tamilnadu

img

சாதிய இழிவுகளைக் கெட்டிப்படுத்திய மோடியின் ‘ஸ்வச் பாரத்’ - திகேந்தர் சிங் பன்வார்

‘ஸ்வச் பாரத் இயக்கம்’ (Swach Bharat Mission) அனைவரின் வேலை என பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. மேலும், தொன்று தொட்டு இருந்து வரும் சாதிய நடைமுறைகள் மேலும் கெட்டிப்படுத்தப்பட்டுள் ளன. அத்தகைய சாதிய இழிவுகளை மேலும் வலுப்படுத்தும் துறையாக அதை மாற்றியது தான் மோடி அரசின் சாதனையோ?

கடைக்கோடியில் இந்தியா!

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (Environment Performance Index - EPI)வரிசைப்படுத்தப்பட்டுள்ள 180 நாடு களில் இந்தியா கடைக்கோடியில் உள்ளது. காலநிலை மாற்றம், செயல்திறன், சுற்றுச்சூழல்,ஆரோக்கியம் மற்றும்  சுற்றுச்சூழல் அமைப்பு உயிர்சக்தி ஆகியவை இந்த குறியீடு களுக்குள் அடங்கும். 11 அம்சங்களில் 40 வகையான செயல் திறன்களை இது பட்டியலிடுகிறது. இந்தியாவின் புறச் சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த முறை தவறானது என்று மோடி அரசு குறை கூறியுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை நிராகரித்துள்ளது.

வாய் வழி வெற்றுப் பிரச்சாரம்!

கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சி வளர்ச்சி என்று மோடி அரசு உடுக்கை அடித்து வருகிறது. ஸ்வச் பாரத் மிஷன், புத்து ணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அட்டல் மிஷன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் தேசிய தூய்மைக்கான காற்று திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பணிகளுடன் சுற்றுச்சூழல் செயல் திறன் குறியீடு இணைக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த பணிகள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஸ்வச் பாரத் மிஷன் என்பது தண்ணீர் துப்புரவு மற்றும் சுகாதாரம் பிரச்சனைக்கு  தீர்வாக முன் வைக்கப்பட்டது. அதேபோல நகரத்தின் சுத்தமான எரிசக்தி தேவைகளையும் வழங்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தான் அதிகரித்து வருகிறது என்பதை நாம் கண்டோம்.

ஸ்வச் பாரத் திட்டம் தோல்வி - ஏன்?

இதன் இரண்டாவது கட்டத்தை எடுத்துக் கொள்வோம். 2021-ல் இது துவங்கியது. அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாததாக மாற்றுவதே நோக்கம் என்றார்கள். இந்தியாவில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பணிகள் சாதியம் பரவலாக்கப்பட்டதோடு நேரடியாக தொடர்புடையதாகவே இருக்கிறது. வரலாற்று ரீதியாக தாழ்த்தப்பட்ட சாதியினர் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். மோடி அரசு துப்புரவு என்பது அனைவரின் வேலை என்று கதை அளந்தாலும் பழைய நடைமுறைகளே தொடர்கின்றன என்பதுதான் உண்மை. இந்தத் திட்டத்தை எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்க்க வில்லை. குறை கூறவில்லை. பெரிய மூலதனம் கொண்ட தொழில்நுட்பங்கள் உதவியுடன் அரசு நிறுவனங்களால் முழுத் திட்டமும் வடிவமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் விளைவு என்ன?

கழிப்பறை கட்டுவதில் குளறுபடி

திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஒரு நாடு என மோடி அரசு கூறுகிறது. ஆனால் உண்மை நிலை வேறு.  2020 ஆம் ஆண்டின் அரசின் தலைமை பொது கணக்கீட்டா ளர் அறிக்கை, இந்த திட்டம் வெற்றி குறித்து பல கேள்வி களை எழுப்புகிறது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிப்பறை களின் தரம் மிகவும் குறைவானது என குற்றம் சாட்டியுள்ளது. சில பெரு நகரங்களில் குடிசைப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு இன்னும் பொதுக்கழிப்பறைகள் கட்டப்பட வில்லை என்று, நகரமயமாக்கல் குறித்த சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில் கூட கழிப்பறை கட்டுமானம் கழிவு சுத்திகரிப்போடு இணைக்கப்படவில்லை. புறநகர் பகுதிகளில் உருவாகும் மலக்கசடு, சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும் அளவிற்கு திறந்த வெளியில் விடப்படு கிறது. கழிவுநீர் தொட்டிகள் துப்புரவு தொழிலாளர்களால் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெறும் கைகளால் சுத்தம் செய்யப்பட்டு பல்வேறு நீர்நிலை அமைப்புகளில் கொண்டு கொட்டப்படுகிறது.

சுகாதார சீர்கேடுகள் அதிகரிப்பு!

கழிவு மேலாண்மையில் மனிதர்களை ஈடுபடுத்துவதைக் குறைத்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பணிகளை ஸ்வச்பாரத் திட்டத்தில் மேற்கொள்வோம் என்று மோடி அரசு படம் காட்டியது . ஆனால்  இந்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது. கழிவு மேலாண்மை சரிவர பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடுகள் புதிதாக ஏற்படுகின்றன. நகரமயமாக்கலின் வடிவங்களும் தொழில்நுட்பங்களும் இந்தத் திட்டத்தை கைவிட்டன. விளைவு, உள்ளாட்சி அமைப்புகள் செய்வதறியாது திகைத்து நின்றன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான கழிவகற்றும் பணிகள் அவுட்சோர்சிங் என்று வெளி முகமைகளுக்கு விடப்பட்டன. அந்த நிறுவனங்களும் கழிவுகளை கையாள அதே பட்டியலின சமூகங்களை வேலைக்கு அமர்த்தின.

பெருநகரங்களில் என்ன நிலை?
நகரங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை பணிகளில் மோடி அரசு தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதாக கூறியது. கழிவிலிருந்து ஆற்றல் மற்றும் மீத்தேன் பிரித்தெடுப்பதற்கு இவை உதவுகின்றன என  பெரிதாக விளம்பரங்கள் வெளிவந்தன. ஆனாலும், இரண்டுமே தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. ரூபாய் ஒரு கோடி மதிப்பிற்கும் குறையாத சாலை துப்புரவு இயந்திரங்கள் - குப்பைகளை ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு கொண்டு செல்ல - அதிக வாகனங்கள் வாங்குமாறு நகராட்சி நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப் பட்டன. அத்தகைய திட்டங்களுக்கு நகராட்சி நிர்வாகத்திற்கு நிதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் துப்புரவு பணியைக்  கூட லாபம் ஈட்டும் வணிகமாக மாற்றத்  துடிக்கும் நகரத்தின் பெரிய ஒப்பந்தக்காரர்களிடம் இத்தகைய பணிகள் ஒப்படைக்கப்படு கிறது. இந்த ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தலித்துகள். இப்படியாக, அரசுக்கு முழுமையாக சொந்தமான ஒரு திட்டம் பொது சுகாதார சேவைகளை தனியார் ஆகும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது; சாதிய பாகுபாடும் நீடிக்கிறது.

மோடியின் வளர்ச்சி இலக்குகள் தவறானவை!

சுற்றுச்சூழல் செயல்திறன் என்பது பலவற்றை உள்ளடக்கியது. அதன் ஒரு அம்சத்தை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டாலே மோடி அரசின் வளர்ச்சி திட்ட செயல்முறைகள் எந்த அளவிற்கு ஓட்டைகளும் இடைவெளி களும் நிறைந்தது என்பது தெளிவாகும். மோடி அரசின் பிற பகட்டான திட்டங்களிலும் இத்தகைய குறைபாடுகள் நிறையவே உண்டு. இந்த தோல்விகள் தான் இந்தியாவின் சுற்றுச்சூழல் செயல் திறனை குறைக்கிறது. அவருடைய வளர்ச்சி இலக்குகள் முன்மாதிரிகள் சரியானது அல்ல என்பது மட்டும் தெளிவாக அம்பலமாகிறது.

நன்றி : தி இந்து (ஆங்கிலம்) 25/4/24
தமிழில் : கடலூர் சுகுமாரன்

 





 

;