tamilnadu

img

இந்தியனாக பெருமை கொள்ள முடியவில்லை... காஷ்மீர் விவகாரத்தில் அரசு தவறிழைத்து விட்டது

புதுதில்லி:
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளை ரத்து செய்ததன் மூலம், மத்திய பாஜக அரசு தவறு செய்து விட்டதாகவும், இந்தியா இதுவரை பாதுகாத்து வந்த, ஜனநாயக மாண்பை இழந்து நிற்பதாகவும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவி-க்குஅளித்த பேட்டியில், அவர் மேலும்கூறியிருப்பதாவது:“பெரும்பான்மையினர் ஆட்சிசெய்தால் என்ன ஆகும்? என்பதற்கு உதாரணமாக காஷ்மீர் விவகாரம் மாறியுள்ளது. ஒரு இந்தியனாக இந்த முடிவு எனக்குப் பெருமை அளிக்கவில்லை. உலக அளவில், ‘தான் ஒரு ஜனநாயக நாடு’ என்று காட்டுவதில் இந்தியா முனைப்போடு செயல்பட்டது. மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால், ஜனநாயகப் பாதையை தேர்வு செய்த முதல் நாடு இந்தியாதான். ஆனால் இப்போது அந்த மாண்பை இழந்து விட்டோம். காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்குச் சொந்தமான நிலப்பகுதி. காஷ்மீரில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் சிறை வைத்துவிட்டு உண்மையான நீதியை மத்திய அரசால் நிலைநாட்ட முடியாது. ஜனநாயகம் வெற்றிகரமாக திகழ்வதற்கான காரணிகளையும் இதன் மூலம் நசுக்கி விட்டோம். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறப்படுகிறது. முன்பு காலனியாதிக்கவாதிகள் இதைத்தான் கூறினார்கள். இதைச் சொல்லித்தான் பிரிட்டிஷார், நம் நாட்டை 200 ஆண்டுகள் ஆண்டார்கள். தற்போதோ, நமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் இப்படி காலனியாதிக்க நடவடிக்கையில் இறங்குகிறோம். இது சரியல்ல. ஜனநாயகவழியில் அல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அமர்த்தியா சென் கூறியுள்ளார்.

;