எப்பேற்பட்ட கலைஞர் அவர்; எப்பேற்பட்ட ரசிகர் இவர் ! அசாதாரண நட்புக்கு வயது 50
வரும் டிசம்பரில் 90 வயது நிறைவு செய்ய இருக்கும் துடிப்பு மிக்க இளைஞர் அவர். 3 மாதங்களுக்குமுன் தேசத்தின் முக்கியமான பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டவர் இவர். மிருதங்க சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படுபவர் அவர். நெடிய போராட்டத் தழும்புகளும், நாடாளுமன்ற சட்டமன்ற அனுபவங்களும் மிக்க தலைவர் இவர். உலகளாவிய அளவில் சாஸ்திரீய இசைக் கலைஞராகப் பேரும் புகழும் பத்ம விருதுகளும் பெற்றுள்ள மிருதங்க இசை மேதை உமையாள்புரம் கே.சிவராமன் அவர்களுக்கும், மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய சிந்தனையாளராகக் களமிறங்கி, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியராகத் தொடரும் பயணத்தில் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் எம். ஏ. பேபிக்கும் எப்படி ஒரு நட்பு உருவாகி ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி உயிர்ப்போடு இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தவே நிகழ்ந்தது போல் அமைந்தது ஞாயிறு (ஜூலை 13) காலை தி இந்து அலுவலகத்தில் நடைபெற்ற ஓர் எளிய சங்கமம். தி இந்து (ஆங்கிலம்) ஆசிரியர் சுரேஷ் நம்பத் எல்லோரையும் உற்சாகமாக வரவேற்க, இரு மாபெரும் ஆளுமைகளையும் தனக்கே உரிய சுவாரசியமான மொழியில் என். ராம் அறிமுகம் செய்விக்க அந்த நிமிடத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள் இருவருக்குமிடையே தொடங்கிய உரையாடல் ஒரு மாயாஜாலம் நிறைந்த வாண வேடிக்கையாக ஒளிமயமாக்கியது சூழலை. 1975இல் அவசர கால நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த நேரம். தலைமறைவாக இயக்கப் பணிகளில் ஓயாது நான் சுழன்று கொண்டிருந்த போது, அருகே ஒரு கோவிலில் நடக்கும் இசைக் கச்சேரியில் சிறிது நேரம் சென்று அமர்ந்து இளைப்பாற்றிக் கொள் என்று அனுப்பி வைத்தார் என் தந்தை என்றார் பேபி. நேரம் போவது அறியாது அந்த இசையில் திளைக்கும்போதே, அன்று பக்க வாத்தியமாக வாசித்த உமையாள்புரம் சிவராமனின் மிருதங்க தாள லயத்தில் சொக்கிப் போயிருக்கிறார் பேபி. எந்த அளவுக்கு எனில், வேறு ஒருவர் அதே பாணியில் வாசிப்பதை அதற்குப் பிறகு எங்கே கேட்டாலும் இவரது சீடராகத் தான் இருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு ! இந்த இடத்தில் குறுக்கிட்ட உமையாள்புரம் சிவராமன், மீதிக் கதையைச் சொன்னார். “இவர் எனது கச்சேரியைக் கேட்டு ரசித்தது தெரியாது. அதற்குப் பிறகு என் சிஷ்யன் அர்ஜுன் குமார் ஒரு கச்சேரியில் வாசிக்கவும், இவர் போய்க் கேட்டிருக்கிறார் நீங்கள் உமையாள்புரம் சிவராமனின் சீடரா என்று. அவர் வந்து என்னிடம், ஒரு எம்பி கேட்டார், அவர் பெயர் தெரியாது என்று. யாராக இருக்கும் என்று நான் திணறிக் கொண்டே இருக்கிறேன். நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்திற்காக சென்னை கன்னிமாராவில் வந்து தங்கி இருந்த பேபி அவராக என் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து உங்களை வந்து சந்திக்கலாமா என்றார், வாருங்கள் என்று சொல்லிவிட்டேன், நேரில் வந்து சொல்கிறார், நான் தான் அது என்று. கையோடு என் நண்பர்களுக்காக நீங்கள் வாசிக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டு போய்விட்டார், நள்ளிரவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது வாசிப்பு, என் மனைவி யாரோ என்னைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று பயந்துபோய் கன்னிமராவிற்கு அழைத்துக் கேடகுமளவு போய்விட்டது. என்னை பத்திரமாக அவர் கொண்டு வந்து வீட்டில் கொண்டு வந்து விட்ட நாளில் இருந்து தொடங்கி விட்டது மிகப் பெரிய நட்பு” என்று நாத்தழுதழுக்கக் கூறினார். அது மட்டுமல்ல, கேரளத்திற்கு எம். ஏ. பேபியின் அழைப்பில் எத்தனை எத்தனை முறை வெவ்வேறு அரங்குகளில் கச்சேரி செய்துவிட்டு வந்தார் உமையாள்புரம் என்பதைத் தொடர்ந்த உரையாடலில் இவர் தொடுக்க அவர் முடிக்க, அடுத்து அவர் எடுக்க இவர் தொடுத்து முடிக்க என்று சுவாரசியமான இசையனுபவங்களால் அந்தச் சிறு மேடை ததும்பிப் பொங்கிக் கொண்டிருந்தது. இசைக்கு மொழி கிடையாது, ஏன் இசையே ஒரு மொழி தானே என்றார் பேபி. திருவையாறு வழங்கிய மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி இசைத்த பாடல்கள் தெலுங்கு என்றாலும் இசை எல்லோரையும் சென்று தழுவவில்லையா ... தாளம் உயிரின் ஆதித் துடிப்பு. இதயத் துடிப்பே ஒரு தாளம் தானே. இந்த அண்டத்தில் யாவும் ஒரு குறிப்பிட்ட தாள லயத்தில் இயங்குவது தானே.... இசையின் நோக்கமே நல்லிணக்கம், அன்பின் அமைதி தானே... தாளம் மாறி தப்புத் தாளங்கள் (அப தாளம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார் பேபி) சிலர் போடும்போது தான் சமூகம் பதற்றம் அடைகிறது. உண்மையான இசைக்கு எந்த பாகுபாடுகளும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு, (தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த) நெய்யாற்றிங்கரை வாசுதேவன் பாட்டுக்கு நான் வாசிப்பேன் என்று முன் வந்தீர்களே என்று பேபி பாராட்டினார். இசை யாருக்கு வாய்க்கிறது என்பதுதான் முக்கியம், அது தான் அடிப்படை, அதன்மீது பெரிய கட்டிடங்கள் எழுப்பிக் கொள்கிறோம். இதில் சாதி, இனம், நிறம், மதம் இவற்றைப் பற்றி எனக்கு கேள்வி இல்லை. நான் பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளவன், ஆனால், நவீன கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு வாழ்பவன் என்றார் உமையாள்புரம் சிவராமன். அதற்கு பேபி, “திருவனந்தபுரத்தை அடுத்து ஓர் ஒதுக்குப்புற இடத்தில் குடியிருந்த நெய்யாற்றிங்கரை வாசுதேவனை நானே சென்று பார்ப்பேன் என்றார் சிவராமன், பிறகு நான் அவரை அழைத்துக் கொண்டு அந்தத் தெருவில் நுழையவும், என் வருகையை வியப்போடு பார்த்து எதிரே வந்த வாசுதேவன், என்னோடு உமையாள்புரம் வருவதைக் கண்டதும் திக்குமுக்காடிப் போய்க் கண்ணீர் சிந்தியதைப் பார்த்தேன்” என்றார். அம்ஜத் அலிகான், அல்லா ரெக்கா, ஜாகீர் உசைன், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்டு இந்துஸ்தானி இசைக் கலைஞர்களுக்கு வாசித்தது, தபேலா பயன்படுத்தும் இடத்தில் கதக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் அவர்களுக்கு வாசித்தது, ஐரோப்பிய சாக்ஸபோன் இசைக்கலைஞரோடு உருவான நட்பின் விளைவாக அங்கே பலமுறை சென்று வாசித்தது என்று உமையாள்புரம் அவர்களது பெருமைகளை அடுத்தடுத்துப் பகிர்ந்து கொண்டே இருந்தார் பேபி. தான் கேட்டுக் கொண்டதற்காக, முதுமையில் வாசிக்க மறுத்த புகழ்பெற்ற கலைஞர் முருகபூபதியிடம் தனது மிருதங்கத்தைக் கொடுத்து வாசிக்க வைத்து அந்தக் கச்சேரியில் தான் கஞ்சிரா வாசித்து அசத்தியவர் சிவராமன் என்றார் பேபி. செம்பை வைத்தியநாத பாகவதர், எம். எஸ். சுப்புலட்சுமி, மணக்கால் ரங்கராஜன், எம்.டி. ராமநாதன், புல்லாங்குழல் இசைக்கலைஞர் மாலி என்று இசை மேதைகளைக் குறித்த ஞானத்தோடு பேபி கேட்கக் கேட்க உரையாடலின் திசையெங்கும் இசை மணத்தது. எப்பேற்பட்ட ரசிகர் எனக்கு வாய்த்தார், இந்த நட்பு எப்போதும் தொடரும் என்று மலர்ச்சியோடு குறிப்பிட்டார் சிவராமன். புதிய தலைமுறையினருக்காக வாசிப்பதில் எந்தத் தடையுமில்லையா என்ற கேள்விக்கு, சிறு வயதில் வாசிக்க வந்த என்னை என் முன்னோடிகள் அங்கீகரித்து ஊக்குவித்து வாய்ப்புகள் தரவில்லையா, அதை இந்த சமூகத்திற்கு நான் திருப்பித் தர வேண்டாமா, செம்மங்குடி, செம்பை, ஜிஎன்பி, அரியக்குடி என்று இப்போது பாடுபவர்களில் இருந்து மேதைகள் வரவேண்டும் என்பது தான் என் அவா, நான்கு தலைமுறைகளுக்கு வாசித்துவிட்டேன், இனியும் வாசிப்பேன் என்றார் உமையாள்புரம் சிவராமன். பத்ம விருதுகள் வழங்குவதில் தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படுவதில்லை, அதிலும் பக்க வாத்தியக்காரர்களுக்கு அங்கீகாரம் போதாது, இது தான் உரிய மேடை என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன், மியூசிக் அகாதமி இதை உரிய முறையில் எழுப்ப வேண்டும், நமது மிருதங்க சக்கரவர்த்தி உமையாள்புரம் சிவராமனுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நிறைவாகக் குறிப்பிட்டார் எம். ஏ. பேபி.