districts

img

தியாகி ஜெ.நாவலன் நினைவு பொதுக்கூட்டம்

திருவாரூர், ஜன.20-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் தியாகி ஜெ.நாவலன் 12-ஆம் ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். பேரளம் நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமரராஜா ஆகியோர் பேசினர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இறையூர், வேங்கைவயல் சம்பவம் நடந்து 25 நாட்கள் கடந்தும் உலகமே வெட்கி தலைகுனியும் வகையில், இழிவான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாமல் உள்ளது.  இந்நிலையில், தற்காலிக நடவடிக்கையாக சமத்துவ பொங்கல் என்று, பாதிக்கப்பட்ட மக்களை சரி கட்டும் வகையில், பொங்கல் விழாவை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது. அவர்கள் நம்பிக்கை பெற இந்த கொடுஞ்செயலை செய்த நபர் யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உறுதியாக எடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் 22 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. எனவே கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை எந்தவித சிரமமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை உரிய முறையில் பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
சிபிஎம்-மில் இணைந்த  மாற்றுக் கட்சியினர்
பொதுக்கூட்ட நிகழ்வின்போது, மாற்று கட்சியில் இருந்து வெகுஜன அரங்கமான இந்திய தொழிற்சங்க மையத்தில் பணியாற்றும் திருவாரூர் மாவட்ட சிஐடியு தலைவர் எம்.கே.என்.அனிபா, சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.  அதேபோல், நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள திருக்கண்டீஸ்வரம், பேலக்குடி, திருமீயச்சூர் பகுதியில் இருந்து 27 குடும்பங்களும், பேரளம் நகர பகுதியில் 12 குடும்ப உறுப்பினர்களும் தங்களை சிபிஎம் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  குருதிக் கொடை சான்றிதழ் மேலும் வாலிபர் சங்கத்தின் சார்பில் குருதிக் கொடை கொடுத்த இளைஞர்களுக்கு சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். பொதுக்கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட, ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள், மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;