tamilnadu

img

தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் துரோகம்.... பாஜக அரசின் தொங்கு சதையாக இருக்கும் அதிமுகவை வரலாறு மன்னிக்காது.... மதுரை மாநாட்டில் சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா கடும் சாடல்....

மதுரை:
தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் மத்திய பாஜக அரசின் தொங்கு சதையாக நடந்து கொண்டிருக்கும் அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா சாடினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் வியாழனன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கொங்கு நாடு மக்கள் கட்சி ஆர்.ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகி அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சி.மகேந்திரன், கே.சுப்ப ராயன் எம்.பி., எம்.செல்வராசு எம்.பி.,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டைத் துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் கருவி. மத்திய-மாநில அரசுகள் மக்கள் நல அரசுகளாக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கு மாறாக அரசியல் சட்டத்தை நாசப்படுத்தும் வேலையை ஆர்எஸ்எஸ்செய்துவருகிறது. மதச்சார்பின்மை யை சீர்குலைத்து பாசிசத்தை புகுத்துகிறது.

நாட்டின் செல்வங்களையும், உற்பத்திச் சாதனங்களையும்  டாடா, பிர்லா, அதானி, அம்பானி உருவாக்கவில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள்தான்  உருவாக்கினார்கள். நம் கையில் இருக்க வேண்டிய செல்வங்களை  கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க சட்டங்களை மோடி அரசு திருத்துகிறது.வள்ளுவர், பிசிராந்தையார், ஔவையார் என தமிழ்ப்புலவர்களை மேற்கொள் காட்டும் பிரதமர், தமிழ்ப்புலவர்கள் காட்டிய வழியில் அறநெறியில் ஆட்சி நடத்தவில்லை.

தமிழகம், கேரளம், வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தோ்தல் களின் முடிவுகள் எப்படியிருக்கும எனபிரதமா்  மோடிக்கு இப்போதே தெரிந்துவிட்டதால், அந்த மாநிலங்களுக்கு அடிக்கடி சென்றுவரு கிறார். மோடி தனது கொள்கைகளை மாற்ற மாட்டார். மோடியையே நாம் மாற்ற வேண்டும். அதற்கு தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சித்தத்துவம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் பறிக்கப்படுகிறது. பாஜகவின் எடுபிடியாக, தொங்கு சதையாக உள்ள எடப்பாடி அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை.கல்வியை காவிமயமாக்கும் பாஜக அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறது. கல்வி தனியார்மயமானால் பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்விக்கு எங்கே செல்வார்கள்? சென்னை ஐஐடி-யில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? அதானி, அம்பானி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப் படுகிறதா?வாழ்வதற்காக போராட வேண்டி யுள்ளது. போராடுவதற்காக வாழ வேண்டியுள்ளது. நாங்கள் “போராட்ட அறிவு ஜீவிகள்”  தான் என்பதை ஒப்புக்கொள்கிறோம். மோடியும் அவரது அரசும் “அதானி, அம்பானியின் அடிமை ஜீவிகள்” என்பதை ஒப்புக்கொள்வார்களா?

தமிழகத்தின் உரிமைகளுக்காக அதிமுக உறுப்பினர்கள் குரல்கூட கொடுக்காமல் அரசியல் பிழை செய்து வருகின்றனர். இவர்களை சரித்திரம் மன்னிக்காது. பெரியார் பிறந்தமண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை. தமிழக மக்களை மோசடி செய்து வெற்றிபெற முடியாது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக-விற்கு பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

;