india

img

குழந்தைகளை வணிகப் பொருளாக மாற்றிவிடாதீர்... குடும்பத்தின் மதிப்பைக் காட்டும் ஒன்றல்ல திருமணம்.... பொதுமக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்...

திருவனந்தபுரம்:
வரதட்சணையின் பெயரால் திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் வணிக ஒப்பந்தமாக தரம் தாழ்த்திவிடக்கூடாது என்று பொதுமக்களுக்கு கேரளமுதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள வரதட்சணை கொலைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து முதல்வர் கூறியதாவது: 

வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் சமூகத்தில் விவாதிக்கப்படுகின்றன. நாட்டில்சட்டத்தால் வரதட்சணை தடை செய்யப்பட்டுஅறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும்வரதட்சணை பல வடிவங்களிலும் அளவுகளிலும் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. இது மிகவும் கடுமையான சமூக பேரழிவு. எனவே, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைகளை நம்மால் தடுத்து நிறுத்துவது சாத்தியமாக வேண்டும். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கணவனின் குடும்பமாக இருந்தாலும், மனைவியின் குடும்பமாக இருந்தாலும் பாரபட்சமின்றி சமரசமற்ற நிலைப்பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக மனதில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது. வரதட்சணை கேட்டபோது அந்ததிருமணம் எனக்கு வேண்டாம் என்று கூறியபெண்களை சமூகத்தின் முன் பார்த்தோம்.குடும்பத்தின் தரத்தையும் மதிப்பையும் காட்டுவதற்கான ஒன்றல்ல திருமணமும் அதுதொடர்பான நிகழ்வுகளும். மணப்பெண்ணு க்கு என்ன கொடுக்கப்படுகிறது, எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்பது குடும்ப மகத்துவத்தின் அளவீடாக இருக்கக்கூடாது. அவ்வாறு நினைப்பவர்கள் தங்கள் குழந்தைகளை வணிகப் பொருட்களாக மாற்றுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதே நேரத்தில், மணமகன்களும் அவர்களது பெற்றோர்களும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களும் உள்ளன. படிப்பை அடிப்படையாக கொண்டு வேலை தேடுவது போன்ற கணக்கீடுகள் திருமணத்திற்கான அடிப்படையாக கருதக்கூடாது. திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் அப்படி வணிக ஒப்பந்ததமாக தரம் தாழ்த்திவிடக் கூடாது. வீட்டுக்குள் நடக்கும் விவாதங்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து ஏதேனும்வெகுமதி பெறுவது தங்களின் உரிமைஎன்கிற எண்ணத்தை ஆண் பிள்ளை களுக்கு ஏற்படுத்தக்கூடாது. கணவன் வீட்டில்உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் அனைத்தையும் ஒரு மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை பெண்பிள்ளைகளின் மனதில் திணிக்கப்படக் கூடாது. இரண்டுமே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள். தேவைப்படுவது ஆதிக்கம் அல்ல, ஒத்துழைப்பு. மனைவியை அடிப்பது ஆண்மை என்றும் மன்னிப்பதும் சகித்துக்கொள்வதும் பெண்மையின் அடையாளம் என்றும் நினைக்க வேண்டாம். இதுபோன்ற தவறான கருத்துக்களை நம் குழந்தைகளிடம் செலுத்தக் கூடாது.

நமது சமுதாயத்திற்கு பாலின சமத்துவம் குறித்த புதிய கருத்துக்கள் தேவைப்படும் காலம் இது. பாடத்திட்டத்தில் பொருத்தமான பாடங்களைச் சேர்ப்பது உள்ளிட்ட விசயங்களை அரசாங்கம் ஆராயும். நவீன சமுதாயமாக, கேரளாவை அறிவு பொருளாதாரமாக மாற்ற முயற்சிக்கிறோம். இதற்காக அதிக அறிவும் திறன்களையும் கொண்ட ஒரு தலைமுறையை வடிவமைக்க வேண்டும். பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு அங்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.பொருத்தமான குழந்தைப் பருவ பாடங்கள் குடும்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை பொது மற்றும் பணியிடங்களில் ஊக்குவிக்க அரசாங்கம் தலையிடும். இதை அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இவர் அவர் கூறினார்.

வரதட்சணை புகார்களுக்கு ஹெல்ப்லைன்
வரதட்சணை தொடர்பான புகார்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆராய மாநில நோடல் அதிகாரியாக பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆர்.நிஷாந்தினி நியமிக்கப்பட்டுள்ளார். 9497999955 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் அளிக்கும் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

;