india

img

ரூ. 16 கோடி ஊழலில் வசமாக சிக்கும் ராமர் கோயில் அறக்கட்டளை... கேள்விகளுக்குப் பதிலளிக்காத விளக்க அறிக்கை...

லக்னோ:
ராமர் கோயிலுக்காக, அயோத்தியில் கூடுதலாக 3 ஏக்கர் நிலம் வாங்கியதில், அறக்கட்டளை நிர்வாகிகள் ரூ. 16 கோடியே 50 லட்சத்தை கையாடல் செய்தது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஊழலால் அதிர்ச்சியடைந்த ராம பக்தர்கள், ராமர் கோயில் அறக்கட்டளை மற்றும் அதனை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக அமைப்புக்களை கேள்விக்கணையால் துளைத்து வருகின்றனர்.இந்நிலையில், ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இல்லை என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அது அறிக்கையாக மட்டுமே இருக்கிறதே தவிர, விளக்கம் எதுவும் இல்லை. “அயோத்தி நகர ரயில் நிலையம் அருகிலுள்ள பிஜேஷ்வர் தோப்பில் குசும் பாதக், அவரது கணவர் ஹரீஷ் பாதக் ஆகியோருக்குச் சொந்தமான 243, 244 மற்றும் 246 ஆகிய எண்களில் உள்ள 1.208 ஹெக்டேர் நிலம் 2011 முதலே அயோத்திவாசிகள் 9 பேர்களால் அடுத்தடுத்து விலை பேசி ஒப்பந்தம் இடப்பட்டு, ஆனால், விற்பனையாகாமலேயே ஒப்பந்தம் ரத்தாகி வந்தது.

இதில் ஜான் முகம்மது என்பவர் மட்டும் தனது ஒப்பந்தத்தை முறைப்படி பதிவு செய்யாவிட்டாலும், ரத்து செய்யாமல் தொடர்ந்து வந்தார். இந்த ஒப்பந்தத்தை ஜானின் மகனான இர்பான் அன்சாரி 2017-இல் மீண்டும் புதுப்பித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, இர்பானின் மகனான சுல்தான் அன்சாரி, ராமர் கோயிலுக்குச் சாதகமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘2019 நவம்பர் 9’-ல் வருவதற்கு முன்பாக 2019 செப்டம்பர் 17-இல் ரூ. 2 கோடிக்கு விலை பேசினார். இதற்காக ரூ. 50 லட்சம் முன்பணமும் அளித்து ஒப்பந்தமும் செய்தார். மீதித் தொகை ரூ. 1.5 கோடியை மூன்று ஆண்டுக்குள், 2022 செப்டம்பருக்குள் அளிப்பதாக கூறியிருந்தார். சுல்தானுடன், ரவி மோகன் திவாரி உள்ளிட்ட சிலரும் இந்த இடத்திற்கு பங்குதாரர்களான இருந்தனர். இதனிடையே, ராமர் கோயில் கட்டுவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் அயோத்தி நிலங்களின் விலை பன்மடங்காக உயர்ந்து விட்டது. போட்டி அதிகரித்ததால், குறிப்பிட்ட இந்த நிலத்தை ரூ. 18.5 கோடிக்குப் விலை பேசி ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்” என்பதாக அறிக்கை உள்ளது. 

2019-இல் வெறும் 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலம் ஒன்றரை ஆண்டுகளில் எப்படி ரூ. 18.5 கோடியாக அதிகரித்தது? 2012 முதல் 10 ஆண்டுகளாக முயற்சித்தும், 2019 வரை 2 கோடி ரூபாய்க்கு கூட விலைபோகாத இந்த நிலத்திற்கு போட்டி அதிகமாக இருந்தது என்று ராமர் கோயில் அறக்கட்டளை கூறுவதில் நம்பும்படியாக இருக்கிறதா? அன்சாரி சுல்தான் வசமிருந்த நிலத்திற்கான பங்குதாரர்களில் ஒருவரான ரவி மோகன் திவாரி- அயோத்தி பாஜக மேயரின் நெருங்கிய உறவினரா, இல்லையா? திவாரியுடன் எந்த உறவும் இல்லையென்றால், அன்சாரி சுல்தான் நிலம் வாங்கியதற்கான ஒப்பந்தத்தில் அயோத்தி மேயரும், ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினரும் சாட்சிக் கையெழுத்திட்டது எப்படி? என்று எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். அவற்றுக்கு அறக்கட்டளையின் அறிக்கையில் விளக்கம் இல்லை. எனவே, விளக்க அறிக்கை, மறுபடியும் ராம பக்தர்களை ஏமாற்றும் முயற்சியே! என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

;