facebook-round

img

சமஸ் கட்டுரை: ஒரு முழு அறுவை சிகிச்சை - வே. தூயவன்

“சங்கரய்யாவின் வாழ்க்கைக் கதையைப் படிப்பது இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் எப்படியான பாதைகள் வழியே வந்திருக்கிறது; கடந்த ஒரு நூற்றாண்டில் இங்கே பொதுவுடைமை இயக்கத்தினர் வாழ்க்கையும் அக்கறைகளும் எப்படியெல்லாம் பயணப்பட்டிருக்கின்றன என்பதைக் குறுக்குவெட்டாகப் பார்ப்பதற்குச் சமம்.”
இந்து தமிழ் திசை நாளேட்டில் அக்டோபர் 23ஆம் தேதி எழுதிய கட்டுரையில் சமஸின் இந்த வாக்கியம் வரையிலான தோழர் சங்கரய்யா பற்றிய வர்ணனை இடதுசாரி வாசகர்களை உள்ளபடியே பூரிக்கச் செய்து, வாசிப்பைத் தொடரச் செய்கிறது. அதன் பிறகு சங்கரய்யாவை விட்டு விட்டு சமஸ் வந்து விடுகிறார்!
“இயக்கம் அதன் வரலாற்றிலேயே மிகப்பெரும் சரிவுக் காலகட்டத்தில் இருக்கிறது என்ற மதிப்பீடு ஒரு புறம் இருக்க, அந்த மதிப்பீட்டுக்கு அவர் முன்வைக்கும் ஆதாரம், “மக்களவையில் அவர்களுக்கான இடம் ஐந்தாகச் சுருங்கிவிட்டது” என்பதாகும்! ஒரு விஞ்ஞானத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் புரட்சிகர கட்சியின் வளர்ச்சியை மதிப்பிட, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இடம் சுருங்கி விட்டதைச் சொல்வதை அறியாமை என்பதா, குதர்க்கம் என்பதா? தேர்தல் வெற்றி, தோல்வியோடு மட்டும் ஒரு சித்தாந்த இயக்கத்தைப் பற்றி மதிப்பிடுவது முழு பொருத்தப்பாடு உடையதல்ல!
கட்டுரையாளர் தன்னை இடதுசாரிகளின் ஆதரவாளராக, கம்யூனிஸ்டுகளின் இடத்தில் நிறுத்திக் கொண்டு பார்க்கிறார். ஆனால் பரிதாபம், அவருக்கு “கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புத்தொளி எதுவும் தெரியவில்லை”, அவரது சிந்தனையோட்டத்தோடு ஒத்துப் போவோருக்கு, கலக்கம்தான் சூழ்ந்திருக்கிறது. அதைத்தான் அவர், இடதுசாரிகளுக்கு கலக்கம் சூழ்ந்திருப்பதாகச் சொல்கிறார். கலக்கம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை சமஸ், கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய அரைகுறை புரிதல் கொண்ட ஊசலாட்டப் பேர்வழிகளுக்குத்தான் கலக்கம் சூழ்ந்திருக்கிறது!
இந்திய பொதுவுடைமை இயக்கம் வரலாற்றுச் சுமையில் இருந்து வெளியே வந்து ஒன்றிணைய முடியவில்லை என பழைய பல்லவியை புதிய சுரத்தில் பாடுகிறார். முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின் ஒற்றுமை பற்றிய உணர்வுப்பூர்வமான புரிதலில்தான் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, சிபிஐ (எம், எல்) கட்சியும், இதர பல இடதுசாரி அமைப்புகளும் கூட ஒன்றாக கை கோர்த்து நிற்கின்றன. காஷ்மீர் சீர்குலைக்கப்பட்டதை எதிர்த்து நடத்திய போராட்டத்திலும், அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து கடந்த வாரம் நாடு முழுவதும் களம் கண்டதிலும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டுதான் போராடுகிறார்கள். எந்த வரலாற்றுச் சுமையும் அதைத் தடுக்கக் கூடியதாக இல்லை என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்? அதைவிட்டு விட்டு கட்சி தொடக்கம் பற்றிய சர்ச்சையில் முதுபெரும் தலைவர் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டைத் துணைக்கு அழைத்து 1920க்கும், 1925க்கும் இடையே 1923ஆம் வருடத்தைக் குறிப்பிட்டு சமஸ் ஒரு புதிய சமன்பாட்டைப் போட்டுக் காட்டுகிறார், பாவம்!
இதற்குப் பின்பு அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இயக்கம் நீடிக்குமா என்ற ஒரு கேள்வியை எழுப்பி, இந்திய சமூகம் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திடம் எதிர்பார்ப்பது மீண்டும் ஒன்றுபட்டு அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதே என்கிறார் சமஸ். சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்? சித்தாந்தரீதியாக ஒரு முழு அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டுமாம்! அவர் பரிந்துரைக்கும் மருத்துவத்தை மேற்கொண்டால், பிறகு என்ன நடக்கும்? முழு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி மார்க்சியம் என்ற சித்தாந்தத்தை நீக்கிவிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்கிறார் வைத்தியர்!
அடுத்ததாக கம்யூனிஸமா, சோஷலிஸமா என்ற பட்டிமன்றத்துக்கு வந்துவிடுகிறார். ஏற்கெனவே ராமச்சந்திர குகாக்கள், கம்யூனிஸ்டுகளை அடிப்படை நிலைப்பாட்டைக் கைவிட்டு விடும்படி அன்பால் கெஞ்சியும், அறிவால் மிரட்டியும் பலவாறு புலம்புவதைப் பார்க்கிறோம். இப்போது நமது தமிழ்நாட்டு “குகா”வான சமஸைப் பார்ப்போம்!
சோசலிசம், கம்யூனிஸம் என்ற சொற்கள் வெவ்வேறு திட்டவட்டமான அர்த்தம் கொண்டவை. வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங்களுக்கு உரியவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிஸ சமுதாயத்திற்குப் பயணிக்கும் இடைக்காலம் தான் சோசலிசம்! இருந்தாலும் இந்த சோசலிசம் என்ற சொல் வரலாறு நெடுகிலும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல! மார்க்ஸ் காலம் தொட்டு இன்று வரை சோசலிசம் என்ற சொல் குத்திக் குதறப்பட்டு சிதைக்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது! அது ஏதோ தற்செயலான சம்பவங்கள் அல்ல, முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கவனமாகத்தான் சோசலிசம் என்ற சொல்லை கூடுமான வரை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.
இன்றைய சமஸின் வாதத்துக்கும், சோசலிசம் என்ற சொல்லை மாற்றிக் கொள்ள கம்யூனிஸ்டுகளை வற்புறுத்துவதற்கும் ஒரு திட்டவட்டமான தொடர்பும், வர்க்கச் சார்பும் இருக்கிறது! சமஸ் தனது இந்த கட்டுரையில் போகிறபோக்கில் சொல்வதைப் போல, இரு சொற்களும் முழுக்க இருவேறு தத்துவங்களாக இன்று ஆகிவிட்டிருக்கின்றன! ஆனால் அந்த இரு வேறு தத்துவங்கள் என்ன என்பதைப் பற்றி அவர் விளக்கிக் கூறவில்லை. கட்டுரையின் அளவு கருதி சுருக்கிவிட்டாரா அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டாரா அல்லது அவருக்குத் தெரியவில்லையா? இரு வேறு தத்துவங்களின் உட்கிடை என்னவாக இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாசிசத்துக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றிக்குப் பிறகு, “மக்கள் நல”, “சேம நல” அரசுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்டன. அவை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் கருணையினால் உருவானவை அல்ல! சோவியத் ரஷ்ய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தால் தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் புரட்சிகரமாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட “ஒரு இடைக்கால” முதலாளித்துவ ஏற்பாடுதான் அது! அந்த மக்கள் நல, சேம நல அரசுகளைத்தான் “சோசலிஸ்டுகள்”, “சமூக ஜனநாயகவாதிகள்” என்போர் புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியலுக்கு மாற்றாக முன்வைத்தனர்.
ஏறத்தாழ எழுபதாண்டு கால அனுபவத்தில் இன்று உலகில் இந்த மக்கள் நல, சேம நல அரசுகள் என்ற சோசலிஸ்டுகளின் நிலைபாடு திவால் நிலையை அடைந்துவிட்டது என்பதுதான் வளர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவமாக உள்ளது. குறிப்பாக சர்வதேச நிதிமூலதனத்தின் மேலாதிக்கம் உலக நாடுகளின் செல்வங்களை கபளீகரம் செய்து வரும் நிலையில், அந்த மக்கள் நல, சேம நல அரசுகள் கல்வி, பொது சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குடிமக்கள் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்குகின்றனர். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் இப்போது யார் பக்கம் நிற்கிறார்கள்? சர்வதேச நிதிமூலதனக் கும்பலின் கட்டளைக்கு ஏற்ப அவர்களும், மக்கள் நல அரசு என்ற நிலையைக் கைவிட்டுவிட்டார்கள். இவ்வாறாக அந்த சோசலிஸ்டுகளின் அரசியல் நிலைபாடு திவாலாகி நிற்கிறது.
கிட்டத்தட்ட அந்த சம காலத்தை ஒட்டித்தான் இந்தியாவிலும் சோசலிஸ்ட் மரபு வளமாக இருந்தது. அந்த கட்டுரையில் சமஸ் குறிப்பிடும் காந்தி, பெரியார், நேரு, அம்பேத்கர், அண்ணா போன்றவர்களை சிலாகித்து எழுதுகிறாரே, இவர்களை ஒரே நிலையில் வைத்துப் பேச முடியாது. இருந்தாலும், உலகளவில் இன்று பட்டுப் போன அந்த சோசலிச மரபைத்தான் ஏதோ ஒரு வகையில் இங்குள்ள சோசலிஸ்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதற்கு ஒரு சிறு உதாரணத்தையும் கூற முடியும். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன உவமை! “கம்யூனிஸ்டுகளின் சோசலிசம் என்பது தேங்காயை உடைத்து உள்ளே இருக்கும் தண்ணீரைப் பருகி, தேங்காய் பருப்பை உட்கொள்வது போல, ஆனால் எங்களது சோசலிசம் என்பது மாங்கனியை சுலபமாக சுவைத்துச் சாப்பிட்டு விட்டு கொட்டையை தூக்கி வீசிவிடலாம்” என்று ஒரு சமயம் சொன்னார். அதாவது இன்றைய முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைப்பது கம்யூனிஸ்டுகளின் இலக்கு, ஆனால் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்வைத்த “சோசலிச மரபு” முதலாளித்துவ சுரண்டல் சமூக அமைப்பை புரட்சிகரமாக மாற்றி அமைக்காமல் அதற்குள்ளிருந்தே உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்வது! அவர்கள் கனியை சுவைத்து விட்டு தூக்கி வீச விரும்பிய முதலாளித்துவம் என்ற மாங்கொட்டை தற்போது உப்பிப் பருத்துப் போய் கனத்துக் கிடக்கிறது.
உலக சோசலிஸ்டுகளின் அனுபவத்துடன், இந்திய (தமிழக) சோசலிஸ்டுகளின் அனுபவமும் இப்போது முட்டுச்சந்தில் இருப்பதுதான் இன்றைய ஏகாதிபத்திய சர்வதேச நிதி மூலதனக் காலத்தின் ஓர் அரசியல் வெளிப்பாடாக இருக்கிறது. இதை கம்யூனிஸ்டுகளை விட வேறு யாரும் தெளிவாகப் பார்க்கவும் இல்லை, உணரவும் இல்லை. ஆனால் குகாக்களும், சமஸ்களும் இதைப் பற்றி கிஞ்சித்தும் உணர்வில்லாமல், எதிர்காலம் குறித்து குழம்பிப் போய் நிற்கிறார்கள். அவர்கள் குழம்பிப் போய் இருப்பது மட்டுமின்றி, தங்கள் குழப்பத்தை இடதுசாரிகளின் குழப்பமாக சித்திரிப்பதும், அதை கம்யூனிஸ்டுகளின் மீது சுமத்தப் பார்ப்பதும்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரிபு.
இந்த வரலாற்று வேறுபாட்டைத்தான், அதாவது வர்க்கப் போராட்டமா, வர்க்க சமரசமா என்ற அடிப்படை முரண்பாட்டைத்தான் கடந்து போகிறார் சமஸ். சோசலிசத்தைப் பற்றி தங்கள் காலத்தில் அறிவுஜீவிகள் கொச்சைப்படுத்திய சூழலில்தான் விஞ்ஞான சோசலிசத்தின் மூலவர்களான மார்க்ஸும், எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக கூறினர் என்பதையும் ஒரு வரலாற்றுத் தகவலாக இங்கே சொல்லி வைப்போம்!
உலகெங்கும் கம்யூனிஸத்தின் பெயரால் ஆட்சியமைத்த அரசுகள், அவர்களுடைய ஆட்சியில் தந்திருக்கும் அனுபவங்களின் வாயிலாகவே கம்யூனிஸ்ட் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மக்கள் புரிந்திருக்கிறார்களாம்! அடேங்கப்பா, இவர் சொல்வது போல் மக்கள் உலகளாவிய கம்யூனிஸத்தைப் பற்றிய அனுபவங்களை உள்வாங்கி அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள் என்றால் ரொம்ப கஷ்டம்தான்! ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு அல்ல, முதலாளித்துவவாதிகளுக்குத்தான்!! சோசலிச நாடுகளைப் பற்றியும், அங்கிருந்த சமூக அமைப்புகளைப் பற்றியும் மக்களின் பொதுப் புத்திக்கு எந்தளவு உண்மைகளை இங்கிருக்கும் ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன? ஊடகங்களின் செயல்பாட்டுக்கு இதே கட்டுரையில் காஷ்மீரையும், ஹாங்காங்கையும் ஒப்பிட்டு சமஸ் எழுதியிருப்பது ஒரு சான்றாகும். இரண்டையும் ஒன்றாய் பொதுமைப்படுத்திப் பார்ப்பது ஊடக அறமா? நயவஞ்சகமல்லவா!
ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து காஷ்மீர் என்ற ஒரு மாநிலத்தையே, சிதைத்துவிட்டு அங்கிருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை ஏறத்தாழ 75 நாட்கள் முடக்கி வைத்திருக்கும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கையும், ஹாங்காங்கில் அரசியல் கைதிகளை சீனாவுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு சட்ட வடிவை முன்மொழிந்து, எதிர்ப்புக் கிளம்பிய உடன், அதை அரசு திரும்பப் பெற்றுவிட்ட பிறகும், போராட்டங்களின் பெயரால் வன்முறையை கிளப்புவதும், அதை அந்த அரசு கையாள்வதும் ஒன்றுதானா? இங்கே காஷ்மீர் மக்கள் மூச்சுக்கூட விட முடியவில்லை, அங்கே ஹாங்காங் மக்கள் அரசு ஆதரவு போராட்டம் நடத்தி உள்ளனர். இதை எத்தனை ஊடகங்கள் எடுத்துக் காட்டின, எழுதின, சமஸ் எழுதத் தயாரா?
கடந்த நூற்றாண்டில் சோசலிச நாடுகளின் மொத்த ஜனநாயக அனுபவத்தையும், நியாயப்படுத்த முடியாத அணுகுமுறை என புறங்கையால் குப்பைத் தொட்டிக்குத் தள்ளிவிடுகிறார் சமஸ். அவரது குரலில் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் தொனியே ஒலிக்கிறது. ஜனநாயகம் என்பதை கூப்பாடு போடும் வெற்றுக் கூச்சல் என்ற தன்மைக்குச் சுருக்கிப் பார்ப்பதால் அவருக்கு சோசலிச நாடுகளில் ஜனநாயகமே இருந்திருக்கவில்லை என்ற முடிவுக்குப் போய்விட்டார். கனவானே! உணவும், உறைவிடமும், வேலையும், பொழுதுபோக்கு கலாச்சார அம்சங்களும் உழைக்கும் எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்தது ஜனநாயக நடவடிக்கை இல்லையா? அரட்டை அரங்கத்தில் கதையாடுவது மட்டுமே ஜனநாயகமோ?
சோசலிச நாடுகளின் கடந்த கால அனுபவத்தில் தவறே நடக்கவில்லை, எல்லாம் சரியாக இருந்தது என வாதிடுவது எங்கள் நோக்கமல்ல! அதை விமர்சனத்திற்கு உட்படுத்தி தவறுகளை துணிச்சலாக வெளியே சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி! ஒரு விஞ்ஞான சித்தாந்தை அடிப்படையாக கொண்டவர்கள் என்ற முறையில் கம்யூனிஸ்டுகள் எப்போதும் தங்களை விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொண்டு தவறுகளைக் களைந்து சரியான நிலைக்குச் செல்ல தயங்குவதில்லை. ஆனால் சமஸ் போன்றவர்கள் சோசலிச நாடுகளின் மொத்த அனுபவத்தையும் நிராகரிப்பதை நாம் விமர்சனம் என ஏற்பதற்கில்லை!
அப்படி நிராகரிப்பதால்தான் சீனாவைக் காட்டிலும் பிரிட்டனையும், வெனிசுலாவைக் காட்டிலும் டென்மார்க்கையும் சமஸால் உயர்வாகப் பார்க்க முடிகிறது. அந்தந்த நாடுகளின் வரலாற்று வளர்ச்சிகளைக் கடந்து இப்படி தட்டையாக ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது. போகிற போக்கில் அவர் அந்த தவறான ஒப்பீட்டை சொல்வதன் மூலம் மறைமுகமாக அவர் வெளிப்படுத்துவது என்னவென்றால், சோசலிசத்தை விட முதலாளித்துவமே உயர்வானது என்பதுதான்! ஆகவேதான் பெயர் மாற்றம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முதலாளித்துவ கட்சியாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என முன்மொழிகிறார். அதுவும் திவாலாகிப் போன மிதவாத ஜனநாயக, சோசலிச கட்சிகளின் தன்மைக்கு தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கூசாமல் கூறுகிறார்.
உலகமய காலகட்டத்துக்குப் பிந்தைய பொருளாதாரத்தை எப்படி அணுகுவது என்பது முதலான நான்கு அம்சங்களில் இந்திய பொதுவுடைமை இயக்கத்தினருக்குத் தடுமாற்றம் இருக்கிறதாம்! தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கப்படுவது தொடங்கி இன்றுவரை சமரசமில்லாமல் தெளிவாக எதிர்த்து வருவது கம்யூனிஸ்டுகளை விட்டால் வேறு யார்? மதத்தை அணுகுவது பற்றி உலகுக்கு புதிய பார்வை கொடுத்தது கார்ல் மார்க்ஸ், அதைப் பின்பற்றி வருவது கம்யூனிஸ்டுகள். அதில் எங்கே தடுமாற்றம் உள்ளது?
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மீண்டும் உலகளாவிய வரலாற்று அனுபவங்கள் தரும் சோசலிசம் இதற்குத் தீர்வு கொடுக்கலாம் என்கிறார். முதலில் உலகளவில் கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரத்தில் இருந்து இந்திய பொதுவுடைமை இயக்கத்தினர் விடுபடுங்கள் என்கிறார், அடுத்து, உலகளாவிய வரலாற்று அனுபவமான சோசலிசத்திற்குப் போங்கள் என்கிறார். விசயம் ஏற்கெனவே சொன்னது போல் தெளிவுதான்! ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக நீங்கள் நீடிக்காதீர்கள் என்பதே அது! இதைப் பற்றிய அவருக்கு இருக்கும் குளறுபடியான புரிதலையும், தெளிவின்மையையும், குழப்பத்தையும் மறுபடியும், மறுபடியும் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்றிப்பேசி தன்னை மிகத்தெளிவான போதகராக மலை மேல் ஏறி நிற்கிறார் சமஸ்! அந்தோ பரிதாபம் அவர் மலை மீது ஏறி நிற்கவில்லை, படுகுழிக்குள் நின்று பிதற்றுகிறார்.
மீண்டும் பழைய பல்லவி! அனைத்தையும் பொதுவுடைமையாக கருதும் கம்யூனிஸம் தனி நபர்களின் சொத்துரிமையை ஏற்க மறுக்கிறது. சோசலிசமோ பெருந்தொழில் உற்பத்தியை சமூக உடமையாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் தனிநபர்களுக்கான சொத்துரிமையை மதிக்கிறது! சோசலிசத்திற்கும், கம்யூனிஸத்துக்கும் உரிய வரலாற்று காலகட்டத்தையும், வேறுபாடுகளையும் முன்பே குறிப்பிட்டோம். அதைப் பற்றிய தெளிவின்மையைத்தான் மறுபடியும் இங்கே சமஸ் வெளிப்படுத்துகிறார். உச்சக்கட்ட குழப்பவாதி, உலகமே குழப்பத்தில் இருக்கிறது என்கிறார்.
“ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் பெயர்களோடு இணைந்த அந்தந்த மாநில மொழியில் அமைந்த பெயர்; தேசிய அளவிலான பிரச்சினைகளை மட்டும், ஒன்றுகூடி முடிவெடுக்கும் ஒரு நிழற்குடை அமைப்பாக தேசிய அமைப்பு இருக்கலாம்;”
ஆகவே ஒரு நிழற்குடை ஏற்படுத்த வேண்டுமாம்! ஏற்கெனவே மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதில் இருந்து, மாநில சுயாட்சி, தேசிய மொழிகள் பற்றிய தெளிவான முரணற்ற நிலைபாடு தொட்டு, இந்தியாவின் பன்மைத்துவத்தையும், அதன் ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாக்கக் கூடிய தெளிவான திட்டம் கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி. 2000ஆவது ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தை சற்று கவனமாகப் படித்துப் பார்த்தால் சமஸ் இதைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் அந்த திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் அகில இந்திய கட்சியை ஒரு கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார்.
இந்திய தேசியத்தின் பன்மைக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கலந்திருக்கின்றன. இதன் ஊடாகத்தான் வேறுபட்ட மதம், மொழி, இனம், பண்பாடு ஆகியவை தனித்த அடையாளங்களுடன் செயல்படவும் செய்கின்றன. இது பாரதி சொன்னது போல் வேறெங்கும் காணா புதுமை! இதற்கு ஒத்திசைவாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் தனது அமைப்பு முறையையும், செயல்பாட்டையும் வகுத்துச் செயல்படுகிறது. ஒன்றன் மீது ஒன்று மேலாதிக்கம் செலுத்தும் பிரச்சனையோ, ஒன்றன் மீது ஒன்றைத் திணிக்கும் பிரச்சனையோ ஆளும் வர்க்கங்களால் வலிந்து ஏற்படுத்துவதை விடுத்து, இயல்பான அம்சமாக இங்கே இல்லை. அத்துடன் அந்தந்த மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுவதில் கட்சிக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. இந்தியாவின் புறவயமான எதார்த்த நிலைமையில் இருந்து கூறுவதானால், எஸ்.என்.நாகராஜன் கருத்து பொருத்தப்பாடு உடையதல்ல. இந்தியா ஒரே தேசம் அல்ல என்பது உண்மைதான், அதே சமயம் இந்தியா என்பது பல தேசங்களின் தேசமாக ஒரே நாடாக இருக்கிறது என்பதும் வரலாற்று உண்மையே! எனவே இதில் புதிது போல் சமஸ் முன்வைக்கும் வாதம் புதிதல்ல.
மேலும் இந்த ஒட்டுமொத்த வாதத்திலும் மிக ஆதாரமான, இந்தியாவில் பொருளாதார வாழ்வின் இயக்கம் பற்றிய விசயத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை. இந்தியாவின் ஏகபோக பெருமுதலாளி வர்க்கம் ஏற்படுத்தும் ஒற்றைச் சந்தையும், அசமத்துவமான வளர்ச்சியும், அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வும் வெவ்வேறு விதமாக, பிராந்தியங்களில் ஏற்படுத்தும் விளைவுகளையும், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறையையும் சொல்லவே இல்லை. நாடு தழுவிய அகில இந்திய அரசியல் அமைப்பு இல்லாமல் இதை எப்படி எதிர்கொள்வதாம்? இந்த பொருளாதார வாழ்வின் அம்சங்களை நீக்கிவிட்டு மொழி, மாநிலம், சமூகநீதி குறித்த அம்சங்களில் மட்டும் தனித்தனி மாநிலங்களின் குரலாக ஒலிப்பது என்ன மாதிரியான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்? இந்த அடிப்படையில் சமஸின் வாதம் சாரமிழந்து விடுகிறது.
“அந்தரத்தில் மிதக்கும் வேரற்ற தாவரமான (!) சர்வதேசியவாதத்துக்கு, ஆழ வேரூன்றிய தமிழின் ஓருலகவாதம் நல்ல மாற்றுதாரணமாக இருக்க முடியும்” என்பது மறுபடியும் உலகளாவிய வர்க்கப் பார்வை என்ற அடிப்படையைக் கைவிடுங்கள் என்பதே ஆகும். இன்று பன்னாட்டு நிதிமூலதனம் ஒற்றை சிலந்தி வலையாக விரிந்து பரவி உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையைக் கண் கொண்டுப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாததால் சர்வதேசியவாதம் அவருக்கு அந்தரத்தில் மிதக்கும் வேரற்ற தாவரமாகத் தெரிகிறது. எனவேதான் எளிதான ஒரு வழியாக ஓருலக வாதத்தில் ஆழக் காலூன்றி நிற்கிறார் சமஸ்.
நிகழ்காலத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் பரிமாணத்தையும், கனத்தையும் உணர்ந்தே உள்ளனர். இதில் ஏற்படும் சில தடுமாற்றங்களைக்கூட கடந்து வந்து விடுகின்றனர். ஆனால் பாஜகவுடன் கை கோர்த்து இரண்டற ஒன்றுகலந்து விட்டதாக போகிற போக்கில் சேற்றை வாரி வீசுவதுதான் இவர் காட்டும் கரிசனமா?
இந்திய பெரு நிலப்பரப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்து வளர்த்த சிங்காரவேலர், பி.சி.ஜோசி, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, சுர்ஜித், ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, ஜீவா என நெடிய வரலாற்று முன்னுதாரணங்களை கொண்டதுதான் எங்கள் இயக்கம். மட்டுமல்ல, இந்தியாவின் மகத்தான ஆளுமைகளான மகாத்மா காந்தி, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்பட வெவ்வேறு தளங்களில் செயல்பட்டோரையும் விமர்சனப்பூர்வமாக உள்வாங்கிய பார்வையுடன்தான் ஒரு விரிந்த ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டத்தையும் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுக்கிறது.
இன்றைய ஆளும் வலதுசாரி அரசின் பலத்தை ஒப்பிட, இடதுசாரிகள் பலவீனமாகவே இருக்கிறார்கள் என்றால், அதைப் பற்றி ஏன் ஆட்சியாளர்கள் அலட்டிக் கொள்ள வேண்டும்?
சின்னஞ்சிறு திரிபுராவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் முன்னாள் அமைச்சர், மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் பாதல் சௌத்ரியை அம்மாநில பாஜக அரசு கைது செய்வது ஏன்? பிற கட்சியினரை சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்க முடிந்த பாஜகவுக்கு, கம்யூனிஸ்டுகளின் அசைக்க முடியாத அறநெறி விழுமியங்களை சேதாரப்படுத்துவதன் மூலம் வீழ்த்த முனைவது எதனாலே?
இன்றும் வலதுசாரிகளின் மாற்றாக இந்திய இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்ற சித்தாந்த அடிப்படைதான் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில், நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பொருத்தப்பாடு உடையதாகவே இருக்கிறது என்பதைத்தான் இன்றைக்கும் விமர்சனத்தின் பேரால், அதை நோக்கி வீசப்படும் அவதூறுகள் உணர்த்துகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தற்காலப்படுத்திக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேறும் என்பது உறுதி!
வே.தூயவன்

;