tamilnadu

img

நடைமுறையில் இருப்பதை புதியது போல் அறிவிப்பதா? உப்புச்சப்பில்லாத வேளாண் அவசர சட்டம்

சென்னை:
நடைமுறையில் உள்ளதை ஏதோ புதிய சலுகைகளை விவசாயிகளுக்கு அறிவித்திருப்பதைப் போல வேளாண் அவசர சட்டம் மூலம் தெரிவித்திருப்பது தமிழக அரசின் தவறான செயல் என்றும் உப்புச்சப்பில்லாத வேளாண் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குப் படுத்துதல் ) சட்டம் 1987இல் சில சீர்திருத்தங்களை செய்திருப்பதாக மே 28ஆம் தேதி தமிழக ஆளுநர் அவசர சட்டம் பிறப்பித்து, அது மே 29 ஆம் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு செய்திக்குறிப்பை ஜூன் 1 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு புதிய நன்மைகளோ, பலனோ எதுவுமில்லை என்பதை ட்டிக்காட்டுகிறோம்.வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் வேளாண் விளை பொருட்களுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஒரு வாரத்திற்கு மேல் கிடங்குகளில் பொருட்களை வைத்தால் அதற்கு குறைந்தபட்ச வாடகை வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை கொண்டு சென்று விற்பதும், அதிக விலைக்கு ஏலம் கேட்கும் வியாபாரிகளிடம் பொருளை விற்பதும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. இப்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை ஏதோ புதிய சலுகைகளை விவசாயிகளுக்கு அறிவித்திருப்பதைப் போல அதிலும் அவசர சட்டம் மூலம் தெரிவித்திருப்பது தமிழக அரசின் தவறான செயல் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. விவசாயிகளுக்கு அரசு ஏதாவது செய்துகொண்டே இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற அதீத ஆர்வத்தின் காரணமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, நிழற்கூட வசதி கூட இல்லாமல் விவசாயிகள் வெயில், மழை, பனியில் கஷ்டப்படுவதும், கழிப்பறை, குடிதண்ணீர் வசதி கூட இன்றி, திறந்த வெளியில் வேளாண் விளை பொருட்களை அடுக்கி வைக்கும் நிலைதான் இருக்கிறது. விற்பனை செய்த பொருட்களுக்கு உடனுக்குடன் பணம் கொடுப்பதற்கான ஏற்பாடு எதுவுமில்லாமல் வாரக்கணக்கில் விவசாயிகள் காத்திருக்க வேண்டி யுள்ளது. விவசாயிகளுக்கு அரசு ஏதாவதுஉதவி செய்ய நினைத்தால் மேற்கண்ட குறைகளை களைவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.அத்துடன், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச கட்டுப்படியான விலையை அரசு தீர்மானிக்காமல் வியாபாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் வரையில் விவசாயிகளுக்கு விடிவு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, உப்புச் சப்பில்லாத இந்த அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;