districts

தனியார் பள்ளிகளில் மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

பொன்னமராவதி, ஜூலை 24 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய 6 ஆவது மாநாடு தோழர் டி.அழகுமீனாள் நினைவு அரங்கத்தில் எஸ்.லதா தலைமையில் நடைபெற்றது. நூறு நாள் வேலை நேரத்தை காலை 7 மணி என்பதை 9 மணிக்கு மாற்ற வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மாநில அரசு ஆய்வு செய்து, பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கந்துவட்டி கொடுமைகளை ஒழிக்க வேண்டும். பொன்னமராவதி பகுதிகளில் நடைபெறுகிற பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், குழந்தை திருமணங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ஒன்றியத் தலைவராக ஏ.ரோகிணி, செயலாளராக ஆர்.மதியரசி, பொருளாளராக கே.கலைச்செல்வி, துணைத் தலைவர்களாக எஸ்.லதா, அழகுமீனா, துணைச் செயலாளர்களாக ரேவதி, சி.தேன்மொழி மற்றும் 8 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், வாலிபர் சங்க நிர்வாகி கே.குமார், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி, ஒன்றியத் தலைவர் ஏ.செளந்தரராஜன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

;