tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி.... ஒலிம்பிக் போட்டி ரத்து?

டோக்கியோ: 
கொரோனா வைரஸ் தொற்றை 2021-க்குள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு  ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தது. இந்நிகழ்விற்காக ஜப்பான் பல ஆயிரம் கோடி செலவிட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவிய தொடங்கிய மார்ச் மாதத்தில், சர்வதேச விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களும் தந்த அழுத்தம் காரணமாக ஓராண்டுக்கு போட்டியை தள்ளி வைத்தது.  போட்டிகள் 2021-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜப்பானின் நிக்கான் ஸ்போர்ட்ஸ் நாளிதழுக்கு டோக்கியோ- 2020 விளையாட்டுத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான யோஷிரோ மோரி செவ்வாயன்று அளித்துள்ள பேட்டியில், அடுத்தாண்டு தொற்றுநோய் அச்சுறுத்தலாக இருந்தால் 2022- வரை ஒலிம்பிக்கை தாமதப்படுத்தப் முடியுமா என்று கேட்டதற்கு "முடியாது" என திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில்,  "முன்னதாக போர்க் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகியுள்ளன. தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கிறோம்" கொரோனா ஒழிந்துவிட்டால் அடுத்தாண்டு நாங்கள் நிம்மதியாக போட்டியை நடத்துவோம் என்றார்.

இது குறித்து டோக்கியோ 2020 செய்தித் தொடர்பாளர் மாசா தகாயா, விளையாட்டு ரத்து செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், மோரியின் கருத்துக்கள் "சொந்த எண்ணங்களை" அடிப்படையாகக் கொண்டவை என்றார்.

 ஜப்பான் மருத்துவர் சங்கத்தின் தலைவர் யோஷிதகே யோகோகுரா கூறுகையில், "தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் அடுத்தாண்டு விளையாட்டுகளை நடத்துவது "மிகவும் கடினம்" என்றார்.
கோபி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் துறை பேராசிரியர் கென்டாரோ இவாடா கூறுகையில், "அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமென நான் நினைக்கவில்லை" என்றார்.

ஜப்பான் அதிகாரிகளும், ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களும், தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் வெற்றி கொண்டதை அறிவிக்கும் வாய்ப்பாக அமையும் என்கின்றனர். ஆனால், ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டிருப்பது போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 

;