articles

img

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் : சமூக நீதி பயணத்தில் ஒரு மைல் கல்...

“தமிழில் அர்ச்சனை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததை சாதித்துக்காட்டி விட்டது திமுக அரசு. சமூக நீதிப் போராட்டத்தை பெரியார் அறிவித்த நாள் ஆகஸ்ட்14. அன்றைய தினத்தில்பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 24 பேரைஅர்ச்சகர்களாக நியமித்து  கருவறைத் தீண்டாமையைஒழித்து வரலாறு படைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். ஏனெனில், இந்து சமய கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் பலரும் கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும். தமிழில் சொன்னால் புரியாது என்றுசொல்வதையே பெருமையாக நினைக்கின்றனர்.

தமிழில் வழிபாடு எதற்கு?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது. அரசாண்ட வேற்று மொழி அரசர்களும் தமிழை விட சமஸ்கிருதம் சிறந்தது என்ற எண்ணத்துடன் இருந்தனர். இதன் விளைவு, பழனி முருகன் கோவில் பரம்பரை பண்டாரங்கள் கத்திமுனையில் வெளியேற்றப்பட்டு, பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முழுமுதற் காரணமானது. அது முதல்தான் பழனி முருகனுக்குவட மொழியில் அர்ச்சனை தொடங்கியது.மறுபுறம், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்தொடக்க காலத்தில் கரையான் புற்றாகவே இருந்தது.அங்கு பூசை செய்தவர்கள் ஆகம விதிகளை பின்பற்றிபூசை செய்யவில்லை. பக்தர்கள் அதிகமாக, அதிகமாகவருமானமும் அதிகமானது. பிறகு, கோவில் புதிதாககட்டி குடமுழுக்கு முடிந்ததும், ஏற்கனவே பூசை செய்துவந்த பூசாரிகள் வெளியேற்றப்பட்டு சமஸ்கிருத அர்ச்சகர்களால் வைதீக பூசைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இத்தனைக்கும், கருமாரியம்மன் கோயில் சாக்தசமயக் கோவில் வகையில் உள்ளது. பெண் தெய்வ வழிபாட்டில் அமைந்த கோயில். ஆனால், அங்கு சாக்த தந்திரம் பின்பற்றப்படவில்லை. சைவ ஆகமமே பின்பற்றப்பட்டு வருகிறது.அதாவது, அரசாங்கத்தை தவிரவலிமையுள்ள எவரும் நடைமுறைகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலைமையை கண்கூடாக காணமுடிகிறது. இதை சட்டத்தின் மூலம் மாற்ற அரசு முயற்சிக்கும் போது மட்டுமே ஏற்கனவே அங்கு பூசைசெய்து வருபவர்கள் அதனை எதிர்த்து, ஆகமம் மீறப்படுகிறது என்று வாதிக்கின்றனர். இது முற்றிலும்தவறான வாதம் என்பதற்கு சாட்சியம் அளிக்கிறது உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய “கோயில்கள்- ஆகமங்கள்- மாற்றங்கள்” புத்தகம்.
கோவில்களில் தனிநபர் அர்ச்சனை என்பது முக்கியமான வழிபாட்டு முறையில் ஒன்றாக மாறிவிட்டது. அதை மாற்ற இயலாது. அது தேவையும் இல்லை.அதேநேரத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்பக்தி இலக்கியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தமிழ்வழி அர்ச்சனை முறை பரப்பப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார் நீதிபதி ராஜன்.“தமிழ்வழி அர்ச்சனை, வழிபாட்டு முறை அனைத்துகோவில்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அர்ச்சனைக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் அர்ச்சனையை செய்யலாம். தமிழ்அர்ச்சனையை கடவுளுக்கு ஏற்கும்” என்பதையும் அக்னிஹோத்திரி தாத்தாச்சாரியாரும் கூறியிருக்கிறார்‌.

புயல் ஒன்று புறப்பட்டது..!
இதற்கெல்லாம் அடிப்படை நோக்கம் உள்ளது.  அதுவேறு ஒன்றுமல்ல! அனைத்து சாதியினரையும் கோவில்கருவறைக்குள் அழைத்து செல்லும் போராட்டத்தை 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அறிவித்தார் தந்தைபெரியார். அன்றைக்கு கருணாநிதி முதலமைச்சர். அதனால் அவரது வேண்டுகோளை ஏற்று அந்தக் கிளர்ச்சி போராட்டம் கைவிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, எல்லோரையும் அர்ச்சகராக்க இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் சட்டப்பிரிவு 55, 56, 116-ல் திருத்தம் செய்தார். இதற்கான மசோதா 2.12.1970-ல் சட்டப் பேரவை, சட்ட மேலவை ஆகிய இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது. இதன்மூலம் பரம்பரை வழி அர்ச்சகர் முறைக்கு முடிவுரைஎழுதப்பட்டது.ஆத்திரமடைந்த பாரம்பரிய சேஷம்மாள் தரப்பு உச்சநீதிமன்றம் வரை சென்றது. 1972 மார்ச் 15 அன்றுநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,” சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட் டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்குட்பட்டே அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்” என்பதையே வலியுறுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசின் நோக்கத்திற்கு எதிராக அமைந்த நீதிமன்றத்தின் அந்த உத்தரவை பெரியார் கடுமையாக விமர்சித்தார்.இதற்கிடையில் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், கோவில்வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க 1982-ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.அந்தக் குழுவும் அனைத்து சாதியினரையும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கலாம் என்றது.ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாசன சட்டப்பிரிவு25 -2 ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது. அத்தோடு கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 2002ல் கேரள உயர்நீதிமன்றம், “ஆகமங்கள், மதப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் ‘எல்லோரும் சமம்’ என்ற இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்டரீதியாக செல்லாது என்று கூறி,அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், அன்றைக்கு ஆட்சி அதிகாரத்திலிருந்த ஏ‌.கே‌.அந்தோணி, உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

படிக் கற்கள்...
தமிழ்நாட்டில் கால்நூற்றாண்டு கால போராட்டத்திற்கு கலைஞர் ஆட்சியில் விடிவு கிடைத்தது. மீண்டும் 2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றும்அமைக்கப்பட்டது. அந்த குழு, அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூசை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னைபார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில்வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.இதற்காக சைவ-வைணவ பயிற்சிப் பள்ளிகளை திறந்து, இட ஒதுக்கீடு அடிப்படையில் 207 மாணவர்கள் இளநிலை பயிற்சி பெற்று தீட்சையும் சான்றிதழும்பெற்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசைவசிவாச்சாரியர்கள் திரும்பவும் உச்சநீதிமன்றம் சென்றுஅனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்திற்கு தடை உத்தரவுபெற்றனர்.

ஆதிக்க வெறி...
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிமுறைப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால் - அது ஆகம விரோதமே”என்று ‘துக்ளக்’ தலையங்கம் தனது வயிறு எரிச்சலைகொட்டித் தீர்த்துக் கொண்டது.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.இது, ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணி, பாஜகவின் கும்பலுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டியது. அரசு  நடத்திய பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனையும் தாக்கி தங்களது  பாசத்தைவெளிப்படுத்தினர்.

இதற்கிடையே, பாரம்பரியமான ஆகம முறை வழிபாடுகள் பொதுவாக பின்பற்ற வேண்டும். எங்கெங்கேதமிழில் அர்ச்சனை செய்வதற்கு அர்ச்சகர்கள் உரிய பயிற்சி பெற்று உள்ளனரோ, எங்கெல்லாம் தமிழில்அர்ச்சனை வேண்டும் என பக்தர்களிடம் தேவைஇருக்கிறதோ, அங்கெல்லாம் தமிழ் அர்ச்சனைக்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டினர்.தமிழில் அர்ச்சனை என்பது மட்டுமல்ல அனைத்துசாதியினரும் அர்ச்சகர் என்பதே முதன்மையாக இருக்கவேண்டும். ஆகம முறை வழிபாடு கட்டாயம் என்பதற்குமாறாக சமஸ்கிருதம் விருப்பமாக இருக்க வேண்டும்.தமிழிலும் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகையை சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை என்று மாற்ற வேண்டும்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் குரல் எழுப்பிக்கொண்டே வந்தன.

வழிகாட்டிய கேரளம்
இத்தகைய போராட்டங்களுக்கு பக்கபலமாக அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி வழிகாட்டியது கேரளத்தின் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு.இத்தகைய பின்னணியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பட்டியல் சாதியினர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனைக்கு செயல்வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்தி பல்லாண்டு காலமாக நீடித்து வந்த பிரச்ச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து கருவறை தீண்டாமை  இருள் அகற்றி பெரியாரின் லட்சியத்தை நிறைவேற்றியது தமிழக சமூகநீதி வரலாற்றில் ஒருமைல் கல்.

என்றாலும், 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றுசட்டம் கொண்டு வரப்பட்ட போது 7.6.2006 ‘துக்ளக்’ தனது தலையங்கத்தில், “அர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின் மீது பூக்களை விட்டெறிகிறவேலையல்ல. அதற்கென்று தனியாக படிப்பு இருக்கிறது.சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பூஜை விதிமுறைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.இதற்கு ஆழ்ந்தசம்ஸ்கிருத அறிவு தேவை. இவற்றையெல்லாம்வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாது. அதுஇயல்பாகவே வரவேண்டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும்” என்று குறிப்பிட்டது.கடந்த ‌காலத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமேகோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மற்றவர்கள் சாமியை கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள், ஆதிக்க வெறிபிடித்த சிலர் தற்போதும் சிலதீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க, வழக்க, மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று மீண்டும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். சமூக வலைதளங்களில் அவதூறு அனாச்சாரங்களை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இதையும் கவனத்துடன் முறியடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் இந்த  பயணத்திற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள்,  குறிப்பாக இடதுசாரி கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் பக்கபலமாக இருக்கிறார்கள்.உதாரணம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல் முருகனார், தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மேலும் 38 அமைப்புகளைச் சார்ந்தோர் தரப்பில் தங்களையும் எதிர் மனுதாரராக இணைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும், பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தப் பின்னணியில் சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,” அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று உறுதிபட அறிவித்துள்ளார்.அத்துடன் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் தொடங்கிய பயிற்சி பள்ளிகளுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்.

ஏற்கனவே அந்த பள்ளிகளில், அர்ச்சகர் பயிற்சிபெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாகபணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு  வயது வரம்பைத் தளர்த்தி படிப்படியாக பணி நியமனம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையைநிறைவேற்ற வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முதலமைச்சர் கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.தமிழ்நாட்டின் சமூகநீதி பயணத்தில் தொடர்ந்து பயணிக்க,” அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் பயிற்சிப் பள்ளியில் படித்த மாணவர்களை மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி போன்ற பெண் தெய்வ வழிபாடு, தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ள சிறுதெய்வ (நாட்டார்) வழிபாட்டு கோவில்களில் மட்டுமல்லாமல் சிதம்பரம் நடராஜர், சென்னை பார்த்தசாரதி, மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதர்  போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்து தமிழ் வழி அர்ச்சனைக்கு செயல்வடிவம் கொடுத்து தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற வேண்டும்.

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு

;