tamilnadu

img

மதம் கடந்த மனித நேயமே ஜிப்ஸி

காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்கள் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் கதைக் களமாக அமைந்துள்ளன. சாதி, மத அரசியலும் இதனால் உருவாகும் மோதலும் வெறித்தனமும் மனித சமூகத்தில் அறவே களையப்பட வேண்டுமென்பது தான் கதைக்கரு. காஷ்மீரில் தீவிரவாதக் குழுவின் தாக்குதலால் பெற்றோர்கள் இறந்து அநாதையான குழந்தை ஜிப்ஸியை(ஜீவா)  ஒரு நாடோடி குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். வளர்ப்புத் தந்தையும் இறந்த பிறகு, குதிரையுடன் நாடோடியாக ஜிப்ஸி பாடகனாக நாடு முழுவதும் வலம் வருகிறார்.  அவருக்கும், தமிழ்நாட்டில் நாகூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்து பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அவர்களது வாழ்க்கைக்கு இடையூறாக எழுகின்ற மதவெறி அரசியலும்தான் கதையின் மைய இழை.  படம் பார்ப்பவர்களின் மனதை உலுக்குகிற அளவிற்கு மதக்கலவரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சூழலிலும் மனித நேயம் துளிர்ப்பதை இப்படம் எடுத்துக் காட்டுகிறது. 

ஜீவா, நடாஷா பட நாயகன், நாயகியாக தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்துள்ளார்கள். படத்தில் மற்ற பாத்திரங்களில் வருபவர்களையும் இயக்குநர் திறம்பட இயக்கியுள்ளார். இடை இடையே வரும் நகைச்சுவை காட்சிகள் இயல்பாக உள்ளன. மதம் கடந்து கோவில், மசூதி, தேவாலயம் என நாயகனும், நாயகியும் செல்லும் காட்சிகள் மதவழிபாடு இருந்தாலும், வேறுபாடு கூடாது என்பதை நன்றாக படம்பிடித்துக் காட்டுகிறார்கள். 2002-ல் குஜராத் மதவெறி வன்முறையின் போது ஒரு வன்முறையாளரின் வெறித்தனமும், வன்முறையால் அச்சத்தில் உறைந்த ஒருவர் தன்னை விட்டு விடுங்கள் என்று கோருவதும் போன்ற படங்கள் பிரபலமாகின. கலவரத்தின் பின் அவர்கள் என்ன ஆனார்கள், ஒரு கலவரம் ஏற்படுத்தும் பின் விளைவுகள் என்ன என்பதை எடுத்துக் காட்டுவதாக ஜிப்ஸி அமைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நாம் சந்திக்கும் சமகாலப்பிரச்சனைகள் மதவெறி, வன்முறை தாண்டவமாடுகிற போது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியதை செய்யாததையும், செய்யக்கூடாததை செய்வதும் நிழலாக படம் பார்ப்பவர்கள் மனதில் வந்து போகும். அந்த அளவிற்கு திரைக்கதை, வசனம் துல்லியமாக அமைந்துள்ளது.  

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அங்கே இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடப்பதாக கதையில் இல்லை. இடதுசாரிகள் வலுவாக செயல்படும் மண்ணில் மதவெறிக்கு எதிரான சிந்தனை எப்போதும் உயிர்ப்போடு இருக்கும் என்ற நம்பிக்கையை அந்த காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.  ராஜூ முருகன் இயக்கிய அனைத்து படங்களுமே மனிதத்தை பேசுகிறவைதான். அதில் இந்தப் படம் மகுடமாக அமைந்திருக்கிறது. நாடே போராட்டக் களமாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், மத நல்லிணக்கமும், மனித நேயமும் போற்றப்பட வேண்டிய மாண்புகள் என்பதை படம் உணர்த்துகிறது. எல்லா தளத்திலுள்ளவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் ஜிப்ஸி.   இந்த திரைப்படத்தின் காட்சிப்பதிவு ஏற்படுத்தும் பாதிப்பும், அதன் வசனங்களும், இசையும் ஏற்படுத்தும் தாக்கத்தை எழுத்தில் வடிக்க முடியாது. பார்த்தால் மட்டுமே உணர முடியும். நாடு முழுவதும் பயணித்து, பார்க்க இயலாத அரிய இயற்கை காட்சிகளை மிகச் சிறப்பாக காமிராவில் படம் பிடித்துள்ளனர். அப்படி எடுக்கப்பட்ட பகுதிகளை சென்சார் வெட்டாமல் இருந்திருந்தால் இன்னமும் வலுவான தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தியிருக்கும். சென்சார் செய்திருக்கும் அதீத தலையீடு கண்டிக்கத்தக்க ஒன்று. படத்தை தாயாரித்துள்ள ஒலிம்பியா திரைப்பட நிறுவனத்தின் அம்பேத்குமார் பாராட்டப்பட வேண்டியவர்.

விமர்சகர் : சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

;