headlines

img

வருமுன் காப்போம்... (உலகளவில் தண்ணீருக்கான நெருக்கடி)

உலகளவில் தண்ணீருக்கான நெருக்கடி  அதிகரித்துக் கொண்டே  வருகிறது. தண்ணீர்த்தட்டுப்பாடு கடுமையாக உள்ள 17 நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இருக்கிறது. 2030 ல் மக்களின் குடிநீர்த் தேவைக்கும், கிடைக்கும்குடிநீருக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும். தற்போதைய நிலையிலேயே பாதுகாக்கப்பட்ட  குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லாததால்  தொற்று நோய்ப் பாதிப்பு 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என நிதி ஆயோக்  தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலை உருவாக அடிப்படைக் காரணம் முன் திட்டமிடாத அரசின் நடவடிக்கைகளே ஆகும். காரணம் உலக சராசரி மழைப் பொழிவை விட இந்தியாவிற்குக் கூடுதலான மழைப் பொழிவுகிடைக்கிறது. உலக சராசரி ஆண்டுக்கு 1200 மி.மீ ஆகும். ஆனால் இந்தியாவில் ஆண்டிற்கு 1200 மி.மி. பொழிவு இருக்கிறது. இது மழை மற்றும் பனிப்பொழிவால் கிடைக்கும் நீர் ஆகும். உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு 2 சதவிகிதம் ஆகும். ஆனால் உலகளவில் கிடைக்கும் தண்ணீரில் நமக்கு 4 சதவிகிதம் கிடைக்கிறது. இது நமது தேவைக்கு போதுமானது மட்டுமல்ல, கூடுதலானதும் ஆகும். ஆனால், நாம் அதனை எப்படிப் பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் பிரச்சனை. உதாரணத்திற்கு  1.1 டன் எடை கொண்ட ஒரு இலகுரககார் தயாரிக்க  4லட்சம்  லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இரண்டு  ஜீன்ஸ் பேண்ட் உற்பத்தி செய்ய 3,781 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அறிக்கை தெரிவிக்கிறது. இன்று இந்தியாவிலிருந்து அதிகளவில் ஆடைகளும், கார்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அப்படி அனுப்பும் போது நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் அனுப்புவதில்லை. மாறாகநாம் நாட்டில் இருக்கும் நீர்வளத்தையும் சேர்த்தேஅனுப்புகிறோம்.

வளர்ந்த நாடுகளில் ஆடைகளையும், கார்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா, இல்லை. காரணம் ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் நீர் வளத்தைப் பாதுகாப்பதில் குறியாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் பின்பற்றப்படும் அரசின் கொள்கை கார்ப்பரேட்களின் லாபத்தை மட்டுமேமுன்னிலைப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தண்ணீர்த் தேவையைக் கணக்கில் கொள்வதில்லை. இதன் விளைவு கார்பன் உமிழ்வில் 3ஆவது பெரிய நாடாகவும், பருவநிலை அபாய குறியீட்டில் 7ஆவது இடத்திலும் இந்தியா இருக்கிறது. 

‘’வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர், வைத்தூறு போலக் கெடும்’’ என்கிறார் வள்ளுவர். அதாவது பிரச்சனை நேர்வதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும் என்கிறார். தொழில் வளர்ச்சி என்ற பெயரில்  நம் நீர் வளத்தைச் சுரண்டி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிப்பது நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

;