tamilnadu

img

அதிகாரிகள் அலட்சியத்தால் மரம் விழுந்து ஓட்டு வீடு சேதம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர் ஆக.29- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம் கருப்பூர் மெயின் ரோட்டில் ஓட்டு வீட்டில் குடியிருந்து வருபவர் குணசேகரன்(60), உணவகத் தொழிலாளி. இவரது வீட்டில் மனைவி வாசுகி(55). சமையல் செய்து கொண்டிருந்தார். மகனும், மருமகளும் வேலைக்காக வெளியில் சென்றிருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை சுமார் 11 மணி வீட்டின் அருகே உள்ள தென்னை மரம் சாய்ந்து, ஓட்டு வீட்டில் விழுந்தது. இதையடுத்து வாசுகி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதில் எவருக்கும் காயம் இல்லை. மரம் சாய்ந்து விழுந்ததில் வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டின் ஓடு உள்ளிட்ட ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.  இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் குணசேகரன் கூறுகையில், "தென்னை மரம் ஆபத்தான நிலையில் வீட்டில் சாயும் நிலையில் இருப்பதால், பஞ்சாயத்துக்கு சொந்தமான மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் கண்டு கொள்ளப்படவில்லை" என்றார்.  மரம் சாய்ந்து பாதிக்கப்பட்ட வீட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியினர் பார்வையிட்டு, குணசேகரனிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட குணசேகரன் தனது வீட்டை புதுப்பித்து கட்ட, அரசு உரிய இழப்பீடு- நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;