districts

img

நிலமற்ற ஏழை விவசாயத்தொழிலாளர்கள் சாதிய ரீதியாக பிளவுபட்டு நிற்பது வேதனை சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால் அறிக்கை

 திருவள்ளூர், ஜூன் 26- தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தைக் கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகிலுள்ள ராஜா நகரம் ஊராட்சியில் 200 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். தமிழக அரசு    இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ்  1994 மற்றும் 2002ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் 107 தலித் குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 25 ஆண்டுகளைக் கடந்தும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நில அளவீடு செய்து இடத்தை ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தது. திருவள்ளூரில்  கடந்த மே மாதம் 22 ஆம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி சிபிஐ எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.   தமிழக அரசின் தலையீட்டின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் அடிப்படையில் திருத்தணி கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர்  ஜூன் 2 அன்று ராஜா நகரில் நிலத்தை அளவீடு செய்து தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒப்படைவு செய்தனர்.

இருபத்தி ஏழு ஆண்டுக் காலம் தங்களுக்குப் பட்டா வழங்கி யும் நிலம் கிடைக்காமல் விரக்தியி லிருந்த தலித் மக்கள் வீட்டு மனை கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என ஏக்கப் பெருமூச்சு விட்டனர். தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியதிலிருந்தே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒருபகுதி ஆதிக்க சாதியினர்  நிலத்தை அளவீடு செய்தபோது தடுக்க முயற்சித்தனர். பிறகு மறியல் போராட்டம் நடத்தினர். ஒரு வாரக் காலம் அரசின் அனைத்து திட்டங்களையும் புறக்கணிப்போம் என தங்களது குழந்தைகளைக்கூடப் பள்ளிக்கூடம் அனுப்பாமல் ஒரு வாரம் புறக்கணித்து வந்தனர். அரசு நிர்வாகம் தொடர்ந்து மக்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக 23.6.2022 அன்று இரவு மின் விளக்கை அணைத்துவிட்டு காவல்துறை பாது காப்பு இருந்தும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அளவீடு செய்து நடப்பட்ட அனைத்து அளவீடு கல்லையும் பிடுங்கிப் போட்டுள்ளனர். அடுத்த நாள் வருவாய்த் துறை காவல்துறை சென்று விசாரணை செய்து நட வடிக்கை மேற்கொண்டனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 24.6.2022 அன்று மாலை முதல் தொடர் மறியல் நடத்தி சாலை களில் மரங்களை வெட்டிப்போட்டு போக்குவரத்து தடை ஏற்படுத்தி  அங்குச் சென்ற வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை யினரைச் சிறை பிடித்து வைத்தும் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்கள் மீது கல்லெறிந்து காயம் ஏற்படுத்தியது போன்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

சமூகத்தில் அடித்தட்டில் வாழும் சாதாரண ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வீட்டுமனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வளவு நீண்ட போராட்டம் நடைபெறுவது வேதனையாக உள்ளது. ஆதிதிராவிட நலத்துறை மூலம்  நில உரிமையாளருக்கு நிலத்திற் கான இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து சட்டரீதியாக நிலத்தைப் பெற்று அரசுத் திட்டத்தின் கீழ்தான் தலித் மக்களுக்கு நிலம்  வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பது எப்படி நியாயமாகும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்ட மக்க ளும் பெரும்பகுதி நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களே. சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கல்வியின்மை வேலைவாய்ப்பின்மை  கடுமை யான விலைவாசி உயர்வு என அனைத்தும் இரு சமூக மக்க ளும் அன்றாடம் அனுபவித்து வரக்கூடிய தாகவே உள்ளது.

பொருளாதார ஏற்றத்தாழ்வை வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராட வேண்டிய சூழலில் சாதிய பாகு பாடு காரணமாகப் பிளவுபட்டு நிற்பது உழைக்கும் மக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தும். தங்களுக்கு பக்கத்தில் தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்கக் கூடாது எங்களுக்கு அருகிலேயே அவர்கள் வீடு கட்டி வசிப்பதா என்றெல்லாம் பேசுவது போராடுவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். ஒருவரின் வாழ்விட உரிமையைத் தடுப்பது மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைக்கு எதிரான செயலாகும். எனவே தலித் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தைக் கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்கவும் அமைதி நிலவவும் மக்கள் ஒற்றுமை காத்திட  முன்வருமாறும் தலித் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவர்கள் வீடு கட்டி வாழ்வதற்கும் அவர்களது வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பதற்கும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்.   சமூக நீதி காக்கும் இத்தகைய நடவடிக்கைக்கு அனைத்து சமூகத்தினரும் ஜனநாயக எண்ணம் படைத்தோரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;