districts

சாரண சாரணியர் பணி வாங்கித் தருவதாக மோசடி செய்த இருவர் கைது

விழுப்புரம், ஏப். 8-   சாரண, சாரணியர் பணி வாங்கித் தரு வதாகக் கூறி ரூ.45.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட விட்லாபுரம் சாலையில் வசிப்பவர் முரளி (33). பக்கத்து தெருவில் வசிப்பவர் சுரேஷ் (35). இவருக்கு தெரிந்த கோவையை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர். இவர், அரசுப் பள்ளியில் சாரண சாரணீயர் பணி வாய்ப்புள்ளதாக சுரேசிடம் கூறியுள்ளார். இந்த தகவலை முரளியிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதை நம்பிய முரளி கடந்த 20.7.2020 அன்று சுரேசிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பிறகு, திண்டிவனத்திலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பிரசாந்த் உத்தமனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு, வெவ்வேறு தேதிகளில் மேலும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை பிரசாந்த் உத்தமனின் வங்கி கணக்கிற்கு முரளி அனுப்பியுள்ளார். சில நாட்கள் கழித்து இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சாரணர் சின்னம் பொருத்திய வேலை வாய்ப்பு கடிதத்தை சுரேஷ் மூலமாக முரளிக்கு பிரசாந்த் உத்தமன் அனுப்பி யிருக்கிறார்.  2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வந்தவாசியிலுள்ள அலுவலகத்தில் முரளி பணியில் சேர்ந்த நிலையில் 3 மாதத்திலேயே திண்டிவனத்தில் சுரேசின் வீட்டில் இயங்கிய அலுவலகத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டு வேலை செய்து வந்ததாகவும், அதற்கு தினக்கூலி அடிப்படை யில் மாதம் ரூ.16 ஆயிரம் வீதம், 16 மாதத்திற்கு சம்பளம் கொடுத்து வந்துள்ளார். அதேபோல் செஞ்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறியதை நம்பிய ஜெயபால், மணிகண்டன், மணிமாறன், பாரதி, ராதா ஆகியோர் சுரேசிடம் தலா ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் வழங்கியுள்ளனர். மேலும் சிலரும் பணம் வழங்கியுள்ளனர். இப்படி மொத்தம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தை பிரசாந்த் உத்தமன், அவரது மைத்துனர் சங்கர் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். பணத்தை பெற்ற அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன், சுரேஷ், சீனிவாசன், சங்கர் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுரேஷ், சீனிவாசன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்த் உத்தமன், சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

;