world

img

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை மிரட்டும் கொலம்பியா பல்கலைக்கழகம்

வாஷிங்டன்,ஏப்.24- பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமை தெரிவித்து கூடாரம் அமைத்துப் போராடி வரும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களை அமெரிக்க தேசிய காவல் படையை வைத்து துரத்துவோம் என பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை யில் பங்கு வகித்து வரும் இஸ்ரேல் ஆதரவு மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களுடனான கல்வி உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும் அந்த  நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் அனைத்து வகையான நிதிகளையும் பல்கலைக்கழகம் நிறுத்திக்கொள்ள  வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்  கூடாரம் அமைத்து கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் “உங்கள் கூடாரங்களை காலி செய்து போராட்ட த்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் தேசிய காவல் துறை  அழைக்கப்படும்” என பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டியுள்ளது.  ஏப்ரல் 18 அன்றே நியூயார்க் நகர காவல் துறை அம்மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக  வன்முறையை ஏவியும் மாண வர்களின் உடமைகளை பறிமுதல் செய்தும் 122 மாணவர்களை கைது செய்தனர். காவல் துறையின் இந்த வன்முறை பல்கலைக்கழக தலைவர் மினௌஷே ஷபிக் ஆதரவுடன் நடை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் போராட்டத்தை திரும்பப்பெறாமல் உடனடியாக   மற்றொரு முகாமை ( கூடாரங் களை ) அமைத்து போராட்டத்தை உறுதியாக  தொடர்ந்தனர்.  கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த வன்முறை தாக்குதல் அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக  போராட்டத்தில்  இறங்கியுள்ளனர்.  கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தியது போன்றே யேல் மற்றும் மின்ன சோட்டா பல்கலைக்கழக வளாகங்களிலும் காவல்துறை வன்முறையை அரங்கேற்றி யுள்ளது. எனினும் அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையில் 14 ஆயிரம் குழந்தைகள் உட்பட  34 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

;