world

img

கைவிரித்தது இங்கிலாந்து.... மருந்து அனுப்பியது ரஷ்யா....

லண்டன்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.  பல  நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அறிவித்துள்ளன.சில நாடுகளிலிருந்து மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்துள்ளன. கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மற்றும் குணமடைய உதவும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளை வழங்குவது உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் முழுமையான உதவிகளை உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் அமெரிக்கா செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்கு தேவையான இயந்திர பாகங்களையும் நாங்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.  இந்தியாவுக்கு தடுப்பூசிகளை எப்பொழுது எங்களால் அனுப்பி வைக்க முடியும் என்பது பற்றியும் இந்திய பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இங்கிலாந்து அளித்துள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்து சுகாதார அமைச்சர்  மேன் ஹேன்காக் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதுள்ள சூழலில் இந்தியாவுக்கு வழங்குவதற்கான கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் எதுவும் எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.“இந்திய-ரஷ்ய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷ்யா கணிசமான உதவிகளை வழங்கும். இதற்காக ரஷ்ய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்ய தலைமை முடிவு செய்துள்ளது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு 22 டன் எடை கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 2 விமானங்களில் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.'

;