tamilnadu

இராமநாதபுரம், திண்டுக்கல் , மதுரை, தேனி முக்கிய செய்திகள்

அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

இராமநாதபுரம், ஜூலை 2- நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில், பரமக்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் ஓய்வு

சின்னாளபட்டி, ஜூலை 2- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய எம்.சுந்தரவடிவேலு பணி நிறைவு பெற்றார். இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படி பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் (கூட்டுறவியல் துறை) பொ.சுப்புராஜ் பொறுப்புதுணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் மருத்துவ முகாம்

மதுரை, ஜூலை 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை செல்லூர் மணவாளன் நகர் பகுதிமக்களுக்கு கட்சி- தாணு ஹோமியோ மருத்துவாமனை, ஏ.ஆர் மெடிக்கல் இணைந்து ஹோமியோ மாத்திரைகளை வழங்கின. பகுதிக்குழுச் செயலாளர் ஜா. நரசிம்மன், மாமன்ற முன்னாள் உறுப்பினர் க.திலகர், பாலசுப்பிரமணியன், வி. கோட்டைச்சாமி, கருப்பையா, சி.திலகர், மகாலிங்கம், செல்வராஜ், பாண்டி, கருப்பசாமி, மருத்துவர்கள் மீனாட்சிசுந்தரம், பாண்டியராஜன், ரேவதி, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கணவன், மனைவி தற்கொலை

கடமலைக்குண்டு, ஜூலை 2- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (55). இவருடைய மனைவி போதுமணி (48). இவர்களுக்கு ஜெயபிரபு என்ற மகனும், ஜெயசீலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருணம் முடிந்து ஜெயபிரபு கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். ஜெயசீலாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டநிலையில் அவர் தற்போது காமன்கல்லூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.  கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் ராஜாவின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் ராஜா செய்து வந்து பஞ்சு வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ராஜாவின் மனைவி போதுமணிக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி ஏற்பட்டுவந்துள்ளது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. வறுமை மற்றும் நோய் பாதிப்பு காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராஜா மற்றும் அவரது மனைவி போதுமணி ஆகியோர் தற்கொலை செய்துகொள் முடிவு செய்தனர். வியாழக்கிழமை காலை மலையடிவாரத் தில் போதுமணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.  அதே இடத்தில் உள்ள மரத்தில் ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி திருமணம்

திண்டுக்கல், ஜூலை 2- திண்டுக்கல்லில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் திருமண நிகழ்வுகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டின் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்ற திருமணத்தில் கட்டுப்பாடுகளை மீறி கூடுதலான மக்கள் பங்கேற்றனர். இதை காவல்துறை அதிகாரிகளோ சுகாதாரத்துறை அதிகாரிகளோ கண்டுகொள் ளவில்லை. திருமணத்திற்கு அனுமதி வழங்கிய மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கருத்து தெரிவித்தனர்.

;