election2021

img

உள்ளாட்சியில் ஊழலாட்சி கண்ட அமைச்சர் வேலுமணி.....

உள்ளாட்சியில் ஊழலாட்சி கண்ட அமைச்சர்தான் வேலுமணி. ஊழல் செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு அமைச்சர் வேலுமணியாகத்தான் இருக்க முடியும். அவரை அரசியலில் நீடிக்க விடலாமா? இந்த வேலுமணி அமைச்சர் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். இப்போது எப்படி இருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரியும்.சுண்ணாம்பு பவுடர் வாங்குவதிலிருந்து பினாயில் வாங்குவது வரைஊழல் செய்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது வேலுமணியாகத்தான் இருக்க முடியும். அவர் ஊழல் செய்து இருப்பதில் ஒருசிலவற்றை ஆதாரங்களோடு உங்களுக்கு சொல்லப் போகிறேன், சுண்ணாம்பு ஒரு பை கடையில் 170 ரூபாய், ஆனால் வேலுமணி பில் போட்டு வாங்கி இருப்பது 842 ரூபாய், பினாயில் ஒரு பாட்டில் கடையில் 20 ரூபாய், அதை அவர் பில் போட்டு வாங்கியிருப்பது 130 ரூபாய், டிச்சு கொத்து ஒன்று 130 ரூபாய் கடையில், அதை 1010 ரூபாய்க்கு பில் போட்டு வாங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் 12,500 ஊராட்சிகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 1 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள். எனவே 12,500 கோடிக்கும் மேல் கொள்ளை அடித்த ஆட்சியைத்தான் வேலுமணி நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் சாலையில் இருக்கும் தெருவிளக்கில் எல்.இ.டி. பல்ப் ஒன்று 1500ரூபாய், ஆனால் வேலுமணி வாங்கியது 14,919 ரூபாய். இது சம்பந்தமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாபுரம் அப்பாவு அவர்கள் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் இதை லோக் ஆயுக்தா என்ற அமைப்பிடம் கொடுத்து விட்டோம். அவர்கள் அதை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே அரசு வழக்கறிஞரே ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

நேற்று வரையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் தொகுதிஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்த ராஜவர்மன் பத்திரிகையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். “அமைச்சர் வேலுமணி 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல்செய்திருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.இன்றைக்கு அந்த அளவிற்குக் கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்கள். அதுமட்டுமல்ல, வேலுமணி அவர்கள் கோவையில் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.அவருடைய சகோதரர்கள் - பினாமிகளை வைத்து அவர், அக்கிரமங்கள், அநியாயங்கள், ஊழல்கள், கொள்ளைகள், கொலைகள் செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையையும் கையில் வைத்துக் கொண்டு இந்தக் கொடுமையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேலுமணி காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு பணம் கொடுத்து வருவதாகக் கேள்வி. அவ
ருக்குத் துணைநிற்கும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் எனக்கு வந்துவிட்டது. சில அதிகாரிகள்தான். எல்லோரையும் சொல்லவில்லை. அந்த அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கா விட்டாலும் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் நடவடிக்கை எடுத்தே தீருவோம். 

அதேபோல ஸ்மார்ட் சிட்டி என்று சில மாநகராட்சிகளில் இந்த ஆட்சி அறிவித்தது. அதற்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்தது. அதில் பல கோடி ஊழல்செய்திருக்கும் அமைச்சர் தான் இங்கு இருக்கும் வேலுமணி. அதைப்பற்றி பத்திரிகையில் எழுதுவதற்கு சில பத்திரிகையாளர்கள் பயப்படுகிறார்கள்.வேலுமணி அவர்கள் 8 பினாமி கம்பெனி வைத்து இருக்கிறார். அதன்மூலமாக இன்றைக்கு கோவை மாநகராட்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எல்லாம் மாநகராட்சிகளிலும் - நகராட்சிகளிலும் - பேரூராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் டெண்டர் விட்டு கொள்ளை அடித்த ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது வேலுமணி தான்.

இன்றைக்கு முதலமைச்சர் பழனிசாமியிலிருந்து கடைசியில் இருக்கும் அமைச்சர்கள் வரை கணக்கெடுத்து பார்த்தீர்கள் என்றால் அதிகமாக கொள்ளை அடித்தது யார் என்றால் வேலுமணியாகத்தான் இருக்க முடியும். இதில் வேடிக்கை என்ன என்றால் முதலமைச்சரையே முந்திவிட்டார்.உங்களுக்குத் தெரியும் பக்கத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏறக்குறைய 200-க்கும்மேற்பட்ட இளம் பெண்கள் கடத்தப்பட்டு, எஸ்டேட்டில் வைத்து, பலாத்காரம் செய்து, வீடியோவில் பதிவு செய்து மிரட்டி அச்சுறுத்தி பணம் பறித்த கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே எங்கும் நடந்திருக்க முடியாது. இது காவல் துறைக்குத் தெரியாதா?
அதில் சமீபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருளானந்தம் என்கின்ற ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட அருளானந்தம் வேலுமணியுடன் எடுத்த புகைப்படம் வெளிவந்திருக்கிறது. அதேபோல பொள்ளாச்சி ஜெயராமனுடன் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் புகைப்படமும் வந்திருக்கிறது. உண்மைகள் வெளிவந்தே தீரும். 

கோவை மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கிணத்துக்கடவில் வெள்ளியன்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து..

;