districts

img

நிதியைப் பெற்று வா, புறாவே!

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சா ரம் திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியின் முருக பவனம் பகுதியில் புதன்கிழமை மாலை துவங்கியது.

வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசிய திமுக துணைப் பொது செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, ‘‘நமக்கு எதிரணியில் இருக்கும் வேட்பாளர்களில் ஒருவர் விருது நகரில் இருக்கிறார். இன்னொருவர் நெல்லைக்காரர். அவர்களை நம்மால் கண்ணால் கூட காண முடியாது. பார்த்தே ஆக வேண்டும் என்று சென்னைக்கு போனால் கூட அவர்களைக் காண முடியாது‌.

ஆனால், நமது சச்சிதானந்தம் அப்படி அல்ல; திண்டுக்கல் ஆபிஸிலேயே பார்க்கலாம். அவர்‌ நமது காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் தான் அங்கேயே‌ பார்க்கலாம். அவரே உங்களைத் தேடி வந்து விடுவார். மக்கள் பணியே மகேசன் பணி என செயல் படுபவர் தான் ஆர்.சச்சிதானந்தம்’’ என்று குறிப் பிட்டார்.

அவர் பேசி முடித்தவுடன் முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ‘இந்தியா’ கூட்டணி ஆதரவாளர் ஒருவர் புறா ஒன்றை அமைச்சர் கையில் கொடுத்து பறக்க விடுமாறு கூறினார். புறாவை வாங்கிப் பறக்க விட்ட பிறகு, இந்த புறா ஏன் பறக்க விடப்பட்டது என சச்சிதானந்தம் உங்கள் மத்தியில் கூறி வாக்கு சேகரிப்பார் என்றார். 

அதை தொடர்ந்து பேசிய வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்,  ‘‘இது புறாவிடு தூது அல்ல. இந்த புறா தில்லி வரை செல்லட்டும். புறாவை தில்லிக்கு அனுப்பி  நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருவதற்கான தூது இது’’ என்றார். அதைக் கேட்டு மக்கள் ஆரவார மாக கரகோஷம் எழுப்பினர்.

மேலும் மாலை நேரம் கிராமப்புற பகுதிகளில் நடை பெற்ற பிரச்சாரம் முழுவதும், 100 நாள் வேலையின் வேலை நாட்களை 150 நாளாக உயர்த்துவதோடு அதன் ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்துவது, சிலிண்டர் விலையை 500 ஆக குறைப்பது உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சரும் வேட்பாளரும் கூறியபோது, மக்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

பெரியார் நகரில் நடைபெற்ற வரவேற்பின் போது பெண்கள், வேட்பாளர் மற்றும் அமைச்சர் நின்றிருந்த பிரச்சார வாகனத்தின் முன் நின்று கும்ப மரியாதை செலுத்தி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஆரத்தி எடுத்த பிறகு தேங்காய் உடைக்க ஒரு மூதாட்டி எடுத்து சென்று தரையில் அடித்த போது, தேங்காய் உடையாமல் உருண்டோடியது. உடனே சத்து குறைஞ்சு போச்சு, இந்நேரம் தேங்காய் உடைஞ்சு இருந்தா நானே ஓடி வந்து எடுத்து இருப்பேன் என அமைச்சர் பெரியசாமி கூறவும் பிரச்சா ரத்தை கேட்க வந்த மக்கள் அனைவரும் சிரிப்பலை யில் மூழ்கினர்.

இப்பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் வீ.மாரி யப்பன், ஒன்றியச் செயலாளர் சரத் குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகணேஷ், காங்கிரஸ் மாநகர் கமிட்டி தலைவர் மணிகண்டன், விசிக செயலாளர் மைதீன் பாவா, திண்டுக்கல் திமுக ஒன்றியச் செயலாளர் வெள்ளிமலை, மா‌வட்ட துணைச் செயலாளர்கள் பிலால் உசேன், சின்ராஜ், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.பெருமாள் சாமி, பள்ளபட்டி ஊராட்சி தலைவர் பரமன், துணைத்தலைவர் தனலட்சுமி செல்லப்பாண்டி, மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள், கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

;