tamilnadu

img

வெறுப்பு அரசியலால் மக்களின் சிந்தனையை கெடுத்துவிட்டார்கள் : பாஜகவைத் தோற்கடித்தே தீர வேண்டும்

மும்பை:

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்களின் ஆட்சி தொடரக் கூடாது என்றும், ஒருவேளை பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வருமானால், அடுத்து தேர்தலே நடக்காது என்று திரைப்படக் கதாசிரியரும் நடிகருமான திக் மான்சு துலியா கூறியுள்ளார்.


உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரத்தைச் சேர்ந்தவரான திக்மான்சு துலியா,தன்னுடைய திரைக்கதைகளை பெரும்பாலும் அரசியலை மையப்படுத்தியே அமைப்பவர். ‘என்னைச் சுற்றி நடப்பவற்றின் மீது எனக்கிருக்கும் ஆர்வம் தான் இத்தகைய படங்களை உருவாக்க என்னைத் தூண்டுகின்றன’ என்று அவரே அடிக்கடி கூறுவதைக் கேட்கமுடியும்.


துலியா 1986-இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அவருக்கு மாணவர் இயக்கங்களுடன் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. அந்த பிணைப்புதான், துலியாவை, அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்தது.2003-ஆம் ஆண்டு இவரது முதல் திரைப்படமான ஹாசில் (Haasil), அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்களுக்கும் குண்டர் படைகளுக்கும் இடையே நடைபெற்ற தகராறுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அந்த சமயத்தில் இவரே ஒரு மாணவராக, நடைபெற்ற சம்பவங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தவர் என்பதால், அப்போது நடந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு ஹாசில் திரைப்படத்தை எடுத்திருந்தார்.

நாட்டில் மதவெறி சக்திகள் வன்முறை மூலமாக வளரத்தொடங்கியிருந்த காலத்தில் ஹாசில் வெளிவந்தது. அதனை துலியா மிகவும் நுணுக்கமாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அப்போது பாஜகவின் மூலம் துளிர்விட்ட வன்முறை அரசியல், நூற்றாண்டின் இறுதியில் வலுவான சக்தியாக மாறி, ஆட்சியையே பிடித்துவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் அதன் பிரதமரானார். அதே சமயத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற மாநிலக் கட்சிகளும் வளரத் தொடங்கியிருந்தன. இவை அனைத்தையும் இலைமறை காய்

மறைவாக துலியா தன் படத்தில் காட்டியிருப்பார்.


படத்தில் வந்த கௌரிசங்கர் பாந்தே என்னும் கதாபாத்திரம் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவராகவும், அவரை எதிர்க்கும் கதாபாத்திரமான ரன்விஜய் சிங், சமாஜ்வாதிக் கட்சி

யைச் சார்ந்தவராகவும் படத்தில் காட்டப்பட்டிருப்பார்கள். இதனை துலியா வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அவர்களின் வாக்குவாதங்களை ஆராய்பவர்கள் அதனை எளி

தாக ஊகித்துணர முடியும்.


2011-இல் வெளியான சாகேப் பீவி அவுர்காங்க்ஸ்டர் (Saheb ¡õiwi Aur Gangster) என்ற திரைப்படமும் அரசியல் சம்பந்தப்பட்டது தான். துலியா கம்யூனிஸ்ட் கட்சி எதிலும் உறுப்பினராக இருந்ததில்லை என்ற போதிலும், அவர் ஓர் இடதுசாரி சிந்தனையாளராகத்தான் இருந்தார்.தற்போதும், இருக்கிறார். அண்மையில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு மும்பை திரும்பிய திக்மான்சு துலியாவை, ‘தி இந்து’ நாளிதழ் செய்தியாளர் பேட்டி கண்டபோது, விரிவான முறையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


தான் எடுக்கவிருக்கும் இணைய தொடர் ஒன்றுக்காக துலியா, வட இந்திய பல்கலைக் கழகங்கள் சிலவற்றின் வளாகங்களுக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது மாணவரிடையே காணப்படும் அரசியலை ஆராய்ந்திருக்கிறார். அதனடிப்படையில், “அரசியலில் தற்போது காணப்படுவது போலவே, மாணவர் அரசியலும் இருள் சூழ்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது,” என்ற வருத்தத்தை துலியா வெளிப்படுத்துகிறார்.


“மாணவர்கள் மத்தியில் நுகர்வுக் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. எல்லாமே இப்போது பணத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. முன்பு அது தலைமை மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்போது அது பல்கலைக் கழகங்களில் நடைபெறும் பல வேலைகளுக்கு ஒப்பந்தங்களைப் பெறுவது எப்படி? என்று மாறியிருக்கிறது,” என்றும் தெரிவிக்கிறார்.


“தங்களின் காலத்தில், பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரி சிந்தனைதான் மாணவர்கள் மத்தியில் குறைந்தபட்சம் நல்ல புத்தகங்களை வாசிக்க வகை செய்தன” என்று சுட்டிக்காட்டும் துலியா, “சிறந்த எழுத்தாளர்களான கார்க்கி, டால்ஸ்டாய் நாவல்களைப் படித்தோம். சரியானமுறையில் சிந்திப்பதற்கான அடித்தளம் அப்போதுதான் எங்களிடையே ஏற்பட்டது.


எங்களில் நல்ல மாணவர்களை இடதுசாரி இயக்கங்கள்தான் உருவாக்கின,” என்றும் பெருமைப்பட குறிப்பிடுகிறார்.“ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் அல்லது தில்லிப் பல்கலைக் கழகம் தவிர்த்து வேறெங்கும் அநேகமாக இப்போது இடதுசாரிகள் இல்லை. இந்திய மாணவர் சங்கம் (SFI) தவிர, மற்ற அனைத்து இடதுசாரி அமைப்புகளின் மாணவர் சங்கங்களும் அகில இந்தியமாணவர் சங்கம் (AISA) என்கிற குடையின்கீழ் வந்துவிட்டன” என்று கூறும் அதேநேரத்தில், “மாணவர்கள் மத்தியில் தீவிர வலதுசாரிகள் வளர்ந்திருப்பதானது, இடதுசாரிகள் மீண்டும் உருவாவதற்கும் வழிவகுத்திருக்கிறது,” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


“கெட்டிப்படுத்தப்பட்ட தத்துவம் ஒன்று வலதுசாரிகளிடம் இருக்கிறது, இல்லையேல் இடதுசாரிகளிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதமான தத்துவமும் கிடையாது. ஆனாலும், அது, தன்னை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்கிறது.இடதுசாரிகள் இறந்திருக்கலாம், அல்லது இடதுசாரி என்று எவருமே இல்லாதும் இருக்க

லாம். ஆனாலும், வலதுசாரிகள் இப்போதும் அரண்டுபோய்தான் இருக்கிறார்கள். யானை இறந்தால்கூட பயமுறுத்தும் என்கிற பழமொழிக்கிணங்க அவர்கள் அஞ்சுகிறார்கள். அத

னால்தான் அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், திரைப்படக் கழகம் போன்ற நிறுவனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்” என்று துலியா மதிப்பிடுகிறார்.


எப்படி ஒருவர் வாக்களிக்க வேண்டும்?

‘ஒருவர் எப்படி வாக்களிக்க வேண்டும்?’ என்ற தொலைக்காட்சித் தொடர் ஒன்றை துலியா,அண்மையில் வெளியிட்டார். அதில், நீங்கள் வாக்களிக்கும் நபர், இந்தியாவின் சமூக வலைப்பின்னலை அழிக்கக்கூடிய நபரா, இல்லையா என்பதை ஆராய்ந்து பார்த்து, வாக்களியுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார். உண்மையான பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு, அதாவது வேலைவாய்ப்புகள் போன்றவற்றை மனதில் இருத்தி இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


வரவிருக்கும் காலங்களில் தேர்தல்கள் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் வாக்களியுங்கள்; 2019 தேர்தல் கடைசித் தேர்தலாக இருந்துவிடக் கூடாது;

வலதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அத்தகையதொரு நிலைமை ஏற்படலாம் என்றும் எடுத்துரைத்து இருந்தார்.அதையே நேர்காணலிலும் குறிப்பிடும் துலியா, “இப்போதுள்ள ஆட்சியாளர்கள் தற்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தினை மதிக்காதவர்கள்,” என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்.


நரேந்திர மோடி அரசாங்கம் குறித்து கூறும் துலியா, “எவர் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம். ஆனாலும் இதுபோன்ற ஒன்றாக அது இருக்கக்கூடாது. இப்போதைய ஆட்சி நாட்டை மட்டும் பாழாக்கிடவில்லை, மாறாக நாட்டு மக்களையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிடுகிறார்.

“இவர்களின் ஆட்சியால் நாட்டில் ஏற் பட்டுள்ள பொருளாதார சீர்குலைவுகள், சமூகச்சீரழிவுகளைக்கூட பின்னால் வரும் வேறோருவர் எளிதாகச் சரிசெய்திட முடியும். ஆனால், இவர்களால் விதைக்கப்பட்டு வெறுப்பு அரசியலால் வீணாகிப்போயுள்ள மக்களை யார் சரி செய்வது?” என்று துலியா மிகவும் கோபத்துடன் வினவுகிறார்.

“இதுபோன்றதொரு நிலைமை முன்பு இருந்ததில்லை,” என்றும் “முன்பு பாஜக அரசாங்கம் இருந்தபோது கூட இந்த அளவுக்கு மோசமான நிலைமை இருந்ததில்லை,” என்றும் துலியா கூறுகிறார்.


“நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ, அதைச் சொல்வதற்கான உரிமை என்னிடம்இருந்து பறிக்கப்படக்கூடாது. பல்வேறு விதமான கருத்துக்களையும் சமூகம் கேட்க வேண்டும். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளன்.நீங்கள் ஒரு பத்திரிகையாளர். நான் என் கருத்தை என் படத்தில் சொல்ல அனுமதிக்கப்படாவிட்டால், நீங்கள் உங்கள் கருத்தை உங்கள் எழுத்தில் கொண்டுவர அனுமதிக்கப்படாவிட்டால், பின்னர் நான் படம் எடுப்பதில்தான் என்ன அர்த்தம் இருக்கிறது? நீங்கள் பத்திரிகையில் எழுதுவதில்தான் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்றும் துலியா கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.


(நன்றி: தி இந்து)

 தமிழில்: ச.வீரமணி


;