india

img

செங்கோட்டையில் கொடியேற்றிய தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்!

புதுதில்லி, பிப்.03-
தில்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர்.
இப்பேரணி, அனுமதி வழங்கப்பட்ட பாதையில் அமைதியாக சென்றுகொண்டிருந்தது. திடீரென பேரணியை சீர்குலைக்கும் விதமாக சங்பரிவார் ஆதரவு கும்பல், பேரணியின் பாதையிலிருந்து விலகி செங்கோட்டை நோக்கிச் சென்றனர். இதனால் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் விவசாயிகள் மற்றும் காவலர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வன்முறையின்போது, பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடியை ஏற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்துவை தேடி வரும் காவல்துறையினர், தீப் சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு  ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும், வன்முறையில் ஈடுபட்ட ஜெய்பீர் சிங், புட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்  வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சன்னி தியோலுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படமும் வெளியானது.
முன்னதாக, தீப் சித்து பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்று விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என தில்லி காவல்துறை அறிவித்துள்ளது, பாஜகவும் அமித்ஷாவின் காவல்துறையும் இணைந்து நடத்தும் நாடகம் என்றே பலரும் விமர்சித்து வழன்றனர்.

;