tamilnadu

img

ரஜினிக்கு வருமானவரி விலக்கு விஜய் வீட்டில் மட்டும் சோதனையா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

கோவை:
நடிகர் ரஜினிக்கு மட்டும் வருமான வரி விலக்கு அளித்துவிட்டு, நடிகர் விஜய் வீட்டில்மட்டும் சோதனை நடத்துவதா? என்று சிபிஎம்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளியன்று கோவையில்  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வருகிறது. இந்தியாவில்  பாஜக அரசு கொரோனா வைரசை விட மோசமாக மக்களை வாட்டி வதைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்கனவே மிகப்பெரும் வரிச்சலுகையை கொடுத்துள்ளது. தற்போது பட்ஜெட்டிலும் அதிக வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி உள்ளிட்டவைகளின் பங்குகளை தனியாருக்கு விற்பது, கல்வி, சுகாதாரம், கிராமப்புறமேம்பாடு, நூறுநாள் வேலை திட்டம் ஆகிய மக்கள் வாழ்வாதார திட்டங்களுக்கான நிதியை பெருமளவு குறைத்துள்ளது.

மத்திய அரசின் இத்தகைய மோசமான அறிவிப்புகளைக் கண்டித்து வரும் 12ஆம்தேதி முதல் 18ஆம் தேதி வரை இடதுசாரிக்கட்சிகள் இணைந்து கண்டன இயக்கங்களை நடத்த உள்ளோம். வீடு வீடாக துண்டறிக்கை வழங்குவது, மாவட்ட, வட்டார, ஒன்றியங்களில் ஆர்ப்பட்டங்கள் நடத்த உள்ளோம்.நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். வருமான வரி சோதனை நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. வருமானம் அதிகம் வருபவருக்கு அதிகம் வரி விதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது  கோரிக்கை. அதேநேரத்தில் சோதனை என்ற பெயரில் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விசாரணை அதிகாரிகள் காரில் அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர். நடிகர் விஜய் ஒன்றும் தீவிரவாதி அல்ல. சம்மன் அனுப்பியிருந்தால் நேரில் வந்து ஆஜராகியிருப்பார். பல திரைப்படங்களில் விஜய் பாஜகவை விமர்சித்த காரணத்திற்காக வருமான வரி சோதனை என்கிற பெயரில் மிரட்டுவதாக தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மாற்றுக்கருத்து உள்ளவர்களை மிரட்டுவதையும், பணிய வைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

விஜய் வீட்டில் நடக்கும் சோதனையும், நடிகர் ரஜினிக்கு வருமான வரித்துறை சலுகை அளித்ததையும் வேறுவேறான நடவடிக்கையாக பார்க்க முடியவில்லை. வட்டிக்கு வட்டி வாங்கினார் என்பதற்காகவிலக்கு என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதற்குமுன்பு வருமானவரித்துறை நடத்திய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்ன?என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்து இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. வேண்டியவர்களுக்குஒரு அணுகுமுறையும், வேண்டாதவர்களுக்கு ஒரு அணுகுமுறையும் வருமான வரி துறை கையாள்கின்றது.தமிழகத்தில் பாஜக குரல் எடுபடாத  நிலையில் ரஜினியின் குரல் மூலம் தாங்கள் நினைத்ததை பாஜக செய்ய முயல்கிறது. ரஜினி தனியாக புதிதாக எதுவும் பேசவில்லை.  அமித்ஷா, மோடியின் குரலாக ரஜினி பேசுகின்றார். அதனால் தான் பாஜக கொண்டுவரும் சட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். குடியுரிமை சட்டம் குறித்து ரஜினி நேரடியாக எங்களுடன்  விவாதிக்க தயாராஎன கேள்வி எழுப்பினார்.

பேரறிவாளன் மனு மீது ஆளுநர் சுதந்திரமாகவும், சட்டப்பூர்வமாகவும் முடிவெடுக்கலாம். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் மத்திய அரசும், மாநிலஅரசும், கவர்னர் அலுவலகமும்  கண்ணாமூச்சி ஆடுகின்றனர் என்றார். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிஏஏ சட்டம்தொடர்பாக எதிர் கட்சிகள் பொய் சொல்வதாக பிரதமர் மோடி மக்களவையில் குற்றம் சாட்டுகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் குடியுரிமை சட்ட விதிகள் திருத்தப்பட்டதாக கூறுகிறார். ஆனால் அவர் தான்பொய் சொல்கிறார். குடிமக்கள் பதிவுக்கானவிதிகள் 2003ல் வாஜ்பாய் பிரதமராகவும், எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது தான் உருவாக்கப்பட்டது. மாநிலங்களவையில் குடியுரிமைதிருத்த சட்டம் குறித்து பிரதமர் மோடி பொய் சொல்கின்றார். மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேர்வதற்காகத்தான் என்பிஆர் என்கிறார். குடிமக்கள் பதிவேட்டிற்கும் மக்கள் நல திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் காரணம் என்று சொல்வதும் தவறானது. யாரையும் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாதிக்காது என்றால் குடியுரிமை சட்டமே தேவையில்லை.  இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.
இந்த பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.

;