tamilnadu

img

ஒளிமயமான போராட்டங்களும் அதன் பங்களிப்புகளும் நிறைந்த ஒரு நூற்றாண்டு - சீத்தாராம் யெச்சூரி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலிருந்து, கடந்த ஒரு நூற்றாண்டு காலம் என்பது, நவீன இந்தியாவின் வரலாற்றில் ஒளிவீசும் அத்தியாயமாக அமைந்திருக்கிறது. கடுமையான போராட்டங்கள் நிறைந்த ஒரு வரலாறாக, சுதந்திரப் போராட்டக் காலத்தில் எண்ணற்ற புரட்சியாளர்களின் மகத்தான தியாகங்கள் நிறைந்த ஒன்றாக, அதனைத் தொடர்ந்து மக்களின் பிரச்சனைகளை தேசிய நிகழ்ச்சி நிரலில் முன்னுக்குக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உடையதாக கடந்த ஒரு நூறாண்டு காலமும் இருந்திருக்கிறது. கட்சி உருவான காலத்திலிருந்தே, கம்யூனிஸ்ட்டுகள் தற்போதைய சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளை அறிவியல்பூர்வமான பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்து, மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும்  சுதந்திர இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடத்  தேவையான தீர்வுகளையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது இறுதியில் நம் அரசியல் சுதந்திரத்தை அனைத்து மக்களின் பொருளாதார விடுதலைக்கு இட்டுச்செல்வதற்கான திசைவழியில் சென்றிடும், அநேகமாக அது சோசலிசத்தின் கீழ்தான் சாத்தியமாகும்.

கட்சி உருவான காலத்திலிருந்து, கம்யூனிஸ்ட்டுகளின் வளமான பங்களிப்புகள், இந்நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் வரும் ஆண்டு முழுவதும்  ஆவணப்படுத்தப்பட இருக்கின்றன. எனவே, ஒருசில குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை மட்டும் உயர்த்திப்பிடித்திட என்னை நான் வரையறுத்துக்கொள்கிறேன்.

மூலவேர்கள் :-

முதல் உலகப் போருக்கு முன்பும் பின்புமான ஆண்டுகளில் இந்தியாவிலிருந்த மிதவாதத் தலைவர்கள் மற்றும் புரட்சிகரமான அணியினருக்கு  இடையே தேசிய இயக்கத்திற்குள் ஒரு போராட்டம் நடந்ததைப் பார்த்தோம். 1917இல் ரஷ்யப் புரட்சியின்  வெற்றியானது, உலகம் முழுதுமிருந்த புரட்சியாளர்களை ஈர்த்ததைப் போலவே,  இந்தியப் புரட்சியாளர்களையும் ஈர்த்தது. இதன்பின்னர் எண்ணற்ற இந்தியப் புரட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக மாற, இக்காரணிகள் உத்வேகம் அளித்தன.

இந்தியப் புரட்சியாளர்கள் சிலர் கடும் சிரமங்களுடனான பயணத்தை மேற்கொண்டு, உலகின் முதல் தொழிலாளர் வர்க்கப் புரட்சி நடந்த நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவ்வாறு சென்ற இந்தியப் புரட்சியாளர்கள் 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டார்கள். இது, முதன்முதலாக, நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கு எவ்விதமான தொடர்புமின்றி செயல்பட்டுவந்த புரட்சியாளர்களுக்கு மார்க்சிய-லெனினியம் தொடர்பாக ஒரு தத்துவார்த்த (theoretical) மற்றும் நடைமுறைக் கல்வியை (practical education) அளித்தது. பம்பாய், கல்கத்தா, சென்னை, உத்தரப்பிரதேசம்-பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த சிறிய கம்யூனிஸ்ட் குழுக்கள் அனைத்தும் 1925இல் கான்பூரில் நடைபெற்ற ஒரு கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டிற்குள்ளும் செயல்படத் துவங்கியது. எம்.என். ராய் மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளின் தலைவரான ரஜினி பாமி தத் போன்றவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வுமட்டதை உயர்த்துவதற்குத் தேவையான தத்துவார்த்த-சித்தாந்த (theoretical-ideological) போதனைகளை அளித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடனேயே அது, தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சிநிரலின் மீதும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 1921இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் அமர்வு நடந்தசமயத்தில், மௌலானா ஹஷ்ரத் மோஹானியும், ஸ்வாமி குமரானந்தாவும் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து முழுச் சுதந்திரம் கோரி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.  எனினும் இதனை காந்திஜி அப்போது ஏற்கவில்லை. அடுத்து, 1922இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கயாவில் நடைபெற்றபோது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திற்கான ‘குறிக்கோள்கள் அடங்கிய சாசனம்’ ஒன்றைச் சுற்றுக்கு விட்டது.

கடும் அடக்குமுறை :-

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனரீதியாக உருவானபின்னர் அது தங்கள் ஆட்சிக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதை, பிரிட்டிஷார் ஆரம்பத்திலேயே கண்டறிந்தார்கள். எனவே, அதனை நசுக்கிட எண்ணற்ற சதி வழக்குகள் மூலமாகக் கடும் அடக்குமுறையை ஏவினார்கள். இந்தியாவிலிருந்து சோவியத்யூனியன் சென்று திரும்பிய மொஹாஜிர்கள் எனும் புரட்சியாளர்கள் மீது, 1922 மே மாதத்தின் தொடக்கத்தில் மாஸ்கோ போவதற்காக முயற்சித்ததாக, ஐந்து பெஷாவர் சதி வழக்குகள் போடப்பட்டன.   பின்னர் 1923-24இல் கான்பூர் சதி வழக்கு போடப்பட்டது. இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்பிவந்த புரட்சியாளர்கள், அவர்கள் இந்தியாவிற்குள் திரும்பி வந்தவுடனேயே கைது செய்யப்பட்டார்கள். அதேபோன்று இங்கே நாட்டிற்குள்ளேயே இருந்த தலைவர்களும் கைது செய்யப்பட்டு, கடும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்கள்.

முன்னதாக, 1915இல், லாகூர் சதி வழக்கு,  கதார் கட்சியில் இயங்கிய புரட்சியாளர்களுக்கு எதிராகப் போடப்பட்டது. இவர்கள் தெற்காசிய நாடுகளிலிருந்து  இந்தியா திரும்பியவுடன் இவர்கள் மீது இவ்வாறு வழக்கு போடப்பட்டது.  இவ்வழக்கில் மொத்தம் 291 பேர் தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேருக்குத் தூக்கு தண்டனையும், 114 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 1929 மார்ச் 20இல் 31 புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு எதிராக மீரட் சதி வழக்கு புனையப்பட்ட சமயத்தில் மிகப்பெரிய அளவில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்தத் தலைவர்கள் எல்லாம் தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் பொதுவாழ்வில் பிரவேசித்தபின்னர்தான், 1934இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையம் அமைக்க முடிந்தது. அதன்பின்னர் இதுநாள்வரையிலும் அது முறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மூன்றுவிதமான கோட்பாடுகளுக்கு இடையேயான போராட்டம் :-

சுதந்திர இந்தியா எப்படி அமைந்திட வேண்டும் என்பது தொடர்பாக மூன்று விதமான கோட்பாடுகளுக்கு இடையே தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் போராடியவர்கள் மத்தியில், சுதந்திர இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும் என்பதாகும். கம்யூனிஸ்ட்டுகள் இதனுடன் ஒத்துப்போன அதே சமயத்தில், ஒருபடி மேலும் சென்று, சுதந்திர இந்தியா முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையைப் பின்பற்றுமானால்,  இத்தகைய மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பானது, ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்றார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட்டுகள், நாம் எய்திடும் அரசியல் சுதந்திரம் ஒவ்வொரு இந்தியனுக்கும் சமூக-பொருளாதார சுதந்திரத்தையும் விரிவுபடுத்திட வேண்டும் என்றும், அது சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியம் என்றும் கூறினார்கள்.

ஆனால் அவ்விரண்டுக்கும் எதிரான மூன்றாவது கோட்பாடும் இருந்தது. அது, சுதந்திர இந்தியாவில் உள்ள மக்களை மதத்தின் அடிப்படையில் தீர்மானித்திட வேண்டும் என்று கூறியது. இவ்வாறு மதத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும் என்று கூறியவர்களில் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு இஸ்லாம் மதத்தில் அமைந்த  நாடு தேவை என்றார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கியவர்கள் தங்களுக்கு ‘இந்து ராஷ்ட்ரம்’ தேவை என்றார்கள்.  துரதிர்ஷ்டவசமாக நாடு பிளவுண்டதன் காரணமாக,  முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய கோட்பாட்டின்படி அமைந்த முஸ்லீம் நாட்டைப் பெறுவதில் வெற்றி பெற்றார்கள்.  பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் எதிர்வருங்காலங்களில் இவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு நாட்டைத் துண்டாக்கினார்கள். அதன் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன.  ஆயினும், ஆர்எஸ்எஸ் சுதந்திரம் பெற்ற சமயத்தில் தங்கள் குறிக்கோளை எய்திட முடியவில்லை. எனினும் சுதந்திரத்திற்குப்பின் அமைந்த நவீன இந்தியாவை, தங்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.  இந்தியாவில் நடைபெற்ற சுதந்திர இயக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனையோட்டத்தையும் அரசியல் திட்டத்தையும் நிராகரித்தது. இதனால் ‘இந்து மதவெறியன்’ ஒருவன் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்திட்டான். மகாத்மா காந்தியின் படுகொலை, இந்திய விடுதலை இயக்கம் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டையும் அதன் அரசியல் திட்டத்தையும் நிராகரித்தது என்கிற உண்மையின் விளைவாக ஏற்பட்ட விரக்தியின் பிரதிபலிப்பேயாகும். இவ்வாறாக கடந்த நூறாண்டுகால இந்தியாவில் மூன்றுவிதமான கோட்பாடுகளுக்கு இடையேயான போராட்டமும், அரசியல் மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன என்பது தெளிவாகும்.

இடதுசாரிகளின் பங்கு :-

கம்யூனிஸ்ட் கட்சி, தான் நடத்திய பல்வேறு போராட்டங்களின் மூலமாக, முக்கியமான பிரச்சனைளை தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டுவந்து, இன்றைய இந்தியாவை வளர்த்தெடுத்ததில்  மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றி இருக்கிறது.

முதலாவதாக, நிலப் பிரச்சனை சம்பந்தமாக கம்யூனிஸ்ட்டுகளால் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. கேரளாவில் புன்னப்புரா வயலார், வங்கத்தில் தேபாகா இயக்கம் அஸ்ஸாமில் சுர்மா பள்ளத்தாக்குப் போராட்டம், மகாராஷ்ட்ராவில் வோர்லி முதலான போராட்டங்கள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, தெலங்கானாவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம். இவை அனைத்தும் நிலப்பிரச்சனை தொடர்பாக நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிற பிரச்சனையை முன்னுக்குக் கொண்டுவந்தன. இவற்றின் விளைவாக நாட்டிலிருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ நுகத்தடியிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்டார்கள். கிராமப்புறங்களில் சுரண்டப்பட்டுவந்த இம்மக்கள் விடுதலைப் போராட்டத்திற்குள்ளும் ஈர்க்கப்பட்டார்கள்.

இதற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் தலைமையோ கிராமப்புறங்களில் ஏழை மக்களைச் சுரண்டிக் கொழுத்திருந்த நிலச்சுவான்தார் வர்க்கத்தையும் தங்களுடன் அரவணைத்துக்கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இரண்டாவதாக, கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திர இந்தியாவில் மாநிலங்களை மொழிவாரி அடிப்படையில் மறுசீரமைப்பதற்கான போராட்டங்களிலும் முன்னணியில் நின்றது. இவ்வாறாக, இது இன்றைய இந்தியாவின் அரசியல் ‘வரைபடத்தினை’ உருவாக்குவதில் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தது. விசாலாந்திரா, ஐக்கிய கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகியவற்றுக்கான போராட்டங்கள், கம்யூனிஸ்ட் தலைவர்களால் தலைமை தாங்கப்பட்டன. இந்தியாவில் வாழ்ந்துவந்த மொழிவாரி தேசிய இனங்கள் பல, சமத்துவ அடிப்படையில், ஒருங்கிணைவதற்கான பாதையை வகுத்துத்தந்தது.    

மூன்றாவதாக,  மதச்சார்பின்மை குறித்து இடதுசாரிகளின் கொள்கை என்பது இந்தியாவின் எதார்த்த நிலையை அங்கீகரித்ததன் அடிப்படையில் அமைந்திருந்தது. உண்மையில், 1920களிலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடனேயே, கட்சியின் சார்பில் எம்.என்.ராய், 1920களில் மதக் கலவரங்கள் ஏற்பட்ட பின்னணியில், மத ரீதியான பிரிவினைக்கு மாற்று மருந்து என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகவும் போராடிய, அனைத்து சாதிகளையும், இனங்களையும் சேர்ந்த, உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையே என்று எழுதினார்.

இந்தியாவின் ஒற்றுமை என்பது அதன் வேற்றுமையில் காணப்படும் மகத்தான பொதுவான பண்புகளுடனான பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திட முடியுமேயொழிய, அனைத்து வேற்றுமைகளையும் ஒரே சீரானதாக மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் மூலமாக அல்ல. இப்போது மதவெறி சக்திகள் இதைத்தான் திணித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்தில் காணப்படும் வேற்றுமைகளின் பொதுப் பண்புகளை வலுப்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், இவர்கள் பின்பற்றிடும் மதவெறி நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச்சென்று அம்பலப் படுத்திட வேண்டியது அவசியமாகும்.

சுதந்தரம் பெற்றபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்ட சமயத்தில், மிகவும் பயங்கரமானமுறையில் மதவெறிக் கலவரங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை ஒரு பிரிக்கமுடியாத அடிப்படை மூலக்கூறாக மாறியது. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிப்பது என்பதேயாகும்.  இதன் பொருள் என்னவெனில், அரசு, தனிநபர் ஒருவருடைய, அவர் விரும்பும் மத நம்பிக்கையை எவ்விதத்தயக்கமுமின்றிப்  பாதுகாத்திடும் அதே சமயத்தில், அரசானது எந்த மதத்தையும் தனிப்பட்டமுறையில் தூக்கிப்பிடித்திடவும் கூடாது என்பதாகும். ஆனால், நாடு சுதந்திரம் பெற்றபின், ஆட்சியாளர்கள்  நடைமுறையில் பின்பற்றிய கொள்கை எப்படி இருந்தது என்றால், நம் நாட்டில் மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களும் சமம் என்று வரையறுக்கப்படுவது போல சுருங்கி விட்டது. உண்மையில், இதற்குள் இயல்பாகவே அடங்கியிருக்கும் அம்சம் என்னவெனில், அரசானது, பெரும்பான்மையோரின் மத நம்பிக்கையின் பக்கம் சாய்ந்திருப்பது என்பதேயாகும்.   இத்தகைய நிலைதான் இன்றையதினம் மதவெறி மற்றும் அடிப்படைவாத சக்திகளுக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது.

ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சியும், வர்க்கப் போராட்டங்களும் :-

காலனி ஆதிக்க நாடுகளிலேயே நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இந்திய முதலாளித்துவம், நாடு சுதந்திரம் பெற்றபின், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையையே பின்பற்றிட ஆர்வத்துடன் இருந்தது.  இதற்காக அது, ஆளும் வர்க்கங்களின் பங்கினை நாட்டில் செய்திட வேண்டும் என்பதற்காக, நாட்டிலிருந்த நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்திடமிருந்து அதிகாரத்தை மாற்றி வாங்கிக்கொள்வதற்கான பேரத்தில் இறங்கியது.  இவ்வாறு, அவர்கள் இருந்த காரணத்தால்தான், சுதந்திரப் போராட்ட இயக்கம் இந்தியாவை ஏகாதிபத்தியத்திடமிருந்தும், நிலப்பிரபுத்துவத்திடமிருந்தும் முற்றிலுமாக விடுதலை செய்திடும் பணியை நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டது. எனவேதான், கம்யூனிஸ்ட் கட்சி, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஏகபோக மூலதன எதிர்ப்பு என்னும் மூன்று பணிகளையும் முழுமையாக நிறைவேற்றுவதுதான்  இந்தியப் புரட்சியின் ஜனநாயகக் கட்டம் என்று வரையறுத்துள்ளது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால், நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அக்கறை  கொண்டுள்ள நலம் விரும்பிகள் பலர், ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதாவது, 1920இல் அமைக்கப்பட்ட கட்சியால் தன்னுடைய குறிக்கோளான சோஷலிசத்தை ஏன் இன்னும் எய்திட முடியவில்லை என்பதாகும்.  சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள அதே சமயத்தில், அதே காலகட்டத்தில் உருவான, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் எய்த முடியாமற்போனதற்கான காரணம் என்ன? இதற்கு இங்கேயிருந்த கம்யூனிஸ்ட்டுகளிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைவு, தியாகங்கள் குறைவு என்பது பதில் அல்ல. இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் மாபெரும் அளவில் வர்க்கப் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்காகவும், சுரண்டும் வர்க்கங்களிடமிருந்து தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாயிகளையும், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரையும் பாதுகாப்பதற்காகவும் அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் மிகச்சிறந்த பாரம்பர்யங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்.

மார்க்சியம்-லெனினியம் ஓர் ஆக்கபூர்வமான அறிவியல். அதன் உயிரோட்டமான சாராம்சம் என்பது ‘துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வாகும்.’ ‘நிலைமைகள்’ முறையாக மதிப்பிடாத சமயத்தில், அல்லது ‘ஆய்வுகள்’ மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துப்போகவில்லை எனில், தவறுகள் ஏற்படும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் முக்கிய பங்கினைச் செலுத்தியுள்ள அதே சமயத்தில், இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை, சீனா, வியட்நாம் அல்லது வட கொரியாவில் நடந்ததைப்போல, இங்கே கம்யூனிஸ்ட்டுகளால் பெற முடியவில்லை.   

இந்திய ஆளும் வர்க்கங்களின் வர்க்கக் குணம், இந்தியப் புரட்சி மேற்கொள்ள வேண்டிய பாதை போன்ற துல்லியமான நிலைமைகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன.  இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகள் ஏற்படுவதற்கு இவை இட்டுச் சென்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஆளும் வர்க்கங்களின் குணம் குறித்து சரியான ஆய்வினை மேற்கொண்டதன் காரணமாக வர்க்கப் போராட்டங்களின் போது, நாட்டு மக்களில் பெரும் பகுதியினரை அணிதிரட்ட முடிந்தது. இவ்வாறு அது, சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் சக்தியாக உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை, நாடாளுமன்றத்திற்கு வெளியேயான போராட்டங்களுடன் இணைத்ததன் மூலமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் வளர்ச்சிப் போக்குகளில் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தவும், பல மாநிலங்களில் அரசாங்கங்களையும் அமைக்கவும் முடிந்திருக்கிறது. 1957இல் கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைந்தது. பின்னர் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கங்களும், அதன்பின்னர் சில காலம் கழித்து திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கமும் அமைந்தன. நாடாளுமன்றத்தில் இதனுடைய பங்களிப்புகளுடன் மாநிலங்களில் இதன் தலைமையின் கீழ் அமைந்த அரசாங்கங்களும் நவீன இந்திய அரசியலின் பரிணாமவளர்ச்சியில் கணிசமான பங்களிப்பினைச் செலுத்தி இருக்கிறது. 

எனினும், கடந்த பத்தாண்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற செல்வாக்கு கணிசமானஅளவிற்குக் குறைந்துவிட்டது. வலதுசாரிகள், தங்கள் அரசியல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சமரசம் செய்ய முடியாத  அளவிற்கு மிகவும் எதிராக இருப்பதாகக் கருதி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகக் குறிவைத்து, தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். இதனை இவர்கள் நேரடியாகவே தாக்குதல் தொடுப்பதன் மூலமாகவும், அடக்குமுறை மூலமாகவும், வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியல் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும் செய்து வருகிறார்கள். வங்கத்தில் இதனைச் செய்தார்கள். பின்னர் திரிபுராவில் செய்தார்கள். இப்போது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும் இதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

எனினும், இதே காலகட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சுரண்டப்படும் வர்க்கங்களின் போராட்டங்களை மேற்கொள்வதில், பிரதானமாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை நடத்துவதில் பிரதான சக்தியாக இருந்திருக்கிறது. இத்தகைய போராட்டங்களின் விளைவாகத்தான், பல பிரச்சனைகள் தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வரப்பட்டன, கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எவரும், பொது மக்களின் கோரிக்கை சாசனத்திலிருந்து, அவ்வளவு எளிதாக  அழித்துவிட முடியாது.  

இன்று நம்முன் உள்ள சவால்கள் :-

‘தேசம்’ என்ற பெயரிலும், ‘தேசப்பற்று’ என்ற பெயரிலும் ஜனநாயக உரிமைகளைக்கூட இழப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கோருகிற ஓர், ‘இந்துத்துவா மதவெறி தேசிய சிந்தனை’யை வெறித்தனமாகப் பரப்பிக்கொண்டிருக்கிற கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. சமீபத்தில், தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட சமயத்தில், உள்துறை அமைச்சர், ‘இந்தத் திருத்தங்களை எதிர்ப்போர் எல்லாம் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்கள்,’ என்று கத்தியதைப் பார்த்தோம்.  இந்தத் திருத்தங்கள்,  அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளையும் கடுமையாகப் பறித்துக்கொண்டிருக்கிற கொடூரமான திருத்தங்களாகும். பாஜக அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எவ்வடிவிலாவது எதிர்ப்பினை மேற்கொண்டால், அவர்களை ‘தேச விரோதிகள்’ என முத்திரைகுத்தி, கைது செய்து, காவல் அடைப்பில் அடைத்து வைக்க முடியும். இவ்வாறு இந்தத் திருத்தங்கள், இந்த அரசை ஒரு “போலீஸ் அரசாக” (“Police State”) மாற்றியிருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தையே ஒழித்துக்கட்டியிருப்பது, ஒட்டுமொத்த மாநில மக்களையும் சிறைப்படுத்தி வைத்திருப்பது, அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் மூலமாக ஏற்பட்டுள்ள இடர்ப்பாட்டு நிலைமை, அத்தகைய நிலைமைகளை நாடு முழுதும் விரிவாக்கிடுவோம் என்று மிரட்டல்கள், முஸ்லீம்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மத அடிப்படையில் நாட்டின் குடியுரிமையை வரையறுத்திடக்கூடிய விதத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவருவதற்கான முயற்சி – இவை அனைத்தும் நாட்டின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்புச்சட்டத்திற்கே ஆபத்தினைக் கொண்டுவந்திருக்கிறது.

வலதுசாரி அரசியல் ஒருமுகப்பட்டிருப்பதற்கு எதிரான சவாலை, இடதுசாரி அரசியல் சக்திகள் ஒன்றுபடுவதன் மூலமாக அளித்திட வேண்டியது அவசியம்.

வலதுசாரிகளின் சவாலை எதிர்கொண்டிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டைக் கொண்டாடுவது என்பது நமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும்  அளிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய குறைபாடுகளைக் களைந்து முன்னேறுவதற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும் உதவிடும். நாம் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும், சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் முன்னேறுவதற்கும் இது அவசியமாகும்.

மௌலானா ஹஸ்ரத் மோஹானியால் உருவாக்கப்பட்டு, பகத்சிங் மூலமாக அழியாப் புகழ் பெற்ற, ‘இன்குலாம் ஜிந்தாபாத்’ என்னும் முழக்கம் தற்போது நம்மீது ஏவப்பட்டிருக்கும் வகுப்புவாத தேசிய வெறிக்கு எதிராக நமக்கு எழுச்சியூட்டக்கூடிய அறைகூவலாகும். எல்லோருக்குமான இந்தியா (Inclusive India) வெற்றிவாகை சூடும். மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான போராட்டங்கள் மற்றும் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான போராட்டங்கள் வலுப்படும்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          (தமிழில்: ச.வீரமணி)

 

 

;