election-2019

ஜீரோவுக்கு கீழே மார்க் போடலாமா... ஐயா மருத்துவரே?

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை "மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை" என்ற முழக்கத்துடன் பாமக எதிர்கொள்கிறது.-நிறுவனர் ராமதாஸ் அறிக்கை."இந்திய நாடே ஏன்? உலகமே வியக்கும் அளவிற்கு சாதனைகளை செய்தவர்! நாட்டுக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்தவர்; இந்தியாவின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருபவர் பிரதமர் நரேந்திர மோடி.-கிளாம்பாக்கம் பொதுக் கூட்டம் ராமதாஸ்.இப்படியெல்லாம் இப்போது பேசிடும் ராமதாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேர்காணலில், என்ன சொன்னார்?


மத்திய பாஜக ஆட்சிக்கு  உங்கள் மதிப்பெண் என்ன?


பாஜக ஆட்சிக்கு மார்க் கொடுக்கணும்னா சைபருக்கு கீழே ஒன்னுமே இல்ல. சைபருக்கு கீழே ஏதோ இருந்த அந்த மார்க்குதான் கொடுப்பேன்.


பாஜக அவ்வளவு மோசமான ஆட்சியினு சொல்றீங்களா?


ஆமாம், சந்தேகமே இல்லை. 


அவங்க இந்திய மக்களுக்கு அப்படி என்ன சாதித்திருக்காங்க? தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிருக்காங்க?


ஒண்ணுமே செய்யல. அவங்க செஞ்சது எல்லா மாநிலத்தின் அதிகாரங்களையும் எடுத்துக்கிட்டாங்க.அவங்களுடைய நோக்கமே இந்தி மொழியை புகுத்துவது தான். இந்துத்துவா கொள்கை.இந்து- இந்தி- இந்தியா இதுதான் பாஜகவின் கொள்கை. இதைத்தவிர வேற ஒண்ணுமே செய்யல.


இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு பாமக கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?


பாஜகவுக்கு மார்க் போட ஜீரோவுக்கு கீழே தேடிக்கிட்டு இருக்கேன். அது கூட ( பாஜக) எப்படி கூட்டணி வைக்க முடியும்.


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்காதா?


நூற்றுக்கு இருநூறு சதவீதம் கூட்டணி வைக்காது.இவ்வாறு விவாதம் நடந்தது.இதனால்,ஆத்திரமடைந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை அருகே நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், பாமக நிறுவனர் ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் அளித்த ராமதாஸ்,"இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது மரங்களை நாங்கள் வெட்டவில்லை என்றும் சமூகம், அரசியல், பொருளாதாரம், இட ஒதுக்கீடு இவைகள் பற்றி தமிழிசைக்கு எதுவும் தெரியாது. இட ஒதுக்கீடு என்றால் சினிமா கொட்டகையில் இடம் பிடிப்பது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சீறினார்.


இந்த சம்பவத்திற்கு பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசை, "மரம் வெட்டுவது பற்றியெல்லாம் பாமகவினர் பேசலாமா" என வார்த்தைப் போர் தொடுத்தார்.தமிழிசையின் பேச்சால் கொந்தளித்த பாமக தொண்டர்கள், மருத்துவர் அய்யா குறித்து தமிழிசை தெரிவித்த கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை தி. நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தின் போது அரசுப் பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. 


இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஏ.கே. மூர்த்திதான் இன்றைக்கு பாஜக கூட்டணியின் சார்பில் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளர் என்பது தனிக்கதை.பின்னர் நடந்த ரசாயன மாற்றத்தால் ராமதாசுக்கு ‘கல்லா’ கட்டியது. கனக்கச்சிதமாக கூட்டணி பேரத்தையும் முடித்தாலும் பாமக, தொண்டர்களும் அதிமுக தொண்டர்களும் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி ராமதாஸ் மார்தட்டிக் கொண்டு வருவதால் பாஜக - அதிமுக தொண் டர்கள் பாமக மீது கடும் கோபத்தில் உள்ளனர். 


இந்த உண்மையைப் புரிந்துகொண்ட மருத்துவர் ராமதாசு" இந்த மாபெரும் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றால் வேறு எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது" என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி." நாடும் நமதே நாற்பதும் நமதே"!


- சி.ஸ்ரீராமுலு





;