india

img

போராடும் மாணவர்களுக்கு எதிராக பாஜகவினர் உருவாக்கிய போலி வீடியோ அம்பலம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலி வீடியோ ஒன்றை பாஜகவினர் உருவாக்கி பரப்பி வருவது அம்பலமாகி உள்ளது. 

மத்திய பாஜக அரசு, கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிடுவது போன்ற வீடியோ ஒன்றை டிவிட்டரில் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். அதில் ”இந்துக்களின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும்” என்று அப்பல்கலைக்கழக மாணவர்கள் கோஷமிடுவது போன்று காட்டப்பட்டுள்ளது.  

இந்த வீடியோவை பாஜக யுவ மோர்சா துணைத்தலைவர் சந்தோஷ் ராஜன் ராய், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதனோடு, இந்துக்களின் கல்லறை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும் என்பதை நாம் இந்தியாவில் கேட்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், இந்த வீடியோவை பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் அமித் மால்வியா, பாஜக தில்லி செய்தித்தொடர்பாளர் தஜிந்தர் பாகா, பாஜக உ.பி செய்தித்தொடர்பாளர் சாலாப் மணி திரிபதி, சிவ சேனாவை சேர்ந்த ரமேஷ் சொலாங்கி உள்ளிட்ட 900 பேர் இந்த பதிவை டுவிட் செய்துள்ளனர்.

ஆனால் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தபோது, இந்த வீடியோவின் மிக தெளிவான ஆடியோவுடன், ஆல்ட் நியூஸ் என்ற டிவிட்டர் பக்கத்தில்,  கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவர்கள், இந்துத்துவம், சவார்கர், பாஜக, பார்ப்பனியம், சாதியம் ஆகியவற்றுக்கு எதிராக மட்டுமே கோஷம் எழுப்புகின்றனர். உண்மையில் அந்த வீடியோவில், ”இந்துத்துவத்தின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும், சவார்கரின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும், பாஜகவின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும், பார்ப்பனியத்தின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும், சாதியத்தின் கல்லறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மார்பில் தோண்டப்படும்” என்றே மாணவர்கள் கோஷம் எழுப்புகின்றனர். மேலும், இந்த வீடியோவை பாஜகவினர் எடிட் செய்து ஆடியோ தரத்தை குறைத்து பதிவிட்டதும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்களை இந்து எதிர்ப்பாளர்கள் என பொய்யாக தகவலை பரப்பியதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
 
 

;