india

img

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால் பள்ளிகள் திறப்பில் நிதானமாக செயல்படுங்கள்.... அரசுகளுக்கு எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுறுத்தல்....

புதுதில்லி:
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாததால் பள்ளிகள் திறப்பில் நிதானமாக செயல்பட வேண்டும் என்று ஒன்றிய- மாநில அரசுகளுக்கு எய்ம்ஸ் பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.   தற்போது பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.இந்நிலையில் கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் என்பவர்  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “பள்ளி மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.  தவிர போக்குவரத்து, வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் அறைக்குள் இருக்கும் சூழலில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது  மேலும் அடுத்த 2 மாதங்களில் பண்டிகைக்காலம் வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.எனவே பள்ளிகள் திறப்பில் ஒன்றிய -மாநில அரசுகள் நிதானம் காட்ட  வேண்டும்.  பள்ளிகள் திறப்பு பற்றிய நன்மை, தீமைகளை அளவிட வேண்டியது அவசியம்.  குழந்தைகள் வீட்டிலேயே இருந்து சலிப்பு ஏற்பட்டு இருக்கும்.  எனினும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் அறிவது முக்கியம் .பள்ளிக்கு சென்றாலும், அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தனிநபர்களாகவே நடத்த வேண்டும்.  அவர்களது உடல் மற்றும் மனநலம் காக்கப்பட வேண்டும்.  தொற்று விகிதம் 0.5 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது என உறுதி செய்யப்பட வேண்டும்.பள்ளிகளில் சுவாச சுகாதாரம், தூய்மை, முக கவசங்கள் ஆகியவை உள்ளன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.  நம்முடைய குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;