science

img

சந்திரயான் 2 : நாளை அதிகாலை தரையிறங்குகிறது விக்ரம் லேண்டர்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.

இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய  கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதை அடுத்து, கடந்த 2-ஆம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. இந்நிலையில், விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மெதுவாக நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. ஒரு நொடிக்கு ஒரு செ.மீ தூரமே செல்லும். நிலவில் அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்த ரோவர் ஆய்வுப் பணியில் ஈடுபடும். சூரிய சக்தியை பயன்படுத்தி செயல்படும் இந்த பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் கருவியோடு தொடர்பில் இருந்தபடி தகவல்களை அனுப்பும். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 14 நாட்கள் செயல்படும். இதில் தனிமங்களின் அளவினை அளக்கப் பயன்படுவது உள்பட 13 வகையான கருவிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளன.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை இஸ்ரோ, இணையதளத்திலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.

;