headlines

img

ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு

“தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்” என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகள் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளு படி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது கவலையளிக்கிறது.தற்போதுள்ள ஏற்பாட்டில் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் வரும்போது அதை போக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு களுடன் ஒப்பிட வேண்டும் என்று பெரும் பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஆணையம் ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து இந்த கோரிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான மூலக்குறியீட்டை (source code)  ஆணையம் வெளியிடக்கூடாது என்றும் வெளியிட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும்  உச்சநீதிமன்றம் எச்சரித்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 விழுக்காடு சேதமடை யாதவை என்றும் அவற்றை ஹேக் செய்ய முடி யாது என்றும் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் கூறியதற்கும் மேற்கண்ட நிலை பாட்டிற்கும் முரணாக உள்ளது. 

இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு தொகுதியில் பதிவான வாக்கு களில் 5 விழுக்காடு வாக்குகள் மட்டுமே விவி பேட்டுடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் 20விழுக்காடு வாக்குகள்  ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. எனவே உச்ச நீதிமன்றம் விபிபேட் சாதனத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் வாக்குகளின் விழுக்காட்டையாவது அதிகரித்திருக்கவேண்டும். தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அப்படி கோரிக்கை வைக்கும் போது  அதற்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு  ஏற்புடையது அல்ல. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது.  

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள போதிலும் விவிபேட் இயந்திரத்தை வாக்குப்பதிவின்போது கடைசியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையம் ஏன் நிராகரித்தது என்ற கேள்வியை எழுப்பி யிருக்கவேண்டும். எனவே விவிபேட் தொடர் பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்பதைவிட நியாயமான தேர்தல் என்ற கருத்துக்கு வலுசேர்க்கவில்லை. 

 

;