tamilnadu

img

பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தும் அரசை கண்டித்து ஜூன் 23ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:
அநியாயமாக உயர்த்தப்படும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 23 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஆட்டோ சம்மேளனம் மற்றும் சாலைப்போக்குவரத்து சம்மேளனம் கூட்டாக அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளனம்(சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கொரோனா என்னும் கொடிய நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையான வறுமையோடும், துன்ப துயரங்களோடும் வாழ்ந்து வருகிறார்கள். மக்களின் வறுமையை போக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நிவாரணத்தையும் வழங்கவில்லை.வாகனங்களை இயக்குவதன் மூலம் வாழ்க்கை நடத்தும் ஆட்டோ, சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் வறுமையின் எல்லைக்கே சென்றனர்.

கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட நாட்கள் வாகனங்கள் சாலைகளில் இயங்காமல் முடங்கி கிடந்தன. தற்போது இயங்க ஆரம்பித்த நாள்முதல் தினந்தோறும் மத்திய மாநில அரசுகள் டீசல், பெட்ரோல், எரிவாயு விலைகளை ஏற்றி பாக்கெட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச காசையும் பறிக்க துவங்கியுள்ளது.சர்வதேச சந்தையில் கடுமையாக கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், அதன் பலன்கள் வாகன ஓட்டுனர்களுக்கோ, பொதுமக்களுக்கோ கிடைத்துவிடக்கூடாது, என்கிற நோக்கில் பலமடங்கு வரிகளை ஏற்றி கொள்ளையடிக்கிறது.

தனியார் நிறுவனங்களை வாழவைக்க ஏழை எளிய ஓட்டுநர்கள் மீது எந்த தாக்குதலையும் நடத்த தயாராகி வருகிறது என புரிந்து கொள்ள முடிகிறது.வருமானம் குறைந்து வாழவழி தெரியாமல் திண்டாடி நிற்கும் நிலையில்  டீசல்-பெட்ரோல் விலைகளை உயர்த்தி வாகனஓட்டுநர்கள் மீதான தாக்குதலை தொடுத் துள்ள மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஜூன் 23 அன்று அனைத்து ஆட்டோ நிறுத்தங்கள், வேன், டாக்சி, கால் டாக்சி நிறுத்தங்களில் ஆயிரக் கணக்கான மையங்களில்  காலை 11 மணி முதல் 11.30 வரை ஆர்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;