னேட்டர் மற்றும் ரயில் லைட்டிங் ஆல்டர்னேட்டர் தயாரித்தல் மற்றும் விற்பனையும், அத்துடன் டீசல் ஜெனரேட்டர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் விற்பனையும் நடைபெற்றது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎச்இஎல் தலைமையிலான புதிய நிறுவனம் மேலும் பன்முகப்படுத்தலை மேற்கொள்ள முயன்றது. ஆனால், நவரத்னா நிறுவனமான பிஎச்இஎல்-க்கு இந்த புதிய நிறுவனத்தின் இலக்கை அடைய முடியவில்லை.

கேரள அரசு நிறுவனமான கெல்லின் கீழ் லாபகரமாக இயங்கி வந்த இந்த அலகு, பிஎச்இஎல்கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இதனைகே காரணமாக காட்டி, காசர்கோடு பிஎச்இஎல்-இஎம்எல் உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.இதையடுத்து, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு,  பொதுத்துறை துறையை பாதுகாக்கும் தங்களது நடவடிக்கையின் ஒருபகுதியாக, பிஎச்இஎல்-இஎம்எல் நிறுவனத்தை மாநிலஅரசே ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது.அதனடிப்படையல், இந்த நிறுவனத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ரூ. 43 கோடி, கடந்த காலத்தில் நிறுவனத்தால் ஏற்பட்ட இழப்பு ரூ. 34 கோடி என கேரள அரசு இந்த பொதுத்துறை நிறுவனத்தை ரூ. 77 கோடி செலவழித்து கையகப்படுத்துகிறது. 

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின்இந்த நடவடிக்கை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அல்லது சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் ஊழியர்களின் ரூ. 14 கோடி சம்பள நிலுவைத் தொகைப் பிரச்சனையும் முடிவுக்கு வருகிறது. அதற்கும் சேர்த்து கேரள அரசு தற்போதுநிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.கேரள அரசு இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள இயந்திரங்களுடன் அதிநவீன உபகரணங்களுடன் தொழிற்சாலையை சீரமைத்தல், இழுவை மோட்டார்கள், கட்டுப்படுத்திகள், மின்மாற்றிகள், ரயில்வேக்கான டிராக்சன் ஆல்டர்னேட்டர்கள், மோட்டார்கள் பாதுகாப்புக்கான சிறப்பு மாற்று ஆல்டர்னேட்டர்கள் மற்றும் மின் துறைக்கான தெருவிளக்கு கட்டுப்பாட்டு கருவிகள் உற்பத்தியில் ஒரு மாதிரி பொதுத்துறை நிறுவனமாக இதனை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.திருவனந்தபுரம் விமான நிலையம், பாலக்காடு இன்ஸ்ட்ரூமென்ட், பிபிசிஎல், வேலூர் எச்என்எல் விசயத்தில் மத்திய அரசுமேற்கொண்ட தனியார்மயமாக்கல் மற்றும் விற்பனை கொள்கை அனைவரும் அறிந்ததேஆகும். எச்என்எல் நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் கோரிக்கையை ஏற்கக் கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை. எனினும், ஏலத்தில் பங்கேற்று கேரள அரசுஅந்த நிறுவனத்தை வாங்கியது. பொதுத்துறை துறையை நவீனப்படுத்தி பாதுகாப்பதன் மூலம் கேரளத்தை தொழில் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் லட்சியத்தை இடதுஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டுள்ளது.

;