tamilnadu

img

ராமர் கோயில் பெயரில் பலகோடி வசூல்... அடித்துக் கொள்ளும் அயோத்தி சாமியார்கள்

புதுதில்லி:
ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்வதில் முக்கியத்துவம் யாருக்கு என்பதில் அயோத்தி சாமியார்கள் இடையே மோதல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.ராமர் கோயிலை நாங்கள்தான் கட்டுவோம்; எங்களிடமே கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை, நிர்மோகி அகாரா, திகம்பர் அகாரா, விஎச்பி, ராமாலயா அறக்கட்டளை என பல அமைப்புகளும் களத்தில் குதித்துள்ளன.“புதிதாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதால், பணத்துடன் அரசு அதிகாரிகளின் உழைப்பும் வீணாகும். எனவே, 34 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப் பட்டு என் தலைமையில் உள்ள அறக்கட்டளையே போதுமானது” என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவரான நிருத்திய கோபால்தாஸ்(81) கூறியுள்ளார்.

ராமஜென்ம பூமி அறக் கட்டளையை நிர்வகித்து வரும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) சர்வதேச துணைத் தலைவரான சம்பக் ராயும் “எங்களது அறக்கட்டளையின் முழுமையான மேற்பார்வையுடன் அயோத்தியில் ராமர் கோயில் அமையும். நாங்கள் செய்துவைத்த கட்டுமானப் பணிகள் மூலம் முதல்தளம் உடனடியாகத் தயாராகி விடும்” என்று தெரிவித்துள்ளார்.ஆனால், ராமர் கோயிலைக் கட்டுவதில் முனைப்புக் காட்டும் விஸ்வ ஹிந்து பரிசத்திற்கு, தற்காலிக ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்தர்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.“ஜம்முவின் மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் இருப்பது போன்ற அறக்கட்டளை இங்கு ராமருக்கும் அமையவேண்டும். 

அறக்கட்டளை எனும் பெயரில் அயோத்தியில் ஒரு அமைப்பு (விஎச்பி) பல வருடங்களாக ஊழல் செய்து வருகிறது” என்று சாடியுள்ளார்.இதே கருத்தையே, மற்றொரு முக்கிய சாமியார்கள் சங்கமான நிர்மோகிஅஹாரா-வின் தலைவர் மஹந்த் திரேந்திராதாஸூம் தெரிவித்துள்ளார். “ராமர் கோயிலின் பெயரால் விஎச்பி வசூல் செய்த தொகையை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எந்த அமைப்பின் தலையீடும் இன்றி மத்திய அரசே தனது அறக்கட்டளையை நிறுவ வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.“பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் வழிகாட்டுதலின் பேரில் அமைந்த எங்கள் அறக்கட்டளையில் நான்கு சங்கராச்சாரியார்களும் உறுப்பினர் களாக உள்ளனர். எனவே, கோயில் கட்டும் பணியை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று ராமாலயா அறக்கட்டளை என்ற அமைப்பும் புறப்பட்டுள்ளது. இதன் செயலாளரான அவ்முக் தேஷ்வரானந்த் என்பவர், தில்லிக்குச் சென்று இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

;