headlines

img

மோடி அரசின் இரக்கமற்ற போக்கு...


ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டம் காணொலி வாயிலாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி ஆக்சிஜனுக்கு மத்திய அரசு வரி விதிப்பதை ஏற்க முடியாது என்று கூறியிருப்பது முற்றிலும் நியாயமானது. தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பல்வேறு மாநிலங்களின் சார்பில் தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கான வரியை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்ளாத மத்திய நிதி அமைச்சர், இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைக்கலாம் என்று மட்டும் தெரிவித்துள்ளார். வரி விலக்கு அளிப்பதால் சில நூறு கோடிகள் மட்டும்தான் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று தமிழக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் மக்களின் உயிரைவிட வருமானம்தான் முக்கியம் என்று மோடி அரசு கருதுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா பேரிடர் தொற்றை பயன்படுத்தி அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி வரிச்சலுகைகளை பாஜக கூட்டணி அரசு வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம்மற்றும் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால்  மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசி விசயத்தில் கூட மனிதத்தன்மையற்ற முறையில் மோடி அரசு நடந்து கொள்கிறது. இந்த லட்சணத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வாய்ப்பந்தல் போடுவதற்கு ஒன்றும் குறைவில்லை.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தரப்படாத நிலையில், அதுகுறித்து மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் கேட்டபோது, கடன் வாங்கி பிரித்து தருவது போன்ற திட்டம் ஆலோசனையில் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி மற்றும் வரி வருவாய் நிலுவை 12ஆயிரம் கோடி வரை உள்ளது. இதை வழங்குவதற்கு பதிலாக மத்திய அரசு, மாநில அரசுகள் கடன்பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த காலத்தில் வழிகாட்டியுள்ளது. அப்படி கடன் பெறுவதற்கு கூட உதய் மின் திட்டத்தை ஏற்று மின்வாரியங்களை தனியார்மயமாக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கடந்த ஆட்சியின்போது நிபந்தனை விதிக்கப்பட்டது.

கொரோனா பேரிடரை சமாளிக்கும் பெரும் பொறுப்பை மாநில அரசுகளிடம் தள்ளிவிடும் மத்திய அரசு, மறுபுறத்தில் மாநிலங்களின் நிதி வருவாயையும் தட்டிப் பறிக்கிறது. மாநிலங்களுக்குஉரிய காலத்தில் பேரிடர் நிவாரணம் நிதியும் வழங்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்ட விதம் இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை சீர்செய்ய மறுக்கும் மத்திய அரசு அதனால் ஏற்படும் இழப்புகளையும் ஈடுகட்ட மறுக்கிறது. குறைந்தபட்சம் ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்காவது உடனடியாக வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

;