india

img

மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்களில் 36% பேர் மீது குற்ற வழக்குகள்! - ஏ.டி.ஆர் அறிக்கை

மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 59 வேட்புமனுக்களில் 58 வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் ஜி.சி.சந்திரசேகரின் ஆவணங்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படாத காரணத்தால் அவரது வேட்புமனுவை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், 58 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பும் (ஏ.டி.ஆர்),  தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்தது. 
அதன் படி, மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 36 சதவிகிதத்தில், 17 சதவிகிதம் பேர் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகளும், பாஜக-வை சேர்ந்த ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளன.
அதிகபட்சமாக பாஜக வேட்பாளர்கள் 8 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் 6 பேர் மீதும், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் மீதும், திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆர்ஜேடி, பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகளில் தலா ஒருவர் மீதும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் மாநிலங்களவை வேட்பாளர்களின் சொத்து விவரங்களும், கல்வித் தகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 21% பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.127.81 கோடி உள்ளது. மொத்த வேட்பாளர்களில் 17% பேர் 5வது முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். 79% பேர் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பையோ முடித்துள்ளனர்.


 

;