tamilnadu

போராட்டங்களின் மூலம் கம்யூனிஸ்டுகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

திருப்பூர் மாவட்டத்தில்  தீக்கதிர் நாளிதழ் சந்தாதொகை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் அ.சவுந்தரராசன் பேசியதாவது: சுதந்திரப் போராட்டக் காலத்தில் முழு சுதந்திரம் என்பதை முன்வைத்ததே கம்யூனிஸ்டுகள்தான். காந்தியடிகள் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய சமயத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் இங்கு உருவானது. தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சாமானிய மக்களின் பொருளாதார விடுதலையுடன் கூடிய முழு சுதந்திரத்திற்காக கம்யூனிஸ்டுகள் பாடுபட்டார்கள். 1942 ஆம் ஆண்டு நாடு முழுவதும்  மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. காந்திய வழி சுதந்திரப் போராட்ட கொள்கை மாறி, கிளர்ச்சியாக வெடித்தது. கப்பல் படை போராட்டத்தில், கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்த பிரிட்டிஷ்  கொடியை இறக்கிவிட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கொடியைகப்பற்படை வீரர்கள் ஏற்றினர். ஆனால் இந்த போராட்டத்தை ஆதரிக்காமல், போராட்டத்தைக் கைவிடும்படி கப்பற்படை வீரர்களை காங்கிரஸ், முஸ்லிம் லீக் கைவிட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகள்தான் மிகப்பெரும் கிளர்ச்சிகளை நடத்தி அந்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பம்பாய் உள்ளிட்ட நகரங்களில் எழுச்சியை உருவாக்கினர்.

நாடு விடுதலை பெற்ற பிறகும் இந்தியாவில் மொழி வழி மாநிலம், மாநில உரிமை, பொதுத்துறை உருவாக்கம் என கம்யூனிஸ்டுகளின் கொள்கை முழக்கங்களின் காரணமாகத்தான் ஆளும் காங்கிரஸ் அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசியல்அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, வரம்புக்கு உட்பட்ட அதிகாரத்துடன் கூடிய திரிபுரா, மேற்கு வங்கம்போன்ற சட்டமன்றத் தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்ததை சித்தாந்த தோல்வி என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு, கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு தோல்வி கிடையாது. மோசடி செய்து வலதுசாரிகள் பெற்றிருக்கும் வெற்றி அதிக காலம் நீடிக்காது.சென்னை கடற்கரையில் மிகப்பெரிய சுதந்திரப் போராட்டம் வெடித்தது. காவல் நிலையத்தை நோக்கி பேரணி வந்து கொண்டிருந்தது.அப்பொழுது காமராஜர் வாகனத்தில் வந்து பேரணியில் சென்றவர்களை தடுத்து நிறுத்தியும், பேரணி சென்று கொண்டிருந்தது. இறுதியாக காவல் நிலையம் வந்தடைந்தது. பிரிட்டிஷ்காவல் அதிகாரியை சூழ்ந்து கொண்டு வந்தே மாதரம் என முழக்கமிட சொன்னார்கள் போராட்டக்காரர்கள். வெள்ளைக்கார காவல் அதிகாரியும் வந்தே மாதரம் என்று முழக்கமிட்டார்.சுதந்திரப் போராட்டக் காலத்தில்  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்திற்கு கடுமையான இரட்டைஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் தொழிற்சங்க அமைப்பை ஏற்படுத்தியதுதான். தமிழகத்தில் தந்தை பெரியாரை சோசலிச கொள்கையில் கொண்டு வந்து சேர்த்தது சிங்காரவேலரும் ஜீவாவும்தான்.

காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. பாஜகவின்அடுத்த இலக்கு, கேரளா , தமிழ்நாடு குறி வைத்துள்ளது. வருகின்ற காலகட்டத்தில் தமிழகத்தையும் கூட கோயில் இருக்கின்ற இடங்களிலெல்லாம் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கக் கூட செய்யும் பாஜக அரசு. இதற்கு முன்னோட்டம்தான் காஷ்மீர்.கம்யூனிஸ்டுகள் மக்களுடன் நெருக்கமான உறவு கொண்டு வலுவான போராட்டங்களின் மூலம் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.

;