districts

img

சாலைக்கு மேல் புதிய சாலை தனியார் நிறுவனத்திற்கு சலுகை கட்டுவதாக புகார்

அவிநாசி, ஜூலை 3-  அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையம் செல்லும் சாலையில் ஏற்கனவே புதிய சாலை உள்ள நிலையில் மீண்டும் புதிய சாலை அமைக்கப்படுவது தனியார் நிறுவனத்தின் விற்பனை நோக்கத்திற்கு அரசு நிர்வாகம் துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  ஆட்டையாம்பாளையம் அருகில் நவகிரீன் மஹால் அமைந்துள்ளது. இதில் தற்போது ஜீ ஸ்கொயர் என்கிற ரியல்எஸ்டேட் நிறுவனம் மனைகளை பிரித்து விற்று வருகிறது.  இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஏற்கனவே தரமான சாலையாக உள்ளது. தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனம் மனை அமைக்கப்பட்டதிலிருந்து தரமாக உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையைக்கு மேல் புதிதாக சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம் கூறுகையில், ஆட்டையம்பாளையத்திலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டு சிதிலமடைந்து விட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். நெடுஞ்சாலை துறையினரும்  விரைவில் சாலைகள் போட்டு தருகிறோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போதுவரை சாலை வசதியை செய்து தரவில்லை. ஆனால் தரமாக இருக்கும் சாலைக்கு அதன் மீது மேலும் புதிய சாலை அமைக்கிறார்கள். அரசின் பணத்தை தனியார் நிறுவனத்தின் வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வகமும் தலையிட வேண்டும் என்றார்.

;