tamilnadu

img

பாஜக ஐ.டி. பிரிவின் வேலையை நீங்கள் பார்க்காதீர்கள்.. நேரு மீதான ஜெய்சங்கரின் விமர்சனத்திற்கு ராமச்சந்திர குஹா பதிலடி

புதுதில்லி:
எழுத்தாளர் நாராயணி பாபு எழுதிய ‘வி.பி. மேனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், இந்த விழாவில் கலந்துகொண்டார். பின்னர், அந்தப் புத்தகம் குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டஜெய்சங்கர், “நாராயணி பாபுவின் புத்தகத்தின் மூலம், 1947-ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல்கட்ட மத்திய அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரு இட மளிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இது விவாதத்துக்குரியது” என்று கூறியிருந்தார்.

எதிர்பார்த்ததைப் போலவே, இந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. நாட்டின் முதல்பிரதமரான நேரு மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த பதிவு இருப்பதாக பலரும் ஜெய்சங்கருக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.அந்த வகையில், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவும், ஜெய்சங்கருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெய்சங்கர் கூறுவது கட்டுக் கதை. ‘தி பிரிண்ட்’ ஏட்டில் பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய கட்டுரையால், இந்தக் கட்டுக்கதை ஏற்கெனவே அம்பலப்படுத்தப்பட்டு விட்டது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நவீன இந்தியாவை கட்டமைத்தவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவது வெளியுறவுத்துறை அமைச்சரின் பணி அல்ல. அந்த வேலையை பாஜக தொழில்நுட்ப பிரிவுக்கு விட்டுவிட வேண்டும்” என்றும் கடுமையாக சாடியுள்ள குஹா,  “நீங்கள் ஜேஎன்யு-வில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர்; எனவே, என்னை விட அதிக புத்தகங்களை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.அதில் நேருவுக்கும் படேலுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தும் இருக்கும். அதில் படேலை ‘வலுவான தூண்’ என்று கூறி அமைச்சரவையில் இடம்பெற நேரு விரும்பியதும் பதிவாகியிருக்கும். மீண்டும் அந்தப்புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டும்” என்று ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூம், “ஜூலை 19, 1947 முதல் ஆகஸ்ட் 14, 1947” வரை நேரு எழுதிய கடிதங்களை வெளியிட்டு அதில் ஒவ்வொரு பட்டியலிலும் படேல் பெயர் பட்டியலில் முதலிடத்தில் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

;