tamilnadu

வெளிநாடுகள் சென்று திரும்பிய 36 பேர் திருப்பூரில் தீவிர கண்காணிப்பு

திருப்பூர், பிப். 18 – வெளிநாடுகள் சென்று திரும்பிய 36 பேரை பொது சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள சீனாவைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களில் சீனாவின் பிற பகுதிகள், ஜப்பான் ஆகிய நாடுகளில் தீவிரமாக இந்நோய் பரவி வருகிறது.  இந்நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சீனாவில் இருந்து திரும்பிய 31 பேர் உள்பட வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு திரும்பிய 36 பேரை மாவட்ட பொது சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். சீனாவில் படிக்கச் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்ரீதியாக வெளிநாடு சென்று திரும்பியோர் அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என்றும் பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

;