tamilnadu

img

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்க: தொல்.திருமாவளவன்

சென்னை:
கொரோனா பேரிடர் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக் கான தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா பேரிடர் பாதிப்பு அதிகரித்ததால் ஒரு சில தேர்வுகள் மட்டுமே எஞ்சி இருந்த சூழலில் ஒத்திவைக்கப்பட்டன.  அந்த தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது.தற்போது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கொரோனாவால்  பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.  அது மட்டுமின்றி இந்தியா முழுவதுமே கொரோனா நோய்த்தொற்று  வேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தச் சூழலில் மாணவர்களைத் தேர்வு எழுத வைப்பது என்பது அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே எழுதப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு தேர்வு முடிவுகளை அறிவிப்பது பற்றி சிபிஎஸ்இ பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மத்திய அமைச்சருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “ஜூலை மாதத்தில் நடத்த உள்ள தேர்வுகளை மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கையின் அடிப்படையிலும்; உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலும் முற்றாக ரத்து செய்துவிட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து இதில் முடிவு அறிவிக்கப்பட்டால் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திலிருந்து விடுபட அது உதவியாக இருக்கும்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

;