tamilnadu

திருப்பூரில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், ஏப். 5 –

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பதற்றமானதென கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிச்சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ள 2482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1028 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதில் முதற்கட்டமாக 386 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. இதையடுத்து வெள்ளியன்று திருநீலகண்டபுரம் வடக்கு, எம்எஸ் நகர் நிர்மலா மெட்ரிகுலேசன் பள்ளி, பாளையக்காடு வடக்கு, ஏஎஸ் பண்டிட் நகர், எக்.கே.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, போயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

;