tamilnadu

img

நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுப்பதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சு.வெங்கடேசன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
நாடு முழுதும் நிலத்தடி நீர் சட்டவிரோத மாக எடுக்கப்படுவதைத் தடுத்திட மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய நீர் சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா எழுத்துமூலம் பதிலளித்தார். நாட்டின் பல பகுதிகளிலும் நீரின் தேவைஅதிகரித்திருப்பதும், போதிய அளவிற்கு மழை பெய்யாது பொய்த்துப்போனதும், மக்கள் தொகைப் பெருக்கமும், தொழில் மயமும், நகர்மயமும் நிலத்தடி நீர் ஆழமாகச் சென்றிருப்பதற்குக் காரணங்களாகும்.

நீரைப் பாதுகாப்பதும் குறிப்பாக நிலத்தடி நீரை மேலாண்மை செய்வதும் மாநில அரசின் பொறுப்பாகும்.எனினும், நிலத்தடிநீரை முறைப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்து வதற்காக, 1986 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், மத்திய நிலத்தடி நீர் அதிகாரக்குழுமம் (CGWA-Central Ground Water Authority) அமைக்கப்பட்டு, நாடு முழுதும் நிலத்தடி நீரின் பாதுகாப்பை மேலாண்மை செய்து வருகிறது.இந்த அதிகாரக்குழுமம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் வழிகாட்டுதல்களின்படி, குடிமக்களுக்கு நிலத்தடி நீரை எடுப்பதற்கு, தடையில்லாச் சான்றிதழ்கள் (No objection certificates) வழங்கி வருகின்றது.தமிழ்நாட்டிலிருந்து வரப்பெற்ற தகவலின்படி, மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக, மாநில அரசாங்கம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. மேலும் மத்திய நிலத்தடி நீர் அதிகாரக்குழுமமும் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்/கோட்டாட்சியர் மற்றும் மத்திய நிலத்தடி நீர் அதிகாரக் குழுமத்தின் மண்டல இயக்குநர்களுக்கும் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் அளித்திருக்கிறது  என்று அமைச்சர் பதில் கூறியுள்ளார். (ந.நி.)

;