court

img

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பிய மதத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு... பாஜக வழக்கறிஞரின் மதமாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றம் தீர்ப்பு....

புதுதில்லி:
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த மதத்தை தேர்வு செய்ய உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதமாற்றத்திற்கு தடை கோரிய பாஜக வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மதமாற்றம், சூனியம் போன்றவற்றுக்கு  தடை கோரியும், கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரியும்  பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில், நம் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது மதச்சார்பின்மை. ஆனால், பொருள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுவது, மிரட்டி மதம் மாற்றுவதுபோன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவை, அரசியல் சட்டத்தின், 14, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. இதுபோன்ற கட்டாய மற்றும் ஆசைக்காட்டி மதமாற்றத்தில் ஈடுபடுவோர், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பரப்புவோருக்கு, மூன்று முதல் பத்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கவும் வகை செய்யும் சட்டம் இயற்றும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம், சரியாக அமல் படுத்தப்படுவதில்லை. இதனாலும், கட்டாய மத மாற்றங்களினாலும் ஒன்பதுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இந்துக்கள் சிறுபான்மையாகி விட்டனர். அதனால், மக்கள் தொகைகட்டுப்பாடு சட்டத்தை, பாகுபாடின்றி முழுமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.

51 ஏ பிரிவின் கீழ் தங்கள் கடமையாக இருந்தாலும், சூனியம், மூடநம்பிக்கை மற்றும் வஞ்சக மத மாற்றத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மையமும் மாநிலங்களும் தவறிவிட்டன என்றும், இதுபோன்ற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்  முதல் 10 ஆண்டுகள் வரை  சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், பி.ஆர்.கவாய்மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு  நடைபெற்றது. அப்போது உபாத்யாயா தரப்பில், மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

அப்போது  நீதிபதிகள் ,  இது 32-வது பிரிவின் கீழ் என்ன மாதிரியான ரிட் மனுஎன கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவரை தனது மதத்தை தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன், “அரசியலமைப்பில்  பிரச்சாரம் என்ற சொல் இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது”, ஆனால் இதற்காக எந்தவொரு சொல்லும் இல்லை. இந்த விவகாரங்கள் தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு எந்தவொரு அனுமதியும் வழங்க முடியாது என்று மறுப்புதெரிவித்தனர்.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் மதத்தைத் தேர்வுசெய்ய  அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் விரும்பிய மதத்தை தேர்வு செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், சூனியம் மற்றும் மத மாற்றத்தைக் கட்டுப்படுத்த சட்ட அமைச்சகம்  மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களைக் கோரும் மனுவைஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து,மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டது.

;