tamilnadu

img

முசாபர் அகமது - என்.ராமகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - 2

தாஷ்கண்ட்டில் எம்.என்.ராய் முதல் கிளையை உருவாக்கி வந்த நேரத்திலேயே  இந்தியாவில் மூன்று கம்யூனிஸ்ட்டுகள் மூன்று நகரங்களில் தோன்றினர். அவர்களில் ஒருவர் வங்கத்தில் தோன்றிய, மக்களால் ‘காகா பாபு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் முசாபர் அகமது.

சிங்காரவேலருக்கு அடுத்த படியாக மூத்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரான முசாபர் அகமது, இன்றைய வங்க தேசத்தில் உள்ள முசாபர்பூரில் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையார் மன்சூர்அலி நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். ஆனால் முசாபர்அகமது சிறுவனாக இருந்தபொழுதே அவர் இறந்துவிட்டார்.  முசாபர் அகமது சாந்த்விப் கார்கில் உயர்நிலைப்பள்ளியிலும், பின் நவகாளி மாவட்டப் பள்ளியிலும் படித்து 1913ஆம் ஆண்டின் மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் ஹூக்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த முசாபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. பின்னர் அவர் கல்கத்தா மாநகராட்சி ஊழியரானார். தொடர்ந்து டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு அச்சமயத்திலேயே வங்காளி, ஆங்கிலம், உருது, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் நல்ல பரிச்சயம் இருந்தது. அதே சமயத்தில் வங்காளத்தில் பரவி வந்த தேசிய இயக்கம் அவரை ஈர்த்தது. எழுத்து ஆர்வம் கொண்டிருந்த அவர் கல்கத்தாவில் செயல்பட்டு வந்த முஸ்லிம் சாகித்ய சமிதியிலும் பின்னர் வங்காள சாகித்ய சமிதியிலும் உறுப்பினரானார். அரசாங்கத் தலைமை நிலையத்தில் எழுத்தராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 

1916ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்க ஆரம்பித்த முசாபர் 1917ஆம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாடுகளிலும் பார்வையாளராக கலந்து கொண்டார். 1918ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை ‘வங்காள முஸ்லிம் சாகித்ய சமிதியின்’ முழு நேர ஊழியரானார். இலக்கியமா அல்லது அரசியலா எந்தப் பணியை தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்த முசாபர் இறுதியில் அரசியல் பணியை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவரும் அவருடைய நெருங்கிய நண்பர் கவிஞர் நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் பஸ்நூல் கக் ஆகிய மூவரும் சேர்ந்து ‘நவயுகம்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கினர். இதில் தொழிலாளர்களை குறித்து கட்டுரை எழுதுவதற்காக முசாபர் துறைமுகத்திற்கு சென்று அங்குள்ள தொழிலாளிகளை சந்தித்துப் பேசி விவரம் சேகரித்தார். ஒரு முறை தொழிலாளிகள் மீது காவல்துறை கடும் அடக்குமுறையை ஏவியபொழுது இந்தப் பத்திரிகை அதை வன்மையாக கண்டித்தது. இதனால் கோபமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அந்தப் பத்திரிகையின் காப்புத்தொகையை பறிமுதல் செய்தது. 

1921ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. காலேஜ் சதுக்கத்தில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் தொழிலாளர் பிரச்சனை குறித்த புத்தகங்கள் விற்கப்படுகின்றன என்ற தகவல் முசாபருக்கு கிடைத்ததும் அவர் அங்கே விரைந்து சென்றார். அங்கே லெனின் எழுதிய ‘போல்ஷிவிக்குகள் நீடித்து ஆள முடியுமா?’, ‘இடதுசாரி கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு’ ஆகிய புத்தகங்களையும் ‘மக்களுடைய மார்க்ஸ்’ எந்த நூலையும் வாங்கினார். அது அவருக்கு மார்க்சியம் குறித்து ஒரு கருத்தை ஏற்படுத்தியது. அதன்பின் “வான்கார்ட்” (முன்னணிப்படை), ‘அட்வான்ஸ் கார்ட்’ (முன்னணி காவலன்), ‘சர்வதேச செய்தி பரிமாற்றம்’, ‘இந்திய மக்கள்’, ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ போன்ற பல கம்யூனிஸ்ட் இதழ்கள் அயல்நாட்டிலிருந்து வர ஆரம்பித்தன. இவையனைத்தும் முசாபருக்கு சர்வதேச நிலைமையையும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள உதவி செய்தது. 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த சௌகத் உஸ்மானி என்பவர் கல்கத்தாவிற்கு வந்த முசாபர் அகமதைச் சந்தித்துப் பேசினார். முசாபர் குறித்து ஏற்கெனவே எம்.என்.ராய் கேள்விப்பட்டிருந்தார். எனவே அவர் இப்பொழுது உஸ்மானியை அனுப்பி முசாபருடன் தொடர்பு கொண்டார். இந்த விபரங்கள் கல்கத்தா காவல்துறைக்கு தெரியவந்தவுடன் அவர்கள் முசாபரை தொடர்ந்து பின்தொடர ஆரம்பித்தார்கள். முசாபர் அயல்நாடுகளுக்கு வரவேண்டுமென எம்.என்.ராய் அழைத்தார். கல்கத்தா துறைமுகத்திலிருந்து அயல்நாடுகளுக்குச் செல்லும் கப்பலில் எடுபிடி வேலைக்காக ஆட்கள் எடுப்பார்கள். அவ்வாறு ஐரோப்பா செல்லலாம் என முசாபர் முடிவு செய்தார். ஆனால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கப்பலில் பணி செய்ய முடியாது. எனவே வறுமையில் வாடிவந்த முசாபருக்கு உடல் முழுவதும் சிரங்குகள் இருந்ததால் அவர் செல்ல இயலவில்லை. 1923 ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று சௌகத் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஒரு நாள் கழித்து முசாபர் அகமதுவும் கைது செய்யப்பட்டார். முசாபர் அகமது புது அலிப்பூர் மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டார். பின்னர் டாக்கா மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரை செய்தது போன்றே ஆங்கிலேய அரசாங்கம் சௌகத் உஸ்மானியையும் குலாம் உசேனையும் விசாரணையின்றி சிறையிலடைத்தது. 

நாளை தொடரும்...

;